Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாப்பா பாப்பா கதை கேளு, ஹக்கீம் காங்கிரஸ் கதை கேளு!

கிழக்கில் ஹக்கீம் சுட்டவடை, மக்களை மடையர்களாக்கிய ஒட்டை  வடை!

நடைபெற்ற கிழக்கின் மகாணசபைத் தேர்தலில்,  ஹக்கீம் காங்கிரஸின் (முஸ்லிம்-காங்கிரஸ் என சொல்ல முடியல்லே) நிலையானது,  பஞ்சதந்திரக் கதைகள் படித்தது போல் உள்ளது. மாகாணசபைகள் கலைக்கப்படும்வரையும், ஏன் அதன் பின்பான சிலகாலங்களும் ஹக்கீமின் நிலை மௌன அரசியல் நோன்பாகத்தான் இருந்தது.

 

தேர்தல் பற்றி முஸ்லிம் முதலமைச்சர் பற்றிக் கேட்டால், வேண்டா வெறுப்பாக சீச்..சீ.. இநதப் பழம் புளிக்கிறது எனும் பாங்கிலதான் பதில் சொலவார் பத்திரிகையாளர்களுக்கு. தேர்தல் சூடு பிடித்தவுடன் கிழக்கிற்கு முதலமைச்சர் ஓர் முஸ்லீமே வரவேண்டுமென்ற கோசத்துடன் வலுவேகமாக வந்து இறங்கினார். எதிர்த்து வெளுத்து வாங்கினார் "கூட்டாளியின் அரசை"

கடந்த ஒரு மாதத்திற்கு மேலான கிழக்கின் தேர்தல் களத்தில் இவரைப்போல், அரசிற்கு எதிராக பேசிய மாற்றுக்கட்சியினர்கள் இல்லையென்றே சொல்லலாம். இவரின் கர்னகடுரம் கண்டு, சமபந்தனே இவரை கிழக்குமாகாண சபையின் சமபந்தியாக்க முடிவு செய்தார். மக்களும் உசுப்பேத்தப்பட்ட நிலையில் தங்களுக்குள் தாங்களே முட்டி-மோதி-அடிபட்டனர். இவரைப்பற்றி மகிந்தருக்கே புகார்கள் சென்றன. இதனால் தேர்தலின் பின் இவருடன் எக்கூட்டும் இல்லையென்றார் (கடும் கடுப்புடன்) பசில் ராஜபக்ச!

ஆனால் இனறு மகிந்தரும்-ஹக்கீமரும் என்றும் போல் இனிய நண்பாகள். மக்களை ஆணையிட்டு அடக்கும் அரச அதிகார பீடத்தின் மந்திரி பிரதானிகள். ஆனால் தேர்தலுக்காக தங்களுக்குள் அடிபட்ட மக்களில் பெருமபாலானோர்கள் சொந்தபந்த உறவுகள்! பலருக்கு அக்கம் பக்க வீட்டாருடன் கதைக்கும் நிலை இன்னும் ஏற்படவேயில்லை! பரம் எதிரிகள் ஆக்கப்பட்ட இம்மக்களில் தேர்தல்கால தாக்குதல்களில் காயமானானோர் வைத்தியசாலைகளில் இருந்து இன்னும் வீடுகளுக்கு வரவேயில்லை. சரி அதுதான் போகட்டும் இம்மக்களை எதிரிகளாக்கி, இம்மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியான முஸ்லீம் முதலமைச்சர் பதவி என்னாச்சு?

அரசுடன் சேர்ந்து ஆட்சியமைப்பு! முதலமைச்சரை ஜனாதிபதி அறிவிப்பார்?.....

"கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் முதலமைச்சர் யார் என்பது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார்"!  ஏன் இந்த நிலை ஹக்கீம் காங்கிரஸிற்கு? நடந்து முடிந்த தேர்தல் (வெற்றி) நிலவரத்தின்படி, சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து, அரசின் அரவணைப்பின்றிய ஓர் அரசை அமைக்க முடியும். அதில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரமுடியும். இதை கிழக்கில் வென்ற ஏனைய கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன? ஏன் பிள்ளையானே (முஸ்லிம்-முதலமைச்சர்) இம்முடிவை வரவேற்பதாக சொல்லியுள்ளாரே?..

இங்கேதான எம்முன்னுள்ள கேள்வி? தேர்தல், பாராளுமன்றம், அதன் இன்னோரன்ன வாக்குச்சீட்டு வாங்கும் வகையறாக்கள் எல்லாம் மக்களுக்கானவையா?


இல்லையென்பதே எம்பதில்! வாக்குகள் வாங்கும்வரை மக்களுக்கானவை! அதன்பின் அதன் பலன் மக்களை அடக்கி-ஒடுக்குபவர்களுக்கே!

ஏதோ முஸ்லிம் மக்களின் "அபிலாசையாக்கப்பட்ட முஸ்லிம் முதலமைச்சர்" பதவி, இன்று ஜனாதிபதியின் காலடியில் உள்ளது.  கடந்த ஒரு மாதகாலம் இம் முதலமைச்சர் பதவியை (ஹக்கீம் காங்கிரஸ்) மக்களுக்கானதான அபிலாசையாகக் காட்டிற்று! இன்று அதன் வர்க்கநிலை மக்களுக்கு எதிராக அடக்கி-ஒடுக்கலுக்கான இசைவாகியுள்ளது.