Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங் குளத்து “பொலிசுகாரர்களே”!

அணு உடைவுச் சிதறல்கள்
அண்மையிலா அதிககாலங்களா?
எப்போதும் நிகழாம்
தெருவிபத்து.

பொங்கித்தள்ளும்  தீமலைகள்
உலுக்கி சிதைத்தப்போடும்
நிலநடுக்கம்

தென்னையளவுயர்ந்து
தவளையின் நாக்கென
சட்டென நீண்டு
பின்னோடும் பெருவெள்ளம்
சுனாமி.
இயற்கையின் சீற்றம்
எப்போதும் நிகழலாம்.

செயற்கையில்
ஓட்டை உடைசல்- இல்லா
உத்தரவாதம் என்பது
பொய்யர்கள் கூற்று

செர்னோபைல், போபால்-போல்
ஓட்டையாலும் தள்ளலாம்
விசக்கதிர்கள்.

செர்னோ-போபால்
கோரத்தின் ஊற்று-இன்னும்
அடங்கவேயில்லை

தொண்டையை அரிக்கும்-புற்று
மூளையும் மிஞ்சவில்லை
துள்ளியோடும் கால்கள்
கதைசொல்லும் விழிகள்
ஓவியம் செய்யும்-கைகள்
எல்லாமேயடங்கி

யானை திண்டவிழாம்பழம்-போல்
புற்றரித்து செல்லரித்து
தரையில் சுருண்டு கிடக்கின்றன-துள்ளும்
சுட்டிக்குஞ்சுகள்.  
பொலிசே உன் -அப்பன்                                                                                   
வீட்டுச்சொத்தையா-அவர்கள்
புடுங்கிச்செல்ல முனைகின்றனர்

உயிர்புடுங்கும் அணுஉலையை-புடுங்கிவீச.

காட்டுமாடுகளாக அம்மக்கள்-மீது
பாய்ந்து முட்டி மோதி மிதித்து
கொல்லும்- பொலிசே
அன்று உங்களைப் போல் மாட்டு மண்டையர்களை
நினைத்தோ அந்த ஜெர்மனிய
புரட்சிஎழுத்தாளன்.

சொல்லுங்கள்-திரு
பெத்தோல்ட் பிரேக்ட்.
“சிந்திப்பதற்கு பான்துண்டு(Brat)
தேவையென்றில்லை
வெளிச்சமும் தேவையென்றில்லை
சிந்தித்தும் இருக்க வேண்டுமென்றில்லை

உன்னையும் புடுங்கும் விசக்கதிர்கள்
உன்தொப்பி, லத்தி
காக்கிச்சட்டை,  கட்டிடம்
கவசம், ஆயுதம்-எங்கும்
அகலா கதிர் படிமம் -ஒட்டும்

உன்சுவாசம் உணவெனச்சென்று
மண்டை தொண்டை
குடல்தொட்டு குதம்வரை
புற்று நோய்சூழும்
உனது பிணைப்பில் விளையும் கருவறுந்த பிள்ளை
நீமேலும்மாடாவாயா?-அல்லது உன்                                                                                                                                                               லத்திகளை வீசியெறிந்து
தேவையெனில் எல்லாவற்றையும்
திருப்பிப்பிடித்து-மக்கள்மீதல்ல
உன் ஏவலாளர்களின்-தலைகளை நோக்கி

சிப்பாய்க்கலகம்- அன்னிய
மக்கள் விரோதிகளை-துரத்திய
வசந்த விழா- அது உன்
மண்ணின் சொந்தம்.

அல்லது
உனது ராஜ்ஜியமும்   
சமாதியாகும்                                                                                                                                                                                                                                              
ஏனெனில் அந்தமக்கள்
சிந்தனையோடு செயல்-பதிக்கும்
கூடங்குளத்துப்-
பெருவெள்ளம்.

-திலக் (9/10/12)