Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் போராட்ட தந்திரமும் - செயல் தந்திரமும்

இன்றைய இலங்கை நிலைமைகள் தொடர்பான - அரசியல் ரீதியான மதிப்பீடுகளையும், வழிகாட்டுதலையும் கொண்டது. உடனடிக் கடமைகள் மற்றும் நீண்டகால அரசியற் கடமைகளை அடிப்படையாகக் கொண்ட, போராட்டக் கோசங்கள் மற்றும் அரசியல் ரீதியான செயல் தந்திரங்களை இது வகுதளிக்கின்றது.
 
இலங்கையின் ஆளும் வர்க்கங்களை  இனம் கண்டு கொள்வதும், போராடுவதும்
 
இலங்கை அரசு, நவகாலனிய தரகு முதலாளித்துவ வர்க்க நலன் பேணும் வர்க்க சர்வாதிகார அரசாகும். இந்த வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், அன்னிய மூலதனத்தின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றது. இந்த வகையில் இது தேசவிரோத அரசாகும்.

* இலங்கைத் தேசத்துக்கு எதிரான, தேசியத்துக்கு எதிரான அனைத்து அன்னிய நலன் பேணும் முயற்சிகளுக்கும், அன்னிய தலையீடுகளுக்கும் எதிராகப் போராட வேண்டும்.


* தேசத்தையும், தேசியத்தை அழிக்கும் உலகமயமாதல் ஒப்பந்தம் முதல் அனைத்து தேசவிரோத -சர்வதேச ஒப்பந்தங்களுக்கும் எதிராகப் போராட வேண்டும்.


* அன்னிய மூலதனங்கள் நட்டஈடின்றி தேசிய மயமாக்கப்படப் போராட வேண்டும்.


* அன்னிய நிதி மூலதனங்கள் அனைத்தும் தேச உடமையாக்கப்படப் போராட வேண்டும்.


* அன்னிய நிதி மூலதனத்தைத் தொடர்ந்து வாங்குவதற்கு எதிராகப் போராட வேண்டும்.


* அன்னிய நிதி மூலதனத்தை மீளக்கொடுப்பதற்கும், அதற்கு வட்டி கொடுப்பதற்கும் எதிராகப் போராட வேண்டும்.

* அன்னிய நிதிமூலதனத்தை மீளக்கொடுப்பதற்கும், அதற்கு வட்டி கொடுப்பதற்கும் அமைவான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.


* நிதி மூலதனம் மூலம் வட்டியை அறவிடும் நோக்கில், அபிவிருத்தியின் பெயரிலான அன்னிய நிதி மூலதனங்களை எதிர்த்துப் போராட வேண்டும்.


* அன்னிய நிதி மூலதனத்தையும், அதன் உற்பத்தி மூலதனத்தைப் பாதுகாக்கவும், அதனை விரிவாக்க முயலும் உலகவங்கி முதல் உலகமயமாதல் திட்டங்கள்வரை, அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


* உள்நாட்டு உற்பத்திக்குப் பதிலான உலகமயமாதல் உற்பத்தியை, எதிர்த்துப் போராட வேண்டும்.


* தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கும் தடை விதிக்கப் போராட வேண்டும்.


* தேசியத்துக்கு எதிரான அனைத்து தரகு வர்த்தகத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

*ஏகாதிபத்திய, பிராந்திய முரண்பாட்டுக்குள் நாட்டை அடிமைப்படுத்துவதை, இராணுவ மயமாக்குவதை எதிர்த்துப் போராட வேண்டும்.


*பிராந்திய நாடுகளின் முரண்பாட்டுக்குள் நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் அழிப்பதை எதிர்த்துப் போராட வேண்டும்.


* நாட்டில் உள்ளான அன்னிய சமூக நலத்திட்டங்கள், அன்னிய தன்னார்வ சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் எதிர்க்கப்பட்டு, இவற்குத் தடைவிதிக்கப் போராடுவதுடன், மாறாக தேசிய சமூக நலத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டும்.
 
ஆளும் வர்க்கங்கள் தம்மை மூடிமறைக்கப் பயன்படுத்தும் சமூக வடிவங்களை அடையாளம் காண்பதும் - போராடுவதும்
 
இலங்கையின் ஆளும் வர்க்கங்களும், அதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரசும், அதன் அரச இயந்திரமும், பேரினவாத பௌத்த பாசிச வடிவங்கள் மூலம் நாட்டைச் சுரண்டுவதுடன், ஒடுக்கியும்  வருகின்றது. மக்களுக்குள் சமூக ரீதியான பிளவுவாதத்தை திணிப்பதன் மூலம், வர்க்கச் சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையை, முழு இலங்கைக்கும் ஏவுகின்றது. தேசிய ரீதியான அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் இப்படி ஒடுக்குவதன் மூலம் சுரண்டி வருகின்றனர். இதில்:
 
*சமூக முரண்பாடுகளை ஏற்படுத்தும் பேரினவாதத்தையும், பௌத்த அடிப்படை வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


* இது போன்ற, ஏனைய சிறுபான்மை இனங்களிள் இனவாதத்தையும்,  மத அடிப்படை வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


* இன ஐக்கியத்தைக் கோரிப் போராடுவதுடன், இதற்கு எதிரான அனைத்துவித பிளவுவாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்


* மத அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போhராடுவதுடன், மதசார்பற்ற நாட்டையும், மதத்தை தனிப்பட்ட மனிதனின் தெரிவுக்கு அப்பால், அதனை நிறுவனப்படுத்தும் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


* அனைத்து வகைப் பிரதேசரீதியான, சமூக ரீதியான முரண்பாடுகளை எதிர்த்துப் போராட வேண்டும்.


* பால் ரீதியான ஆணாதிக்க அமைப்பையும், அது சார்ந்த சமூக ஒடுக்குமுறை வடிவங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


* சாதி ரீதியான ஒடுக்குமுறையையும், அதன் ஏற்றத் தாழ்வான பண்பாட்டு - பொருளாதார - கலச்சார வடிவங்களையும், அது சார்ந்த மத சிந்தாந்தங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.


* கலாச்சார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, பொருளாதர ரீதியாக எஞ்சியுள்ள நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளை எதிர்த்துப் போராட வேண்டும்.


