Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

TNA இன் உள்வீட்டு குத்து வெட்டு ஒரு பார்வை

கூட்டமைப்பு இரண்டாக உடையக் கூடிய சாத்தியம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நகைப்பிற்கு உரிய விடயமாக கவனிக்கப்பட வேண்டியது எதுவெனில் கூட்டமைப்பு எதன் அடிப்படையில் உடைகின்றது என்பதே. கூட்டமைப்பின் உடைவில் இரு அரசுகளின் சதிகளை நாம் இனங்காண முடிகின்றது. சுரோஸ் பிரேமச்சந்திரனின் தலைமையில் இந்திய அரசு சார்பும் சம்பந்தன் தலைமையில் இலங்கை சார்புமாக பிரிந்து நின்று உடைவினை நோக்கி செல்லக் கூடிய சாத்தியப்பாடு பலமாக இன்று காணப்படுகின்றது.

இவ்விரு அணியினருமே தமது சொந்த மற்றும் அவர்கள் சார்ந்த அரசுகளின் நலன்களுக்காகவும் தமிழ் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுக்கத் தயாராக உள்ளனர். இவர்கள் உடைவதாலோ அல்லது இணைந்திருப்பதனாலோ தமிழ் மக்களிற்கு எந்த அரசியல் லாபமும் இல்லை.

சம்பந்தர் அவரின் தலைமையையும்  சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கிலும், தம்சகாக்களின் சொத்துக்கள், முதலீடுகள் பற்றிய அக்கறையும் மற்றும் பாராளுமன்ற பதவியின் மூலம் பெறப்படும் சலுகைகளின் பொருட்டும் செயற்படுகின்றார். இதன் பொருட்டு இந்த அணியினர் மகிந்தாவிற்கு தலையாட்டிகளாகவே எப்போதும் இருந்து வருகின்றனர். தமிழ் மக்களின் முனனால் ஒரு பேச்சு மகிந்தாவின் முன்னால் கும்மியடிப்பதே இவர்களின் செயற்பாடாகும்.


சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டும் எடுபிடியாக மிகநீண்ட காலமாக EPRLF இல் இவர் அங்கம் வகித்த காலத்திலிருந்தே செயற்படுபவர். இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் மண்டையன் குழுவிற்கு தலைமை தாங்கியவர் தான் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இந்த கூத்தமைப்பினர்,

  • இனப்பிரச்சனைக்கான தீர்வினை வைக்கும்படி அழுத்தம் கொடுக்கவோ
  • சம்பூர் அணு மின்னிலையத் திட்டம் பற்றியோ
  • முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய அக்கறையோ
  • சரணடைந்த முன்னணிப் போராளிகள் பற்றியோ
  • மனித உரிமை மீறலகள் பற்றியோ
  • காணாமால் போனவர்கள் பற்றியோ
  • நிலங்கங்கள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றியோ

தீர்க்கமான போராட்டங்களை நடத்த முடியாத ஒரு முதிர்ந்த பட்டுப்போன முருங்கை மரத்திற்கு ஒப்பானவர்களாக இருக்கின்றார்கள்.

இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் முன்னே எத்தனையோ அத்தியாவசிய பிரச்சனைகள் இருக்கையில் தமது நலன்களை முதன்மையாக கொண்டு நாலு சுவருக்குள் முட்டி மோதிக் கொண்டு இருப்பதும், வெளியே "விழுந்தோம் மண் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பது போன்ற அறிக்கைகளை விடுவமாக கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக தமிழ் மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கின்றனர்.


நாம் பலமுறை கூறி வந்தது போல, இவர்கள் எப்போதுமே தமது பதவி சுகங்களிற்க்காக  மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் தமது செயல்பாடுகள் மூலம் உறுதி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களை இனியும் நம்பியிருக்காது தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க மாற்று அரசியல் பாதையினை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்.

-வேலவன் 04/10/2012