Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடாங்குளத்திற்கு எதிராக யாழில், மக்கள் போராட்ட இயக்கம் துண்டுப்பிரசுர விநியோகம்.

இந்தியாவில் கூடங்குளம் பிரேதசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்ட இயக்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் துண்டுப் பிரசுரங்கைள, இலங்கை பொலீசாரின் பலத்த கண்காணிப்பு மற்றும்  நெருக்கடிகளிற்கு மத்தியில் விநியோகித்தனர்.

மேலும் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் வவுனியா, மன்னார், புத்தளம் ஆகிய பகுதிகளில், இத் துண்டுப்பிரசுரம் ஏககாலத்தில் பரவலாக வினையோகிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த அணு உலையில் வெடிப்புக்கேளா, கசிவோ ஏற்படும் பட்சத்தில் அதன் கதிர் வீச்சினால் இலங்கைக்கும் பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதனால் அதை  தடுத்து நிறுத்த  போராடுமாறு வலியுறுத்தி இத் துண்டுப்பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. துண்டப்பிரசுரத்தினை  கீழே காண்க

இந்தியாவின் அணு உலையால்  எமது வாழ்வு ஆபத்தில்!

இந்தியாவின் தென் பிராந்தியத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இது இலங்கைக்கு மிக அண்மித்த இடத்திலேயே அமைக்கப்படுகிறது. ஆதலால் அணு உலையில் வெடிப்போ, கசிவோ அல்லது வேறு ஏதாவது ஆபத்தோ ஏற்படும் பட்சத்தில் அந்தக் கதிர் வீச்சு இலங்கைக்கு வரக்கூடும். அது காற்று, கடல் நீர், பறவைகள் மற்றும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் மருந்துகள் ஊடாகவும் இங்கு வரமுடியம். அப்படியொரு நிலை உருவானால் நாங்கள் செத்து மடிய நேரிடும்.


இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகளுக்கு ஏற்ப, இந்தியாவின் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வட மாகாணம் முழுமையாகவும், புத்தளம் மாவட்டம், திருகோணமலை மாவட்டம் மற்றும் வேறு சில பிரதேசங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். அது திடீர் மரணத்தில் தொடங்கி புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய்களை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அங்கவீனர்களாக பிறக்கக்கூடிய பயங்கரமான நிலைமை உருவாகும்.


இவ்வாறான ஆபத்து கண்ணெதிரே இருக்கும்போது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த அழிவை நிறுத்துமாறு இந்தியாவிடம் கேட்டிருக்கவில்லை. இன்று அரசாங்க அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்று ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மக்களைக் காப்பாற்றுவது என்று பேசுவதற்குப் பதிலாக மனிதர்கள் இறந்தால் இழப்பீடு எவ்வழவு கிடைக்கும் என்பதைக் குறித்தே பேசியிருக்கிறார்கள். எங்களது மரணத்திலும் பணம் தேடுவற்கே அரசாங்கம் தயாராகிறது.

இந்தியாவிடமிருந்து கிடைக்கும் வரப்பிரசாதங்களை எண்ணி எதிர்க்கட்சியில் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியும் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறப்பதே இல்லை. இந்தியா கோபித்துக் கொள்ளும் என்ற பயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதுமில்லை.


இந்த நயவஞ்சகர்களை நம்பி மோசம் போகாமல் எமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக வேண்டும். இந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தென்னிந்திய மக்கள் போராடி வருகிறார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டும். சூழலைப் பாதுகாத்துக் கொள்ள, மீன்பிடித் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள, உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் ஒன்று சேருவோம். ஒன்று சேர்ந்து இந்த அழிவை நிறுத்துமாறு இந்திய - இலங்கை அரசாங்கங்களை வற்புறுத்துவோம்.


-  மக்கள் போராட்ட இயக்கம்