* இலங்கைத் தேசியத்தை, சுய தேசிய பொருளாதார அடிப்படையைகக் கொண்ட தேசியமாக முன்னிறுத்தி, இதுவல்லாத தேசியத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.


* எஞ்சியிருக்கும் ஏற்றத்தாழ்வான சமூக முரண்பாடுகளுக்கு எதிராகப் போராடவேண்டும்.
 
பிரதான முரண்பாடான இனமுரண்பாட்டையும், அதன் சமூக விளைவுகளையும் அடையாளம் காண்பதும் - போராடுவதும்
 
* இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை, சுயநிர்ணய அடிப்படையில் தீர்க்க வேண்டும். சுயநிர்ணயம் என்பது, பிரிந்து போவதையும் - ஐக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை, அனைத்து இனங்களும் பரஸ்பரம் அங்கீகரிக்கரிக்கப் போராடவேண்டும்.
 
* தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமையுடைய இனமாக அங்கிகரித்து, அதற்காக போராட வேண்டும்.


*சிறுபான்மைத் தேசிய இனங்களான, மலையக - முஸ்லீம் மக்கள் குறைந்தபட்சம் சுயாட்சி உரிமையுடைய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அதற்காக போராட வேண்டும்.


*இலங்கையில், சகல இனப்பிளவு நடவடிக்கையையும் எதிர்த்துப் போராடுவதுடன், அனைத்து இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை தேசியக் கடமையாக ஏற்றுப் போராடவேண்டும்.


* இன ஐக்கியத்தை முன்வைக்கும் ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் இனங்கண்டு, பரஸ்பரம் அவற்றை அங்கீகரித்து போராட வேண்டும். இங்கு ஜனநாயக கோரிக்கை என்பது, எந்த இனத்துக்கும் விசேட சலுகைகளை வழங்குவதை மறுக்கின்றது. இதில் முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு போராடவேண்டும்.


* சிறுபான்மை இனங்களின் ஜனநாயக பூர்வமான வளர்ச்சியை உறுதி செய்யும் வண்ணம், பரஸ்பரம் இணங்கி வாழும் ஆட்சியமைப்பைக் கோரிப் போராடவேண்டும்.


* மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கப்படுவதுடன், வரலாற்று ரீதியாக இதனை மறுத்த மனிதவிரோத குற்றத்தை இனங்காணும் வண்ணம் போராடவேண்டும்.


* சிறுபான்மை இனங்கள் மீதான, கடந்தகால - நிகழ்கால இனவாத ஒடுக்குமுறையை, தெளிவாக அடையாளம் கண்டு, அவற்றை விமர்சனத்துக்குள்ளாக்கி, அரசியல் ரீதியாக விழிப்பூட்டவேண்டும்.


*சிறுபான்மை - பெரும்பான்மை இன வேறுபாடு இன்றி, பரஸ்பரம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை வளர்க்கப் போராடவேண்டும்.


* இனம் சார்ந்த ஒடுக்குமுறையை, வெவ்வேறு சமூகப் பிரிவினர் எப்படிப் பாவித்து நடத்தினர் என்பதை, இனங் காணவேண்டும். சிறுபான்மை இனந் தொடங்கி, பெரும்பான்மை இனம் வரை, எந்த வகையில் இணைந்தும் - தனித்தும் இதைச் செய்தனர் என்பதை, தெளிவாக - அரசியல் ரீதியாக - முழுமையாக - விமர்சனத்துக்குள்ளாக்கி, அரசியல் ரீதியாக விழிப்பூட்ட வேண்டும்.


* பெரும்பான்மை இன மக்கள் மேல் நடாத்திய, குறுந்தேசிய இனவாதத் தாக்குதலை இனங்கண்டு, அதனை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.


* முஸ்லீம் இனம் மேலான தமிழ்க் குறிந்தேசிய இனவாதத் தாக்குதலை இனங்கண்டு, அதனை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.


* திட்டமிட்ட இன அழிப்புச் சார்ந்து உருவான குடியேற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, இணைந்து வாழும் மனிதக் கோட்பாட்டுக்கு அமைவாக, அவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.


* இனக் குடியேற்றங்களில் ஆயுதமேந்தியவர்கள், இனமுரண்பாட்டை ஏற்படுத்துபவர்கள், அவ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.


* இனக் குடியேற்றப் பகுதிகளில் வாழும் பெரும்பான்மை இன மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு, சிறுபான்மை இனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.


* சகல மக்களையும், அவர்களின் சொந்த வாழ்விடங்களில் வாழும் உரிமைக்காகப் போராட வேண்டும். மக்களை, தமது சொந்தப் பிரதேசத்தில் மீளக் குடியேற்றவேண்டும்.


* சகல இனவாதப் படைகளையும் கலைத்து, மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும்.


* சகல மக்கள் விரோத - இனவாதச் சட்டங்களை நீக்கப் போராட வேண்டும்.


* நாட்டுக்குத் திரும்பிவர விரும்பும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக புலம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்திய அகதிகள் விடையத்தில், விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.


* திட்டமிட்டு இனவாத அடிப்படையில் கொண்டு வந்த, இரட்டைப் பிரஜாவுரிமைப் பறிப்புச்சட்டத்தை இரத்து செய்து, இரட்டைப் பிரஜாவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது இலங்கை பிரஜாவுரிமையை வைத்திருக்கும் உரிமையை, நாடு கடந்து வாழ்பவர்களுக்கு மீண்டும் வழங்கப் போராட வேண்டும்.


* நாடு கடந்து வாழ்பவர்களை, கட்டாயப்படுத்தி நாடு கடத்துவதற்கு எதிராகப் போராட வேண்டும்.


* யுத்தத்தால் ஏற்பட்ட, பொருளாதார இழப்பு - கல்விச் சீரழிவுகளை மேம்படுத்தும் வகையில், அடிப்படை வசதிகளை வழங்கக்கோரிப் போராட வேண்டும்.


* குடும்பத்தின் உறுப்பினரை இழந்த நிலையில், ஆதரவற்று வாழ்கின்றவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு, அடிப்படையான வசதிகளை வழங்கக்கோரிப் போராட வேண்டும்.


* யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கு, விசேடமான - அடிப்படையான வாழ்வாதாரங்களை உறுதி செய்யக்கோரிப் போராட வேண்டும்.


