Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

எமது நிலம் எமக்கு வேண்டும் திருமுறிகண்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்ப்பரிப்பு!


மனிக் பாம் இடைத் தங்கல் முகாமில் இருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு முறிகண்டி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்கள் உடனடியாக அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குச் செல்ல வேண்டும் என்று படையினரும் அதிகாரிகளும் அச்சுறுத்தும் வகையில் வற்புறுத்தியுள்ளனர்!.

எனினும் தமது சொந்தக் காணிகளிலேயே தங்களை மீள் குடியேற்ற வேண்டும் என்று திருமுறிகண்டியில் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்காக அங்கு அழைத்துச் செல்லப்பட்டு முறிகண்டி பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் கூறியுள்ளனர். !

மக்களின் வெகுஜனப் போராட்டம்

இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர்.

"நாம் கேட்பது எமது உரிமை அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்"

"எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே"

"போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது. இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?"

"சொந்த மண்ணில் அகதிகளாக நாம்"

"நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்து"

--அகிலன் (26/06/2012)