Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

சபரகமுவ மாகாண சபை தேர்தல் - 2012: உங்கள் சிந்தனைக்கு

சபரகமுவ மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி நடைபெற உள்ளது. சட்ட ரீதியாக 2013ம் ஆண்டிலேயே மாகாண சபை தேர்தல் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில் வழமை போல் இம்முறையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடத்துகிறது.

வாழ்க்கை செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தாது தேர்தலுக்கான செலவுகளை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் இத் தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தேர்தல் செலவுகள் யாவும் மீண்டும் மக்கள் மீதே வரிகளாக சுமத்தப்படவுள்ளன. இத் தேர்தலை வெற்றிக் கொள்வதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமானது தேர்தல் சட்டத்தை மீறி, அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தும் தற்காலிக சலுகைகளை வழங்கியும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கை எடுத்துவருகிறது.

சபரகமுவ மாகாணத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் வாழ்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அடிப்படை அரசியல், பொருளாதார, கல்வி, கலாசாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே பெற்றிருந்த தமிழ் பிரதிநிதித்துவத்தை கடந்த 2008 தேர்தலில் இழந்து விட்ட நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த பிரதிநிதித்துவ இழப்பே காரணம் என ஊடகங்களில் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆக, மாகாண சபையில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது நமது அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வாகவே காட்டப்படுகிறது. இத்தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தை வழங்க மறுத்து நிற்கும் சக்திகள் சார்பில் வெவ்வேறு சின்னங்களில் தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தோட்டத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அந்த மக்களின் கைகளிலேயே உள்ளது. அதாவது மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதன் ஊடாகவே தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும். எனவே மக்கள் பின்வரும் கோரிக்கைகளை வென்றெடுக்க அணித்திரள்வது அவசியம் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியாகிய நாம் கருதுகின்றோம்.    

   !. மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாழ்க்கைச் செலவு புள்ளிக்கேற்ப தோட்ட தொழிலாளர்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் சம்பளத்தைப் வழங்குதல்


   2. தோட்டங்களை உள்ளுராட்சி மன்ற, மாகாணசபை நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்ளடக்குதல்


   3.  பெருந்தோட்ட காணிகளை திட்டமிட்ட பெரும்பான்மை குடியேற்றங்களுக்கும் சிறு தேயிலைத் தோட்ட உறிமையாளர்களுக்கும் வழங்குவதை தடுத்து கூட்டுறவு முறையில் நிர்வகித்தல்


   4. தொழிலாளர்களுக்கு அவர்களது குடியிருப்பை காணி உரிமையுடன் சொந்தமாக்குதல்


   5. இனங்களுக்கிடையில் பகைமையை வளர்க்காது சபரகமுவ மாகணத்தில் வாழும் அனைத்து இன மக்களினதும் தனித்துவத்தை பாதுகாத்தல்


   6.  மக்களின் கலை கலாசார பண்புகளை விருத்;தி செய்யும் நோக்குடன் மக்களை மையப்படுத்திய நிகழ்ச்சிகளை மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக நடாத்துதல்


   7. முடங்கி போயுள்ள மாகாண தமிழ் கல்வி நிர்வாகப் பிரிவை அரசியல் தலையீடற்ற வகையில் தாபித்தல்


  8. தொடர்ச்சியாக வீழ்ச்சிக் கண்டுவரும் கல்வி நிலையை சீர்செய்ய ஊழல்களுக்கு எதிராக முறையான விசாரணைகள் மூலம் உரிய நடவடிக்கைளை எடுத்து வெற்றிடங்களுக்கு தகுதியான, சமூக அக்கறை மிக்கவர்களை நியமித்தல் 

 
  9. ஓவ்வொரு தோட்டங்களிலும் முன்பள்ளிகள், நூலகங்கள், கலாசார மண்டபங்கள் மைதானங்களை அமைத்து அது தொடர்ச்சியாகவும் முறையாகவும் இயங்க நடவடிக்கை எடுத்தல்

தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க மக்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க தாயராக இருக்க வேண்டும். தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும் தெரிவு செய்யப்படாவிட்டாலும் மக்களை அணிதிரட்டி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வென்றெடுக்க புதிய ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சியாகிய நாம் தயாராக உள்ளளோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.  

நன்றி

புதிய ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சி

(இரத்தினபுரி, கேகாலை கிளைகள்)