Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் விடுதலையை முன்நிறுத்தி இனவாதத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்

தமிழ்த்தரப்பிற்கு ஓர் ஐயம் இருந்தது! கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்-பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராடுவார்களா என?… இதை கிழக்கு பல்கலைக்கழக தமிழ்-சிங்கள மாணவர்கள் ஐயத்திற்கு இடமின்றி முறியடித்துள்ளனர். இதைவிட தமிழ்த்தரப்பிற்கு உள்ள அடுத்தொரு கவலை மாணவர்கள் போராட்டம் சிங்கள மக்களை உள்ளடக்கிய நாடுதளுவிய போராட்டங்களாக நடைபெறக்கூடாது என்பதாகும். இக்கவலை அரச தரப்பிற்கும் இல்லாமல் இல்லை. இந்நிலை கொண்ட செயற்பாடுகளே தற்போது தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழர்தரப்பு இந்நிலையைக் சுட்டிக்காட்டி (போராட்டங்கள் தேசியமயப்பட்டுவிடும் என்ற பயம்) அரசிடம் பேரம் பேசும் நிலையில் உள்ளது. மறுபுறத்தில் அரசு தென்னிலங்கையில் போராடும் சக்திகளை, சிங்களப் புலிகளாக சித்தரித்துக்காட்டி அவர்களை தேடும் முயற்சியிலும், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், போன்ற பலவேலைகளிலும் இறங்கியுள்ளது. பொத்தாம் பொதுவாக பேரினவாத்திற்கும், தமிழ்த்தேசியத்திற்குமான தேவை, தம் இனவாத அரசியலை பெரிதாக்கி நடைபெறும் போராட்டங்களை இல்லாதாக்குவதே.

இந்நிலையில் இவ்வினவாத தார்ப்பரியங்களை (தேடும் முயற்சிகளுக்கு மத்தியிலும்) முறியடித்து முன்னேறும் வகையில் போராடும் சக்திகளும் தங்களின் தந்திரோபாயங்களைப் பாவித்து தொடர் போராட்டங்களாக முன்னெடுக்கவுள்ளார்கள். அதற்கான வேலைகள் நடைபெறுவதை அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சாராம்சத்தில் மாணவர்கள் போராட்டங்கள், இனவாதத்தை முறியடிக்கும் போராட்டங்களாகவே முன்னெடுத்து முன்னேறும். இது இவ்வாறிருக்க 04.12.2012 (நாளை) தமிழ் மக்களுடைய உரிமைகளை முன்னிறுத்தி, வடக்கில் நடைபெறும் போராட்டத்தை தென்பகுதியில் ஊடக பிரச்சாரமாக மக்கள் போராட்ட இயக்கத்தினர் முன்னெடுக்கவுள்ளனர்.