* யுத்த மறுவாழ்வில் தமிழ் - சிங்களம் என்ற இனப் பாகுபாடுகள் மூலம், கையாளும் அனைத்து இனவாதக் கண்ணோட்டத்தையும் எதிர்த்துப் போரட வேண்டும்.


* மக்களைப் பிளக்கும் சகல, இனவாத - மதவாத - சாதிய - பிரதேசவாத கட்சிகளைத் தடை செய்யப் போராடவேண்டும்.


* கடந்தகால அரசியல் படுகொலைகள் யாவும், வரலாற்று ரீதியாக இனம் காணப்பட்டு, அவற்றை சமூக ஆதாரமாக்கிப் போராட வேண்டும்.


* கொல்லப்பட்ட மக்களுக்கு முழு நட்டஈடு கோரிப் போராட வேண்டும்.


*சொத்து இழப்புக்கான முழு நட்டஈடு கோரிப் போராட வேண்டும்.


* காயப்பட்டவர்களுக்கு முழு நட்டஈடு கோரிப் போராட வேண்டும்.


* மக்கள் மேல் குற்றங்கள் இழைக்காத, அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.


* அப்பாவி மக்களை கொன்று, காயப்படுத்திய குற்றவாளிகளை (அரசு - புலி) சட்டத்தின் முன் நிறுத்தப் போராட வேண்டும்.


* கைது செய்த கைதிகளை, கொலை செய்த குற்றவாளிகளை, (அரசு - புலி) போர்க் குற்றவாளிகளாக இனங்கண்டு அவர்களை தண்டிக்கக்கோரிப் போராட வேண்டும்.


* காணமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் குற்றவாளிகளான (அரசு - புலி) அனைவரையும் தண்டிக்கக் கோரி போராட வேண்டும்.


* மக்கள் மேல் குற்றமிழைத்த அனைவரையும் (அரசு - புலி) தண்டிக்கப் போராட வேண்டும்.


* அனைத்து யுத்தக் குற்றங்களும், விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.


* அனைத்துக் கூலிக் குழுக்களிடமிருந்தும், இராணுவக் கண்காணிப்பில் இருந்தும், மக்கள் சுதந்திரமான வாழ்வைக் கோரிப் போராட வேண்டும்.


* பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் அனுபவங்களையும் - அவலங்களையும் சுதந்திரமாக வெளியிடும்  உரிமைக்காகப் போராட வேண்டும்.


* நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, மத ரீதியான திணிப்புகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.


* மீன்பிடி முதல் அன்றாட பொருளாதாரம் வரை, இனரீதியான தலையீடுகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக போராட வேண்டும்.


* இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, அரசியல் - கல்வி - கலை - இலக்கியங்கள் - அமைப்பு வடிவங்கள் மற்றும் பண்பாட்டுக் கலாசாரக் கூறுகள் அனைத்தும், நீக்கப்பட - தடை செய்யக் கோரி போராட வேண்டும். இவை அனைத்தும் வரலாற்று ரீதியாக அடையாளம் காணப்படவேண்டும்.


* இனவாத இனப்பிளவை அடிப்படையாகக் கொண்ட, தரப்படுத்தல் முறையை எதிர்த்து, பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், அனுமதி கோரிப் போராடவேண்டும்.


* சிறிலங்கா என்ற இனவாதப் பெயருக்குப் பதில், மக்களின் வாழ்வியிலுடன் தொடர்புடையதான  நாட்டின் பெயர், கொடி என அனைத்தையும் மாற்றப் போராட வேண்டும்.


* சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொள்ளாத தீர்வுகளை எதிர்த்துப் போராடவேண்டும்.  இவை யாவும் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும், அவர்களின் தேவைகளுக்கும்  உட்பட்டவை. அவற்றை அம்பலப்படுத்திப் போராட வேண்டும்.


* மத்தியஸ்த்துவம் முதல் போர்க்குற்ற விசாரணைகள் என்ற போர்வையில் நடக்கும், அன்னிய நாட்டினரின் தலையீட்டை எதிர்த்துப் போராடவேண்டும்.

* மக்களின் அடிப்படைத் தேவையும், அவர்களின் வாழ்க்கையுமே ஒரு தேசத்தின் - தேசியத்தின் அடிப்படையான விடையமாகக் கருதவேண்டும். மக்களின் வாழ்வைப் பற்றி, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வையிட்டு அக்கறைப்படாத அனைத்தும், மக்களை சூறையாடுவதுதான். இதை இனம் காட்டிப் போராடவேண்டும்.


* இடைக்காலத் தீர்வு - படிப்படியான தீர்வு - உள்ளுர் விசாரணை எனக் காட்டும் எல்லா வகையான மோசடிகளும், மக்களுக்கு எதிரானதே. அதேபோல், ஒரேநாளில் தீர்வு என்பதும் மோசடியே. உழைக்கும் மக்கள் தமது பிரச்சினையைத் தாமாகவே தீர்க்கும் ஒரு வரலாற்றுப் பாதையில், பல படிகளைக் கடக்கும் போராட்டம் அவசியமானது. அது நிச்சயமாக பாட்டாளி வர்க்கத் தலைமையிலேதான் சாத்தியமானது. இதற்காக நாம் போராடவேண்டும்.


* பாட்டாளி வர்க்கம் அல்லாத எந்தத் தீர்வுகளும், எப்போதும் உழைக்கும் மக்கள் மேலான படிமுறை அடக்குமுறைதான். இது எப்போதும் தேசத்தையும் - தேசியத்தையும் - தேசியவளத்தையும் - இயற்கையையும் - உழைப்பையும் - உழைப்பின் வளத்தையும் - உழைப்புத் திறனையும் - பண்பாட்டையும் - கலாசாரத்தையும்.. என அழித்து, ஏகாதிபத்திய உலகமயமாதலுக்குச் சேவை செய்வதாகவே இருக்கும். இதற்கு எதிராகப் போராட வேண்டும்.


* சிறுபான்மை இனத்தின் மேலான இனவழிப்பும், அதன் சுமைகளும், சுமக்க முடியாத மனித அவலத்துடன் மேலும் தொடர்ந்து திணிக்கப்படுகின்றது. இதற்கு எதிராகப் போராடவேண்டும்.


