Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி, சஞ்சீவ பண்டார கைது செய்யப்பட்டமையைக் கண்டிக்கிறது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்களது போராட்டங்களையும் அச்சுறுத்தி அடக்கியொடுக்கும் முயற்சியேயாகும். இத்தகைய பொலீஸ் அடக்குமுறையினை ஏவியுள்ள அரசாங்கத்தின் பாசிசப் போக்கினை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்விச் சமூகமும் பொது மக்களும் கண்டுகொள்ள வேண்டும். அதேவேளை பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதியான சஞ்சீவ பண்டார கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றது.




இன்றைய நிலையில் நாட்டின் கல்வித் துறைக்கு மகிந்த சிந்தனை அரசாங்கம் நெருக்கடிகளையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி நிற்கின்றது.  அத்தோடு அது இலவசக் கல்விக்குச் சமாதி கட்டித் தனியார்மயக் கல்வியை முழு அளவில் நிலைநாட்டப் பல்வேறு முயற்சிகளில் திட்டமிட்ட வகையில் செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக பல்கலைக்கழகக் கல்வியும் அதன் எதிர்காலமும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி உரிமைக்காகவும் எதிர்கால சந்ததியின் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதேபோன்றே பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் கடந்த இரண்டரை மாதங்களாக நாட்டின் நிகர உற்பத்தியில் 6 வீதத்தைக் கல்வித் துறைக்கு ஒதுக்குவது, சம்பள உயர்வு மற்றும் கல்வித் துறையில் புகுத்தப்படும் அரசியல் இராணுவ தலையீட்டுடனான நாசங்களை எதிர்த்தும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாது அவர்களை மிரட்டி  அடிப்பணிய வைக்க மகிந்த சிந்தனை அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. எனவே பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களது நியாயமான போராட்டங்களை ஏனைய இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எமது கட்சி ஆதரித்து நிற்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் சகல வகை அடக்கு முறைகளையும் எதிர்த்து நிற்பதுடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முறையே காலி, கண்டி நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கிய இரண்டு பேரணிகளுக்கும் எமது கட்சி ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றது.

–புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி-