Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஐரோப்பாவை குலுக்கிய போராட்டம்!

altபுதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தெற்கு ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணிகளை நடத்தினார்கள். நூற்றுக் கணக்கான பேர் போலீசுடன் மோதி கைது செய்யப்பட்டார்கள்.

“சிக்கன நடவடிக்கைகள் கொல்கின்றன” என்ற பதாகைகளும் ஆக்கிரமிப்பு முகமூடிகளும், தீப்பந்தங்களும், ஒலிபெருக்கிகளும் ஐரோப்பாவை நிரப்பின. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

“தெற்கு ஐரோப்பாவில் சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போது நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள் அநியாயமானவை, பலனற்றவை என்று அனைவரும் உணர்கின்றனர்” என்கிறார் ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பெர்னாடெட் செகல்.

கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் அமல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. 2.5 கோடிக்கும் அதிகமான ஐரோப்பியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எட்டில் ஒரு தொழிலாளருக்கு வேலை இல்லை. வியாழக் கிழமை வெளியாகவுள்ள புள்ளிவிபரங்கள் ஐரோப்பா பொருளாதார பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்களுக்கு ஆதரவாக பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. பெர்லினின் பிராண்டன்பர்க் வாயிலில் ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர். பெல்ஜியத்திலும் பிரான்சிலும் வேலை நிறுத்தங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன. ஆனால் போராட்டத்தின் மையம் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் போன்ற தென் ஐரோப்பிய நாடுகளில் இருந்தது.

இத்தாலியில் பேரணிகளில் மாணவர்கள் முன்னணி வகித்தனர்.alt

•நேப்பிள், பிரஸ்சியா நகரங்களில் ரயில்வே லைன்கள் மறிக்கப்பட்டன.

•ஜெனோவா நகரில் படகு துறைமுகத்தின் நுழைவாயில் மூடப்பட்டது.

•டூரின் நகரில் ஒரு போலீஸ் அதிகாரி பேஸ்பால் மட்டையால் அடிக்கப்பட்டார்.

•டிரென்டோ, திரீஸ்தே, பாலேர்மோ நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

•பைசா நகரத்தில் சாய்ந்த கோபுரத்தை போராடும் மக்கள் ஆக்கிரமித்தனர்.

•சிசிலியில் கார்கள் எரிக்கப்பட்டன.

•படுவா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

•போலோனாவில் 10,000 பேர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

•மிலான் நகரில் கைகலப்புகள் ஏற்பட்டன.

•வெனிஸ் நகரில் “எங்கள் கடன்களின் மூலம் நீ சம்பாதிக்கிறாய்” என்ற பதாகையை ஒரு வங்கியின் மீது போர்த்தினார்கள்.

•நான்கு ஊர்வலங்கள் நடந்த ரோமில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்த போது வன்முறை வெடித்தது.

.ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போலீஸ் போராடும் மக்கள் மீது ரப்பர் குண்டுகளை சுட்டது.

•கடைகளும் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. ஆளும் மக்கள் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

•பொதுப் போக்குவரத்து, அரசு வானொலி சேவைகள் பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தன.

•ஸ்பெயினின் ஆர்டிவிஈ சேனலின் பிற்பகல் செய்தி கொடி பிடித்த போராட்டக்காரர்களால் குறுக்கிடப்பட்டது.

•மாட்ரிடின் முக்கிய சாலையான காஸ்டெல்லானாவில் கோஷங்களை எழுப்பும் ஆர்ப்பாட்டக்கார்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. “பொது மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், விற்கப்படக் கூடாது” என்று மக்கள் முழக்கமிட்டனர்.

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் சென்ற வாரம் நடந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு போராட்டக்காரர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

•“பலர் குடும்ப ஆதரவிலும், தானமாக கிடைத்த உதவிகளை வைத்தும் மூன்று ஆண்டு பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகின்றனர். அதுவும் தீர்ந்து போன நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பிறகு அனைவரும் தெருவில் இறஙங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார் கோஸ்டால் காபேடான்கிஸ் என்ற இளைஞர். “எதையும் இழப்பதற்கு மிஞ்சாத நிலையில் புரட்சி நடக்கும்” என்கிறார் அவர்.

•தேசிய வன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நைகோஸ் பொகாரிஸ் கிரீஸ் பெரும் வெடிப்பை எதிர் நோக்கியிருப்பதாக அஞ்சுகிறார். “அரசு அதிகாரிகள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். மிகப்பெரும் சமூக எழுச்சியை எதிர் நோக்கியிருக்கிறோம். ஒரு பொறி மட்டும் தான் தேவை” என்கிறார் அவர்.

முதலாளித்துவத்தின் கருவறையான ஐரோப்பாவில் உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிரான போர்ப்பறையை முழக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாளித்துவம் கொல்லும் என்பது அங்கே ஒரு மக்கள் முழக்கமாகி விட்டது.

-www.lankaviews.com/ta