* தமிழ் மக்கள், சிங்களப் பேரினவாத பாசிச அரசுக்கு எதிராகப் போராட வேண்டியவர்களாக உள்ளார்கள். இதற்கு வர்க்க ரீதியாக தலைமை தாங்கி, முன்னனெடுக்க வேண்டிய சமூக பொறுப்புடன் போராடவேண்டும்.


*மக்களது ஐக்கியத்தாலும், உறுதியாலும், அரசியல் பலத்தாலும் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தலைமையிலான போராட்டத்தால் மட்டுந்தான், தமிழ் மக்கள் தம்மை பேரினவாதத்தில் இருந்து தற்காக்கமுடியும். இந்த வகையில் மக்களை விழிப்ப+ட்டி, அரசியல் ரீதியாக அணிதிரட்டிப் போராடவேண்டும்.


* தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்களும் உள்ளடங்கிய வண்ணம், மற்றைய இன ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை இணைத்து, பேரினவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.


* இலங்கையில் வாழும் அனைத்து இனத்தைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்கப் போராட்டத்துடன், தமிழ்மக்களின் போராட்டம் இணைக்கப்பட வேண்டும். அதன் பொது நலனுக்கு முரணற்ற வகையில், உட்படுத்திய சுயநிர்ணய உரிமைகளை அவர்களுடன் சேர்ந்து வெல்லவேண்டும்.


* எம்மைச் சுற்றியுள்ள இனவாதத்தின் சகல சமூகக் கூறுகளையும் அகற்றப் போராட வேண்டும்.


* தமிழர் அல்லாத மற்றைய சமூகத்திற்கும் இந்த அரசு எதிரி என்பதை அங்கீகரித்து, கடந்தகாலத்தில் நாம் அவர்கள்மீது ஏற்படுத்திய குறுந்தேசிய இனவாத இடைவெளிகளை அகற்றும் வண்ணம், போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


* உலகில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள்தான், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்து அதற்காக நிற்பார்கள். இந்த அடிப்படையில் எமது போராட்டத்தை வழிநடத்த வேண்டும். உலகளவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கும், பரந்துபட்ட உலக மக்களைச் சார்ந்து நின்று எம் உரிமைகளைக் கோரிப் போராட வேண்டும்.


* முஸ்லீம் மக்கள், தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ அல்லது அதற்குக் கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக அவர்கள் தனித்துவமான இனப்பகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கூட பேரினவாதத்துக்கு எதிரானவர்கள். இவர்கள் குறைந்தபட்சம் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட இனப்பகுதியினர். இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தை இந்த மக்களுடன் இணைந்து நடத்தவேண்டும்.


* மலையக மக்கள், தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ அதற்கு கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக அவர்கள் தனித்துவமான இனப்பகுப்பைச் சேர்ந்தவர்கள். மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட இனப்பகுதியினர் இவர்கள். இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் பேரின வாதத்துக்கு எதிரான போராட்டத்தை இந்த மக்களுடன் இணைந்து நடத்தவேண்டும்.


* இந்தியப் பிராந்திய மேலாதிக்க அரசு, இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எதிரியாக இருக்கின்றது. ஆளும் வர்க்கங்கள், பாராளுமன்ற கட்சிகள், தமிழினவாதிகள் என அனைவரும், இதன்பின் இருப்பதை  இனங்காட்டி அம்பலப்படுத்திப் போராடவேண்டும்.


* தமிழீழ விடுதலைப்புலிகள் மீளப் பலம்பெற முடியாத வண்ணம் அழிந்து விட்டனர். அதன் எச்சங்களே புலத்தில் உள்ளனர். இவர்கள் ஏகாதிபத்திய நலன்களுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டதன் மூலம், அதை மக்களுக்கான தீர்வாக காட்டுகின்றனர். இதை அம்பலப்படுத்திப் போராடவேண்டும்.


* இந்தியா மற்றும் இலங்கை அரசு சார்ந்த தமிழ்க் குழுக்கள், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள். மக்கள் விரோத வர்க்க அரசியலுடன் நிற்பவர்கள். இவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்தபட வேண்டும்.


* சிங்கள மக்கள், தமிழ் மக்களின் எதிரிகள் அல்லர். அவர்களும் எமது பொது எதிரியால் ஒடுக்கப்படுபவர்களேயாகும். ஆயினும் தேசிய ரீதியில் சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைப் போக்கை களைந்தெறியாத வரை, இந்த இனவொடுக்குமுறையை அவர்கள் புரிந்துகொள்ள முடியாது. எனவே அவர்களை அந்தச் சிந்தனையில் இருந்து விடுவிக்க, நாம் எமது  இனவாதத்துக்கு எதிரான எமது போராட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமே அவர்களுக்கு உதவ முடியும். இதன் மூலம் நாம் ஐக்கியத்தை உருவாக்கப் போராடவேண்டும்.

* சிங்கள மக்கள் எப்படி இனவாதத்துடன் இணைக்கப்பட்டுள்ளனரோ, அப்படித்தான் தமிழ் மக்களும் இனவாதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளனர். ஒன்றுக்கு எதிராக அல்ல, இவ்விரண்டுக்கும் எதிராகப் போராடவேண்டும்.

* பாராளுமன்றப் பாதை மூலமும், சமரசம் மூலமும், பேச்சுவார்த்தை முலமும், மக்களின் சொந்த அரசியல் வழிக்கு வெளியில், அனைத்து பிரச்சனையும் தீர்க்கப்படலாம் எனும் போக்கை அம்பலப்படுத்திப் போராட வேண்டும்.

 
சாதிய ரீதியான சமூக விளைவுகளை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:
 
* சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதியக் கொடுமைகளை முற்றாக நீக்கவும், சாதியம் சார்பான அனைத்து முயற்சிகளையும் முற்றாக தடை செய்யப் போராடவேண்டும்.

* அனைத்து சாதிப் படிநிலைகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய உறவுகள் முற்றாக தடை செய்யப் போராடவேண்டும்.

*சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவை தெளிவாகவும், வரலாற்று ரீதியாகவும் அம்பலப்படுத்திப் போராட வேண்டும்.

* தீண்டாமையை ஒரு சமூகக் குற்றமாக பிரகடனம் செய்து அதனை மீறுவோரைத் தண்டிக்கப் போராட வேண்டும்.

* சாதிய ரீதியான குடியிருப்புகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.
 
