Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கை அபிவிருத்தி செய்வதாக புளுகும் அரசியல் கோமாளி

“வடக்கின் அபிவிருத்தியில் அரசுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்த பொறுப்பை அரசு தார்மீகக் கடமையாக செய்து வருவதாகவும் யாழ்ப்பாணத்து அபிவிருத்தியில் பாரிய பாய்ச்சல் நிலையில் உள்ளதாக யாழில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் 10.10.12 நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.”

இவர்கள் அபிவிருத்தி செய்வதாக பிரச்சாரம் செய்கின்றார்கள். இவர்களின் முதன்மை வேலையாக வீதி அபிவிருத்தியே நடைபெறுகின்றது. வீதி அபிவிருத்தியைப் பொறுத்தவரை அனேகமாக எந்நாடு கடன் உதவி கொடுக்கின்றதோ, அந்த நாட்டின் நிறுவனமே பணியைச் செய்வதற்கான ஒப்பந்தத்தினை பெறுகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் வளர்ச்சிக்கு பயன்படும் நிதி என்பது வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிறுவனங்களால் இலங்கை அரசிற்கு கிடைக்கப்பெற்றதாகும்.

1. சுனாமி மூலம் கொடுக்கப்பட்ட உதவியும் கடன்களும்

2. உலகவங்கி, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி

3. சீன, இந்திய உதவிகள்

அபிவிருத்திக்கு பெறப்படுவது உலக நாடுகளினால் கொடுக்கப்படும் நீண்டகால குறுகியகாலக் கடன்களே. இந்தக் கடன்கள் சுமையானது சிங்களவர், தமிழர், முஸ்லீம், மலையத்தமிழர் என எல்லோர் மீதும் சுமத்துகின்றது.

இந்த அபிவிருத்தி நாடகத்தில் உருவாக்கப்படுவது முதலாளித்துவ அரச இயந்திரத்தினை உயிர் வாழ வைப்பதற்கான சுவாசக் காற்றே. அதாவது முதலாளித்துவ தொழில் நிறுவனங்கள் புதிய பிரதேசங்களுக்கு செல்ல வேண்டுமானால், உட்கட்டுமானம் நிச்சயமான ஒன்று. இதனால் ஏற்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மீதான திட்டமிட்ட வளர்ச்சி எனக் கொள்ள முடிவில்லை.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் உற்பத்தி சார்ந்த துறைகளுக்கான முதலீடுகள், வளர்ச்சிகள் பெரிதாக இல்லை. இன்றைய விவசாயம், கடல்தொழில் என்னவற்றில் கூட அதிகப்படியான முதலீடுகள் இன்மை இருக்கின்றது. முதலீடுகளுடன் புதிய தொழிற்நுட்ப பயிற்சியை தொழிலாளர்களுக்கு கொடுப்பதன் மூலமே குடிசைத் தொழில் நிலையில் இருக்கின்ற தொழில்துறைகள் வளர்ச்சியை எட்டும். இதனை விடுத்து உற்பத்தி முயற்சிகள் இன்றி தெருக்களை புரனமைப்பதால் பலன்பெறுபவர்கள் இருக்கின்றார்கள்.

1 . அபிவிருத்தி செய்வதாக காட்டும் அரசு

2. சிறுவீதிகளைச் சீர்திருத்தும் உள்ளுர் முகவர்கள்

3. திறப்புவிழாவின் போது நினைவுக் கல்லில் பொறிக்கப்படும் பிரமுகர்களின் பெயரும் உரிமை கோரலும்.

அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் பணம் என்பது தொழில் ஒப்பந்தம் செய்யும் ஒருவருக்கும், அந்த ஒப்பந்தத்தை கிடைக்க உதவும் அரசியல்வாதிக்கும் கனிசமான அளவு தொகை செல்கின்றது. இங்கு நடப்பது என்னவெனில் உலக நிதிநிறுவனங்களில் இருந்து பெறப்படும் பெரும் நிதியானது தனிநபர்களிடையே சென்றடைகின்றது. ஆனால் இலங்கை மக்கள் இவ்வாறான தனிநபர்களின் சட்டைப்பைக்குள் செல்கின்ற பணத்திற்கான கடன் சுமையை சுமர்ப்பவர்களாக இருக்கின்றனர்.

நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கடனிலே கட்டப்பட்ட பாலங்களுக்கும், ரோட்டுக்களுக்கும் உரிமை கோரி, வடக்கின் அபிவிருத்தியில் அரசு தார்மீகக் கடமையாக செய்து வருவதாக பிரச்சாரம் செய்யும் நபர்களாக அரசியல் கோமாளிகள் இருக்கின்றார்கள்.

-12/10/2012