Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் விரோதிகளும், பிரபாகரன் என்ற பலியாடும்

பல ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதி அணுஅணுவாக ஆராய்ந்து, மக்கள் நலம் சார்ந்த பார்வையில், புலிகளின் அழிவை அரசியல் ரீதியாக எதிர்வு கூறியவர்கள், புலிகளின் அரசியல் பிரசாரத்துக்கு எதிராக அரசியலை முன்னெடுத்தோர் என பலர் இன்றும் தேசத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர் . அவர்கள் எவருமே பிரபாகரன் என்ற தனிமனிதனை எல்லா அழிவுக்கும், அரசியல் சீர்கேட்டுக்கும் தனியாளாக காரணம் என கூறியது கிடையாது.

 

பிரபாகரனின் தலைமையிலான புலிகள் இயக்க அழிவுக்கு மிக முக்கிய முதலாவது காரணம் அதன் வலது சாரிய மக்கள் விரோத பாசிச அரசியல் தான் என அன்றிலிருந்து இன்றுவரை அவர்களின் விமர்சனம் உள்ளது. ஆனால் புலிகளின் பாசிச, குறுந்தேசிய, மக்கள் விரோத அரசியலை இப்போது கூட விமர்சிக்காமல் அந்த அரசியலை தூக்கி பிடித்தபடி இலங்கை தமிழ் அரசியலிலும், ஊடகங்களிலும் வலம் வருகின்றனர் சில மக்கள் விரோத சக்திகள் .இவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் தான் யதீந்திரா என்ற இந்திய அடிவருடி . இவர் மே 18 அழிவை முன்னிட்டு எழுதிய கடுரையில் இவ்வாறு கூறிகிறார்:

"2002ல் பிரபாகரன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன், அவரது ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு அவர் செய்தது எல்லாம், அவரால் கட்டியெழுப்பப்பட்ட இயக்கத்தை அவரது காலத்திலேயே அழிப்பதற்கான ஏற்பாடுகள்தான். இன்று பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிவுற்று முன்று ஆண்டுகள் ஆகிவிட்டன...".சில வருடங்களுக்கு முன் புலிகளை விமர்சித்தவர்களுக்கு துரோகி பட்டங்களை வாரிவழங்கிய  இந்த வள்ளல், ஆட்டைக்க் கடித்து மாட்டை கடித்து இப்போ பிரபாகரனிலும் வாய் வைத்துள்ளார்.

இதே போன்று தான்   எரிக் சூல்ஹேம் என்ற தரகனின் முதல்  யாழ் மேல்சாதி கல்விமான்கள் வரை  பிரபாகரனில் அனைத்து பழியையும் போட்டு தமது அரசியல் தவறுகளை மூடி மறைகின்றனர் . இந்த மக்கள் விரோதிகளின் அரசியல் சுத்து மாத்துகளை மக்கள் இனியும் அம்பலமாக்காது விட்டால், புலிகளை எவ்வாறு உள்ளுக்குள் இருந்து இந்திய நலனுக்காக கருவறுத்து காட்டிக் கொடுத்தார்களோ, அதே போன்று மிகுதியாக உள்ள நம் தேச மக்களையும் ஏகாதிபத்திய நலனுக்காக பலி கொடுப்பார்கள் இந்த மக்கள் விரோதிகள் .

--கலியுகவரதன் 22/05/2012