* சாதிய ரீதியான புறக்கணிப்புகள், சாதிய வகைப்பட்ட உறவுகள், சாதியத் தடைகள் அனைத்தும் குற்றமாக அடையாளம் காணப்பட்டு, அவற்றைத் தண்டிக்கப் போராட வேண்டும்.

* சாதிய ரீதியான வழிபாட்டு முறைமைகளையும், கடமைகளும் குற்றமாக்கப்பட்டு தண்டிக்கப் கோரிப் போராட வேண்டும்.

* அனைத்துச் சாதிய ஏற்றத்தாழ்வையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.
 
பால் ரீதியான ஆணாதிக்க ஒடுக்குமுறையின் சமூக விளைவுகளை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:
 
* பெண்ணின் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறையை, வரலாற்று ரீதியாகவே அடையாளம் கண்டு போராட வேண்டும்.

* பெண்ணின் உழைப்பு, ஆணாதிக்க அமைப்பால் அதிகமாக சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராட வேண்டும்.

*பெண்ணின் உழைப்பு, ஆணின் உழைப்புக்கு கீழானதாக மதிப்பிடும் கண்ணோட்டம் மற்றும் கூலி வேறுபாட்டுக்கு எதிராகப் போராடவேண்டும்.

* குடும்ப ரீதியாக பெண்ணின் உழைப்பு ஆணாதிக்க வடிவில் கோரப்படுவது, சுரண்டப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டும்.

* பெண் அனைத்து துறையிலும் சுதந்திரமாக ஈடுபடுவதை தடுக்கும் ஆணாதிக்க சமூக வக்கிரத்துக்கு எதிராகப் போராட வேண்டும்.

*பெண்ணிடம் மட்டும் பாலியல் ஒழுக்கத்தைக் கோருவதும், கண்காணிப்பதுமான,  ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை எதிர்த்துப் போராட வேண்டும்.

* பெண்ணின் பாலியல் தெரிவை மறுத்து, ஆணாதிக்க ஓர்தார மணத்துக்குள் பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனை மற்றும் நடைமுறைக்கு எதிராக போராட வேண்டும்.

* பெண் விவாகரத்தை பெறவும், மீண்டும் புதிய வாழ்கைத் துணையைப் பெற்று வாழவும் உள்ள ஆணாதிக்க சமூகத் தடைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.
 
* விதவைகள், பாலியல் வன்முறைக்குள் உள்ளான பெண்கள் தமக்கான வாழ்க்கைத் துணையை பெறுவதற்கு உள்ள ஆணாதிக்க தடைக்கு எதிராக போராடவேண்டும். அது சார்ந்த சமூக இழிவுக்கு எதிராகப் போராட வேண்டும்.

* பெண்ணின் மேல் ஆணாதிக்கம் திணிக்கும் கட்டாயத் திருமணங்கள், சிறுவயது திருமணங்கள் என்பவற்றை எதிர்த்துப் போராட வேண்டும்.

* பெண்களின் மேலான ஆணாதிக்க உடல் மற்றும் உளவியல் கொடூரங்களில் இருந்து,பெண்களை விடுவிக்கப் போராட வேண்டும். இதற்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தடை செய்யக் கோரி போராட வேண்டும்.

* பெண்ணின் மேலான பாலியல் குற்றங்கள், ஆணாதிக்க குற்றமாக பிரகடனம் செய்யப்பட்டு, அவை தண்டிக்கக்கபடப் போராட வேண்டும்.

* பெண்ணை பாலியல் பண்டமாக காட்டும் அனைத்துக் கலைகள் முதல் விளம்பரங்கள் வரை, ஆணாதிக்க குற்றமாக காண்பதன் மூலம், தண்டனைக்கு உட்படுத்தப் போராட வேண்டும்.

* பெண்ணை பாலியல் பண்டமாக, நுகர்வு பொருளாக காட்டும் சந்தை பொருளாதாரமும், அது உருவாக்கும் பண்பாட்டு கூறுகளை ஆணாதிக்க குறியீடாக இனங்காட்டி, அதை குற்றமாகக் கோரிப் போராட வேண்டும்.

* பெண்ணின் உடலை நுகர்வுப் பொருளாக்கிக் காட்டும் ஊடகங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு எதிரான போராட்டங்களை நடாத்த வேண்டும்.

* கற்பு, விதவை போன்ற இழிவான கொடுமையான சமூகப் பண்பாட்டு ஆணாதிக்க கூறுகளையும், கடமைகளையும் எதிர்த்து, அதை முற்றாக மாற்றியமைக்கப் போராட வேண்டும்.
 
 
மத ரீதியான ஒடுக்குமுறையின் சமூக விளைவுகளை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:
 
* மத ரீதியான அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.

* தனிப்பட்ட மனிதனின் வழிபாட்டுக்கு அப்பால், மதம் சமூகத்தில் தலையிடுவதை எதிர்த்துப் போராட வேண்டும்.
 
* மக்களை மதத்தின் மூலம் பிளந்து மோதவிடுகின்ற, மதவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்.

* மற்றைய மதங்களை தாழ்வானதாகக் காட்டுகின்ற பிரச்சாரங்களுக்கு எதிராக போராட வேண்டும்.

* மதம் மூலம் மக்களை ஏய்கின்ற மோசடிகள் முதல் மூடநம்பிக்கைகள் வரை அம்பலப்படுத்தி போராட வேண்டும்.

* சடங்குகள், சம்பிரதாயங்கள் எவையாக இருந்தாலும், அவற்றை மற்றைய மனிதன் மீது திணிப்பதற்கு எதிராகப் போராட வேண்டும்.

* மத மூலமான சாதிய படிநிலை முதல் பால் ரீதியான ஆணாதிக்க கூறுகள் வரையான அனைத்து ஏற்றத் தாழ்வான மத விழிமியங்களை எதிர்த்துப் போராட வேண்டும்.

* அரசில் இருந்து மத ஆதிக்கத்தை, மதச்சார்புத் தன்மையை நீக்கப் போராட வேண்டும். மாறாக மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமைக்குள், மக்களின் சமூகப் பொருளாதார தேவைகளைப் ப+ர்த்தி செய்வதன் ஊடாக, வழிபாடு சாhந்த சமூக அறியாமையை படிப்படியாக நீக்கப் போராட வேண்டும்.

