Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

திருமுறிகண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் NDMLP தோழர்கள்..

திட்டமிடப்பட்ட வகையில் வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்டு வரும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நிலப் பறிப்பையும் நில ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்தவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது. அதே போன்று நீண்டகாலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை எவ்வகையிலும் விட்டுக் கொடுக்க முடியாது.

இராணுவ விஸ்தரிப்புக்காகவும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பையும், நில ஆக்கிரமிப்பையும் தடுத்து நிறுத்த உள்ள ஒரே வழி மக்களைப் பரந்த அளவில் அணிதிரட்டி வெகுஜன எழுச்சியை முன்கொண்டு செல்வதாகும். அவ்வாறான ஐக்கியப்பட்ட மக்களது போராட்டங்களில் முஸ்லிம் மக்களையும் மலையக மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று சிங்கள மக்களுக்கு மேற்படி நிலப் பறிப்பிலும் ஆக்கிரமிப்பிலும் உள்ளடங்கியுள்ள அதிகாரத்தின் பேரிலான மக்களைப் பிரித்தாளும் சதி உள் நோக்கங்களை எடுத்து விளக்கி அவர்களின் ஆதரவையும் ஐக்கியத்தையும் பெறுவது அவசியம்.

இவ்வாறு திருமுருகண்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் 26.06.2012 அன்று காலையில் இடம்பெற்ற நிலப் பறிப்பு ஆக்கிரமிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் வட பிராந்தியச் செயலாளருமான கா. செல்வம் கதிர்காமநாதன் கூறினார்.

மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முருகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பெருமளவான மக்கள் இராணுவம் புலனாய்வுப் பிரிவினர் முன்கூட்டியே விடுத்த மிரட்டல் அச்சுறுத்தல்கரளையும் மீறி இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் சார்பில் அதன் அரசியல் குழு உறுப்பினரும் வட பிராந்தியச் செயலாளருமான கா. செல்வம் கதிர்காமநாதன் அரசியல் குழு உறுப்பினர் கா. தணிகாசலம் வடபிராந்தியக் குழு உறுப்பினர் ந. பிரதீபன் உட்பட அதிகளவு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி நிலப் பறிப்புக்கும் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் காணாமல் போனோர் பற்றிய பிரச்சினைக்குமாக நடாத்தப்பட்ட மேற்படி போராட்டத்தில் ‘நமது நிலத்தைப் பறிக்காதே’ ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’  ‘காணாமற் போனோருக்கு பதில் கூறு’ ‘நமது மன் நமக்கு வேண்டும்’ போன்ற முழக்கங்கள் அங்கு ஓங்கி ஒலித்தன. முடிவில் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் உரையாற்றினர். பெருந்தொகையான பொலீஸ் இராணுவம் குவிக்கப்பட்டதுடன் புலனாய்வுப் பிரிவினர் தமது வழமையான மக்களை அச்சுறுத்தக்கூடிய வேலைகளிலும் ஈடுபட்டனர்.
.