Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய திசைகளின் புதிய பரிணாமம்.


புதிய திசைகளின் கட்டுரையை வாசித்தேன்.  நடைமுறை யதார்த்த்தை புரிந்து கொண்டதையும், எங்கள் சனங்களின் பாற்பட்டு  இலங்கையில் ஒரு முற்போக்கான அரசியல் சமூக மாற்றம் பற்றிய எண்ணப்போக்கு இவர்களிடம் உள்ளக்கிடக்கையாக இருப்பதையும்  காணமுடிகிறது. எவ்வளவு மோசமான அவல நிலையை, அழிவின் கீர்த்தியை  நமது சமூகம் தாண்டி நிற்கிறது? எந்த விதமான போரட்டம் அல்லது சமூகநீதி என்ற விடயங்களை எங்கள் மக்களிடம் கதைக்கவே முடியாத மோசமான மனோ நிலையில் நாங்கள் வாழ்கின்றோம். இவை பற்றிய உணர்வார்ந்த நிலமை தமிழர் புலம் பெயர் மக்களிடம் வளர்வது வரவேற்கத்தக்கது.

அதே வகையில் இவர்களின் மனத்தில் இருக்கும் ஆன்மார்த்தமான சந்தேகங்கள் என்பது வரவேற்கத்தக்கது. காரணம்  கார்ல் மாக்ஸ் சொன்ன விடயம்  ”எல்லோரிலும் சந்தேகப்படு!. எதிலுமே கேள்விகளை கேள். நம்பிக்கையின் அடிப்படையில் செயலாற்றுவது முட்டாள்தனம்!” என்பது.   

நம்பிக்கைகள் ஏற்படுமிடத்து, செயற்பட்டாலும் கேள்விகள் எப்பொழுதும் தோன்றட்டும். தொடரட்டும் இதுதான் நல்ல தொடக்கத்தின் ஆரம்பம்.  

எமக்கு தெரியாத, எமது காலத்தில் ஆவணங்களில் பார்க்கப்பட முடியாத கடந்த காலங்களில் சொல்லப்பட்ட வரலாறுகள் வெல்லப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. வரலாறுகள் என்பன உண்மையில் தோற்கடிக்கப்பட்டவர்களால் தான் நிரூபிக்கப்பட  வேண்டியவை.

உதாரணமாக இலங்கையில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் இலங்கை இரண்டு தேசங்களாக இருந்ததா? இல்லை நான்கு தேசங்களாக இருந்தனவா? இதற்கு விடை கடினமானது ஏனெனில் ஆபிரிக்காவை இருண்ட கண்டம் என்று வர்ணித்தாகள். அமெரிக்கா கண்டத்தை தாங்கள் தான் கண்டுபிடித்ததாக சொன்னாகள்.  இதெல்லாம் உண்மையா? இந்த கண்டங்களில் வாழ்ந்த மக்களை அவர்களின் நாகரீகங்களை எப்படி வென்றவர்கள் மறுத்தார்கள் இல்லை மறந்தார்கள்.

இவற்றையெல்லாம் தவிர்த்து நாம் மானிட யதார்த்தத்தில் அறிய வேண்டியது என்ன. இன்று இலங்கையில் எப்படி பெரும்பான்மை  சிறுபான்மையினை பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்றதோ (அத்து மீறிய குடியேற்றங்கள் அல்ல)அந்த சமூகங்களின் வாழ்வியல்தான் யதார்த்தமானது.


இவர்களின் பரம்பல் என்பது  மனித வாழ்வியலின் பரிணாமம். உதாரணமாக முஸ்லிம்கள் இலங்கைக்கு எப்படி வந்தார்கள் என்று பார்ப்பதா?  இல்லை இன்று முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதா? மொகலாயர்களின் வரவு இந்தியாவை கடந்து இலங்கையிலும் கால்பதித்தது இது உண்மை.  இதற்காக இன்று வாழும் முஸ்லிம்களை பழிவாங்குவது நியாயமா? போத்துகீசரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயனும்  என்ன செய்தார்கள் ?  விஜயனின் வழித்தோன்றல்கள் சிங்களவர்கள். தென்னிந்திய தொடர்பால் சோழனின் பாண்டியனின் வழித் தோன்றல்கள் தான் என்று மார் தட்டும் தமிழர்கள் நாம் என்ற வரலாறு இப்போழுது அவசியமா? எல்லோருமே மனிதர்கள் என்று எண்ணும் மனம் வேண்டும்.

25/10/2012