 
வர்க்க ரீதியான சுரண்டலையும், ஒடுக்குமுறையையும்; அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:
 
•மனிதனை மனிதன் சுரண்டுவது ஜனநாயகமல்ல. இது ஜனநாயக மறுப்பாகும்.

•மனித உழைப்பை மற்றொருவன் சுரண்டி தன் உரிமையாக்குவது மனித உரிமையல்ல. இது உரிமை மறுப்பாகும்.

•அனைவருக்கும் 'ஜனநாயகம்" இருந்தால், 'சுதந்திரம்" இருந்தால், இந்தச் சொல்லுக்குரிய அர்த்தமே இல்லாமல் போய், அது அர்த்தமிழந்துவிடும். தனியுடைமைச் சமூக அமைப்பில், தனியுடமையை     கொண்டு இருக்கும் தனிமனித உரிமைதான், 'ஜனநாயகம்" மற்றும் 'சுதந்திரம்" ஆகும்.  தனிவுடமையற்ற அமைப்பில் அமைப்பில், 'ஜனநாயகம்" மற்றும் 'சுதந்திரம்" என்பது     அர்த்தமிழந்துவிடும்.

*மனிதனை மனிதன் சுரண்டும் ஜனநாயக விரோதத்தை ஒழித்துக் கட்டவேண்டும். இதை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தடைவிதிக்க வேண்டும்.

*மனித உழைப்பை சுரண்டுவதற்கு எதிராக போராட வேண்டும். அதனால் உருவான வர்க்க அமைப்பை     இல்லாது ஒழிக்கப் போராட வேண்டும்.

*சுரண்டி வாழும் வர்க்க ஆட்சிக்கு பதில், சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் வர்க்க ஆட்சியை நிறுவப் போராட வேண்டும்.

*உழைப்பைத் தவிர, இழப்பதற்கு ஏதுவுமற்ற தொழிலாளர் வர்க்கத் தலைமையிலான உழைக்கும் மக்களின் ஆட்சிக்காகப் போராட வேண்டும்.

*உலகளவில் உழைக்கும் மக்களின் ஆதரவுடன், தேசத்தையும் தேச மக்களைச் சார்ந்து நின்று போராட வேண்டும்.

*மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனங்கண்டு, அந்த வர்க்கத்தைச் சார்ந்து போராட வேண்டும்.

*தேசிய வளங்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றின் சமூகப் பெறுமானத்தை உயர்த்தி அதை வளர்த்தெடுக்கப் போராட வேண்டும்.

*தனிச்சலுகை கொண்ட மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயக விரோத சமூகப் பொருளாதாரக் கூறுகளை ஒழித்துக்கட்டப் போராட வேண்டும்.
 
பண்பாட்டு கலாச்சார ஒடுக்குமுறையை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:
 
*நிலப்பிரபுத்துவ, தரகு, காலனிய பண்பாட்டு கலாச்சாரத்துக்கு எதிராகப் போராட வேண்டும்.

*மக்களின் உழைப்பு, அவர்களின் முரணற்ற ஜனநயாக வாழ்வு, அவர்களின் முரணற்ற பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உயர்வானதாக மதித்து, அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

*மக்களின் உயர்ந்த சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்வை மீட்டெடுக்கவேண்டும்.

*மக்களின் சமூக உழைப்பும், சமூக வாழ்வும் சார்ந்த பண்பாட்டு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் அதேவேளை, உலகளாவிலிருந்து இதை வரவேற்க வேண்டும்.

*சகல வெளிநாட்டு உள்நாட்டு கலாச்சார பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு எதிராகப் போராட வேண்டும். பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தேசிய உற்பத்தி மீது வளர்த்தெடுக்க வேண்டும்.

*நுகர்வு கலாச்சாரத்தையும், நுகர்வு பண்பாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
 
சுரண்டுவதை மனித ஒழுக்கமாக்கும், பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாகக் கொண்ட கல்வியை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:

*தனியார் உடமை சார்ந்த கல்விக்குப் பதில், சமூக உடமை சார்ந்த கல்வியைக் கோரிப் போராடுவோம்.

*உழையாது வாழ்பவர்களின் கல்விக்குப் பதில், உழைக்கும் மக்களின் வாழ்வியல் சார்ந்த கல்வியைக் கோரிப் போராடுவோம்.

*இலங்கை தேசியவளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கும் ஏற்ற கல்வியையும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப் படிப்புகளைக் கோரிப் போராடுவோம்.

*அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கோரிப் போராடுவோம்.

*அனைவருக்கும் கல்வியை, பல்கலைகழகம் வரை இலவசமாக கிடைக்கப் போராடுவோம்.

*கல்வியை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்துப் போராடுவோம்.

*உயர் அதிகாரிகளை உருவாக்கும், உயர் அந்தஸ்துக்கான கல்விக்கு பதில், மக்களின் வாழ்வுடன் இணைந்த, அவர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் கல்வியைக் கோரிப் போராடுவோம்.

*முன்னேறிய கல்வியை பெறும் வகையில், பின்தங்கிய சமூகங்களின் சமூக பொருளாதார சூழலை மாற்றியமைக்கப் போராடுவோம்.

*பல்கலைக்கழகம் வரை தாய்மொழிக் கல்வியை அமுல்ப்படுத்தப் போராடுவோம்.

*தாய் மொழியிலான அடிப்படைக் கல்வியை முதன்மைப்படுத்தாத, அதற்குப் பதிலான ஆங்கிலக் மொழியிலான கல்வியைத் தடை செய்யப் போராடுவோம்.

*தாய்மொழிக்கு அடுத்ததாக, பரஸ்பரம் தமிழ் மற்றும் சிங்களத்தைக் கட்டாய மொழியாக்க வேண்டும்.

*பகுத்தறிவுக்கு முரணான மதக்கல்வியை முற்றாகத் தடை செய்யவேண்டும்.

*சாதி, பால், இன, மத ரீதியாக பின்தங்கிய கல்விமுறையை எதிர்த்து போராடுவோம்.

*பின்தங்கிய மாவட்டங்களின் கல்விக்கான அடிப்படை வசதியைக் கோரிப் போராடுவோம்.

*பல்கலைக்கழகம் உட்பட கற்கத் தகுதியான அனைத்து மாணவர்களும் கற்கும் உரிமைக்காகப் போராடுவோம்.

