Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

லலித் மற்றும் குகன், நலன்புரி பணியக தலைமையகத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம்

கடந்த 12 ஆம் திகதி வரை தெமட்டகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் மற்றும் குகன் ஆகிய முன்னிலை சோசலிசக் கட்சியின் தமிழ் தலைவர்கள்இ இன்று (19) அதிகாலை 2.20 அளவில் அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மிகவும் நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் காவற்துறையின் நலன்புரி பணியக தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 12 ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.  இதனையடுத்து, அவர்கள் அன்றைய தினம் இரவே, அங்கிருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டனர். இது பற்றிய தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், மாற்று ஊடகங்கள் அந்த தகவலை வெளியிடவில்லை.

இந்த நிலையில், ஏஏ-சி026 என்ற இலக்கத்தை கொண்ட இரண்டு லேண்ட்ரோவர் வாகனத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் ஏற்றப்பட்டு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வாகனத்தின் கண்ணாடிகள் முற்றாக கறுப்பு நிறத்தில் டிண்டட் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் இருவரும் ஒரே இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்கள் தனித்தனியாகவே அங்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வாகனங்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு சென்ற போதுஇ தலைமையகத்தின் விளக்குகள் அனைத்து அணைக்கப்பட்டதுடன் அருகில் இருந்த பெட்டி கடையில் இருந்தவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இரண்டு வாகனங்களும் அங்கு சென்ற உடன் தலைமுதல் கால்கள் வரை போர்வையால் மூடப்பட்டிருந்த லலித் மற்றும் குகன் ஆகியோர் வாகனங்களில் ஏற்றப்பட்டனர். வழமையாக கடத்திச் செல்லப்படுவோரின் கண்கள் மாத்திரமே கட்டப்பட்டு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம் எனினும் இவர்களின் உடல் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவி;ல் உள்ள ஏனைய அதிகாரிகள் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களின் உடல் முழுவது மறைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் வாகனத்தில் ஏற்றப்பட்ட இருவரில் ஒருவர் கறுப்பு நிற காற்சட்டையை அணிந்திருததுடன் மற்றையவரின் கால்கள் மாத்திரமே தெரிந்தன.  இவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்றதாக தெரியவருகிறது.

லலித் மற்றும் குகன் ஆகியோர் காவற்துறையின் நலன்புரி பணியக தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என  காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன கடந்த 12 ஆம் திகதி தெரிவித்திருந்தார். பேச்சாளரின் இந்த மறுப்பு 12 திகதி பின்னிரவுக்கு பின்னர் செல்லுப்படியாகி இருக்கலாம். எனினும் அவர்கள் அங்குதான் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

எது எப்படி இருந்த போதிலும் லலித்தும் குகனும் இன்று அதிகாலை வரை உயிருடன் இருந்தனர் என்பதை நாம் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம். இதனால் இவர்கள் இருவரையும் விடுதலை செய்துக்கொள்ள தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரிடம் கோரிக்கை விடுகின்றோம்.