Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அடுத்தொரு அழிவிற்கு அலுவல்கள் நடக்குதோ?

ஈழத் தமிழருக்கு சம உரிமை கிடைக்காவிட்டால் புதிய வடிவில் இன மோதல் வெடிக்கும்: எரிக் சோல்ஹெய்ம் தெரிவிப்பு

 

"இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சனையே காரணமாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்குமாம்"!

இப்போ ஈழத்தமிழர் அக்கறையில் சோல்கெய்மிற்கு மாத்திரமல்ல நாடுகடந்த பலருக்கு மிக மிக அக்கறை. அதுவும் இன மோதல்களை வெடிக்கவைப்பதில். சிறுபான்மை இனங்களை பிளக்கவைக்கும் மகிந்தரின் பேரினவாத வெடிகள் போதாதென்று, புலன் பெயர்ந்ததுகளும் சர்வதேச ஆக்கிரமிப்பு வெடிகள் தயாரிக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்காக குத்தி முறியும் நாடு கடந்ததுகளில், யாருக்குத்தான் தமிழ் மக்களின் இன்றைய சரியான அரசியல் நிலவரங்கள் தெரியும்.  கருணாநிதி முதல் சீமான்வரை தங்கள் அரசியல் இருப்பில் இருந்துதானே வெறும் கோமாளித்தனமான, அருவருப்பான வெள்வெருட்டு "வெடி அரசியல்" செய்கின்றார்கள். இவர்களின் இவ் விசர் அரசியல், மகிந்தப் பேரினவாதத்திற்கு இசைவாக பெரும் தீனி போடுகின்றது. இப் "புலன்பெயர்ந்ததுகள்" இவ்விசைவிற்கான பிரதிபலிப்பை கண்டுகொள்வார்களா? அதற்கு ஏதாவது மாற்றீடு செய்வார்களா?

நாடு கடந்த அரசியலின் பிரதிபலிப்பு!

"பிரபாகரனுடன் போர் நடத்தியதனை விடவும் ஆபத்தான தருணம் உதயமாகியுள்ளது. வெட்கம் இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்".

"இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை பிளவடைவதனையே விரும்புகின்றன".

"பிரபாகரன் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவே நாம் ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்களை வழங்கினோம்"

தமிழ் மக்களிற்காக மாரடிப்பதாக காட்டும் குறுகிய இனவாத-உணர்வாளர்களின் கோமாளி அரசியலின் தார்ப்பரியத்தை, அமரதாசா, விமல் வீரவன்ச போன்ற பேரிவனவாத கோமாளிகள் எப்படி புலி அரசியலாக மாற்றுகின்றார்கள். இதில் ஏற்கனவே "புலியாக" விபரிக்கப்பட்ட எரிக் சோல்கெய்ம் அவர்களும் தமிழ் மக்களுக்காக பரிந்து அழுகின்றார் என்றால், இதை எப்படி பேரினவாத இனவெறியாளர்கள் கையாள்வார்கள்?

"நான் கடந்த 2000-ஆண்டு இலங்கையில் சுற்றுப்யணம் மேற்கொண்டபோது சிங்கள பயங்கரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சித்தனர்"  நோர்வே தூதரகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் வெடிகுண்டை வீசினர் என்கின்ற பொழுது, இதுவெல்லாம் தங்களின் கடந்தகால புலி விளையாட்டிற்கு கிடைத்த முடிவல்லவா.

அண்மையில் ஓர் தமிழக பத்திரிகையாளர் கருணாநிதிக்கு ஓர் நல்ல ஆலோசனை சொன்னார்: "நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் பேருதவி  "டெசாவல்ல, எதுபற்றியும் பேசாவல்ல'ராக இருங்கள். அதுவே போதும் என்றார். இதை கருணாநிதி மட்டுமல்ல, நாடு கடந்து அர்த்தமற்று செயலாற்றும் சகலருக்கும் சமர்ப்பணமாக்குகின்றோம்.

-அகிலன் (29/07/2012)