*இனம், சாதி, பால், மதம், பிரதேசம் என்ற சமூக பிரிவுகள் மூலம், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு மாணவர்களுக்கு கற்கும் உரிமையை மறுப்பதற்கு எதிராகப் போராடுவோம்.

*பின்தங்கிய சமூகங்கள், பிரிவுகளுக்கான கல்வி முன்னுரிமைக்காகப் போராடுவோம்.

*கல்வியில் சம உரிமைக்காகப் போராடுவோம்.
 
 
விவசாயிகள் மீதான சுமைகளை அழுத்தங்களை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:
 
 
*பெருமாளவில், சிறு நிலவுடமை சார்ந்த ஏழை விவசாயிகளைக் கொண்ட சமூகப் பிரிவினர் நலனுக்காக போராடவேண்டும்.

*பராம்பரிய விவசாய முறையை, நவீன உற்பத்தி முறை மூலம் அழிப்பதற்கு எதிராகப் போராட வேண்டும். பராம்பரிய முறையை, மேலும் நவீனமாக வளர்த்தெடுத்தல் நவீனமே ஒழிய, மேற்கத்தைய மூலதனத்தின் சூறையாடலுக்குரிய உற்பத்தி முறை நவீனமல்ல. ஆகவே இச்சூறையாடலை எதிர்த்துப் போராடவேண்டும்.

*மண்ணுக்கு, மண்ணின் மக்களுக்கு ஏற்ற உற்பத்தி முறையைப் பாதுகாக்கப் போராடுவோம். மேற்குச் சந்தைக்கும், வாங்கிய கடனுக்கு வட்டியாகக் கொடுக்கும் வண்ணம் விவசாய உற்பத்தியை மாற்றும் முறையை எதிர்த்துப் போராடுவோம்.

*மக்களின் வாழ்வு சார்ந்த நிலத்தை, அன்னிய பெரு மூலதனத்துக்குக் கொடுக்கும் அரசின் உலகமயமாதல் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம்.

*நிலத்தை மீளப் பறித்துக் குவிக்கும் வண்ணம், விவாசயத்தை நலிவுற வைக்கும் அரசினதும் உலக மயமாதலினதும் திட்மிட்ட விவசாய விரோத கொள்கைக்கு எதிராகப் போராடுவோம்.
 
*விவசாயத்தை, சந்தைக்கும் - நுகர்வுக்கும் ஏற்றதாக்கும் உற்பத்தி முறைமையைத் திணிப்பதற்கு எதிராகப் போராடுவோம். மாறாக, மக்களின் தேவைக்கும், அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் ஏற்ற உற்பத்தியைக் கோரிப் போராடுவோம்.

*விவசாய உற்பத்தியை அழிக்கும் வண்ணம், அரசினதும் - உலகவங்கியினதும், உலகமயமாதல் இறக்குமதிக் கொள்கையை எதிர்ப்போம்.

*விவசாய உற்பத்திக்கான உத்தரவாத விலையைக் கோரிப் போராடுவோம்.

*விலையை நிர்ணயம் செய்யும் தரகு மற்றும் திட்மிட்ட முறையில் சந்தையை தேங்க வைத்து முடக்கும் முறைக்கு எதிராகப் போராடுவோம்.

*அனைத்து விவசாய உற்பத்தியை, குறைந்தபட்ச உத்தரவாத விலையில் அரசைக் கொள்முதல் செய்யக் கோரிப் போராடுவோம்.

*விவாசாயி தன் பொருளை விரும்பிய காலத்தில் விற்கும் வண்ணம், பொருளுக்கு வட்டியில்லாத முன் கடன் கொடுக்க கோரிப் போராடுவோம்.

*விவசாய உற்பத்திக்கு தேவையான வட்டியில்லாக் கடன் வசதிகளை, விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரிப் போராடவேண்டும்.

*பயிர் அழிவுகள் ஏற்படும் போது, அதற்கான முழு நஸ்டஈட்டை அரசை வழங்குமாறு கோரிப் போராட வேண்டும்.

*விதைகள் பாரம்பரிய முறையில் பாதுகாத்து, அரசே அதை விநியோக்கக் கோரிப் போராடுவோம்.

*அன்னிய விதை நிறுவனங்கள், பாரம்பரிய விவசாய விதைக்களை அழித்து, தங்கள் உயிர் ஆற்றலற்ற விதையை விவசாயிகளிடம் திணிப்பதை எதிர்த்துப் போராடுவோம்.

*உரம், கிருமிநாசினி என்று, இயற்கை விவசாயத்தை அழிக்கும் மூலதனத்தின் விவசாய கொள்கைக்கு எதிராகப் போராடுவோம்.

*விவசாயத்தை ஒற்றைப் பயிர்ச் செய்கையாகவும், உணவை ஒற்றை உணவாக்கும் மூலதனத்தின் உலகமயமாதல் கொள்கையை எதிர்த்துப் போராடுவோம்.

*நீர், நிலம், காடு. என்பவற்றை, அபிவிருத்தியின் பெயரில், தேச மக்களுக்கு எதிரான வகையில் முன்னெடுக்கும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்த்துப் போராடுவோம்.
 
மீனவர்கள் மீதான சுமைகளை - அழுத்தங்களை அடையாளம் கண்டு கொள்வதும், போராடுவதும்:

*சிறு மீன்பிடியை அதிகமாக கொண்ட ஏழை மீனவர்கள் நலனுக்காகப் போராட வேண்டும்.

*கடலும், கரையும் அவர்களின் பாரம்பரிய உரிமையாகும். இதை மறுக்கும் போக்குகளுக்கு எதிராக போராட வேண்டும்.

*கடற்கரைகளை பணம் படைத்தவனின் பொழுதுபோக்கும் மையங்களாக, உல்லாச கேளிகைக்குரிய ஒன்றாக மாற்றுவதை எதிர்த்துப் போராட வேண்டும்.
 
*சிறு மீனவர்களுக்கு வட்டியல்லாக் கடன், மற்றும் உற்பத்திக்குத் தேவையான வளங்களைக் கிடைக்கக்  கோரிப் போராட வேண்டும்.

*இலங்கைக் கடலில் பன்னாட்டு மீன்பிடிக்கு எதிராக போராட வேண்டும்.

*இலங்கையில் பெரிய மீன்பிடிகள், சிறிய மீன்பிடிகளை பாதிக்குமாயின் அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

*தடைசெய்யப்பட்ட வள்ளம் - வலை கொண்டு, மீன்பிடிப்பதற்கு எதிராகப் போராட வேண்டும்.

*தடைசெய்யப்பட்ட மீன் வகைகளைப் பிடிப்தற்கும், தடைசெய்யப்பட்ட முறையில் பிடிப்பதற்கும் எதிராகப் போராட வேண்டும்.

*எல்லையோர மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள், தடைசெய்யப்பட்ட வள்ளம் - வலை - தடை செய்யப்பட்ட முறைமூலங்கள் மற்றும் தடைசெய்யப்பட்டவற்றை பிடிப்பதற்கு எதிராகப் போராட வேண்டும்.

*எல்லையோர மீன்பிடியில் ஈடுபடும் இந்திய சிறு மீனவர்கள் நலனை உயர்த்தி, அவையல்லாத மீன்பிடியை எதிர்க்க வேண்டும்.

*ஊடூருவலை தடுக்கும் போர்வையில், இந்திய மீனவர்கள் மீதான வன்முறையை எதிர்த்துப் போராட வேண்டும்.

 
சமூக அடிப்படைக் கூறுகளை அடையாளம் கண்டுகொள்வதும், போராடுவதும்:
 
*மக்களின் கருத்து - எழுத்து - பேச்சு சுதந்திரத்திற்காக போராடுவோம்.

*எட்டுமணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பவற்றை உறுதி செய்யப் போராடுவோம்.

*உழைப்பவருக்கே உணவு, உழையாதாருக்கு உணவில்லை. இந்த அடிப்படை உரிமையை நிலை நாட்டப் போராடுவோம்.

*வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள் சமூகப் பொறுப்பில் பராமரிக்கக் கோரிப் போராடுவோம்.

*அனைவருக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கக் கோரிப் போராடுவோம்.

*அனைவருக்கும் இருப்பிடம், உணவு, நீர், சுத்தமான காற்றுக் கிடைப்பதை உறுதி செய்யக் கோரிப் போராடுவோம்.

*மக்களின் பொழுது போக்குகள், ஓய்வு என்பன சமூக வளர்ச்சியை உறுதி செய்வதைக் கோரிப் போராடுவோம்.

*இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற சமூக பொருளாதார கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்வு முறைக்காகப் போராடுவோம். இதற்கு ஏற்றவாறான வாழ்வுமுறையை முற்றாக மாற்றியமைக்கப் போராடுவோம்.

*மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி நிறம்.., சார்ந்து நடத்தும் பிளவுவாத நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்விமுறைகள், பொருளாதாரக் கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாகத் தடைசெய்யப் போராடுவோம்.

*மக்களை இயற்கையான சமூக உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்யப் போராடுவோம்.

*மக்கள் நீதிமன்றத்தை நிறுவப் போராடுவோம்.

*சகல மக்களுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்யக் கோரிப் போராடுவோம்.

*மக்களின் சமூகத் தேவையை அடிப்படையாகக் கொண்ட, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பைக் கோரிப் போராடுவோம்.

*சமூக இழிவாக கருதும் வேலைகளையும், சமூக கடமையாக கருதும் வேலைகளையும் ஒழித்துக் கட்டவும், சமூக இழிவாக்கப்பட்ட வேலைகளின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தப் போராடுவோம்.

*உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், அதற்கு ஆதரவான போராடங்களையும் நடத்துவோம்.

*ஏகாதிபத்தியம் எமது எதிரி. அந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தான் எம் நண்பர்கள்.

*பிராந்திய வல்லரசுகள் எமது எதிரி. அந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தான் எம் நண்பர்கள்.

*எப்போதும் எங்கும் மக்களுக்காக மக்களுடன் நிற்போம்! மக்களின் எதிரிகளை எதிர்ப்போம்!

*சமூக நடைமுறையை அரசியலாக்குவோம். இவையல்லாத அனைத்தையும் நிராகரித்து அம்பலப்படுத்துவோம்.

*உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடுவோம்! பொய்களையும் அநீதிகளையும் எதிர்ப்போம்!

*மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! உரிமைக்கு எதிரானவர்களுக்கு எதிராகப் போராடுவோம்.

*தேசியத்தைப் பாதுகாப்போம்! ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்!

*சர்வதேசியத்தைப் பாதுகாப்போம்! உலகமயமாதலை எதிர்ப்போம்!
 
 
எமது நண்பர்களை - எதிரிகளை  அடையாளம் கண்டுகொள்வதும், போராடுவதும்:

*ஏகாதிபத்தியம் எமது எதிரி. அந்த நாடுகளில் உள்ள மக்கள் தான் எமது நண்பர். தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்படும், தேசிய வர்க்கங்கள் எமது போராட்ட சக்திகளாவர்.

*ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் போராட்டத்தையும்;, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டத்தையும், முரணற்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, நண்பர்களையும் - எதிரியையும் அடையாளம் காணுதல்.

*கடந்தகாலப் போராட்ட அனுபவங்களை கேள்விக்குள்ளாக்குதல். அதனை அரசியல் ரீதியாக செயல் இழக்கப் பண்ணுதல்.

*போராட்டத்தில் நடந்த, நடக்கின்ற நிகழ்வுகளை மீள் ஆய்வுக்குட்படுத்துதல், விவாதித்தல்.

*ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் போராட்டத்தையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டத்தையும், பொதுவான அடிப்படையான அரசியல் கொள்கைகளாகக் கொண்டு பிரச்சாரம் செய்தல்.

*ஜனநாயகத்தின் பெயரில் நிலவுவது  பாசிசமாகும். இதன் மூலம் சுரண்டவும், ஒடுக்கவும் அதனால் முடிகின்றது.

*ஊசலாடும் துரோக நிலையெடுத்தோரின் அரசியல் துரோகத்தை இனம் காட்டி, அதன் அணிகளை வென்றெடுத்தல்.
 
*ஊசலாடும் நம்பகமற்ற கூட்டாளிகளை இனம் காட்டுதல்.

*பாதிவழிக் கூட்டாளிகளின் தவறுகளை இனம் காட்டுதல்.