Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களிற்கு ஆதரவு: புதிய திசைகள்

அடக்குமுறைக்கெதிராக போராடும் தமிழ் தேசிய இனத்தின் துடிப்பான மாணவர் மற்றும் இளையோர் அணிகளை கலாச்சார சீரழிவுகள் மூலம் திசை திருப்பி, அல்லது அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்குகின்றது ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசு. இதன் மூலம் தமிழ் தேசிய இனம், தனது அடிப்படை உரிமைகளை கூட ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசிடமிருந்து போராடாமல் பெறமுடியாது என்று மீண்டும் மீண்டும் அடித்துக்கூறுகிறது.

தமிழ் தேசிய இனத்தின் விடிவிற்காக உயிர் நீத்த மாவீரர்களை, உறவுகளை, நண்பர்களை நினைவு கூறும் உரிமை, அணைத்து தமிழ் மக்களினதும் அடிப்படை உரிமை.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளிற்காக, அடக்குமுறைகளிற்கெதிராக தொடர்ந்து முன் நின்று போராடிய பாரம்பரியத்தை கொண்டவர்கள், பெரும் பங்களிப்பு வழங்கியவர்கள். இவர்கள் மீதான இந்த நினைவு கூறும் அடிப்படை உரிமை மறுப்பு, இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதல்கள், தாக்குதல்களிற்கெதிரான போராட்டம் மீதான வன்முறை, அதனை தொடர்ந்து நிகழ்ந்த கைதுகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசின் தீவிர இன ஒடுக்குமுறையை தெளிவாக கூறுகிறது.

இந்த ரீதியில் ,ஸ்ரீ லங்கா அரசின் அடக்குமுறைகளிற்கு எதிரான யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களிற்கும் எமது தார்மீக ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

இந்த போராட்டம் உடனடி தேவையான மாணவர்களின் பாதுகாப்பு ,ஒடுக்குமுறையின் பக்க விளைவான கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை என்பதுடன் மட்டும் குறுகிவிடக்கூடாது, திசைதிரும்பவும் கூடாது. போராட்டத்தின் ஆரம்பமே உயிர் நீத்த மாவீரர்களை, உறவுகளை, நண்பர்களை நினைவு கூறும் அடிப்படை உரிமை மறுப்பு தான்.இது போன்ற தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள் மறுப்பு, ஸ்ரீ லங்கா அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறை என்பதில் தெளிவோடும் உறுதியோடும் அணைத்து தேசிய முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும், சமூகமாற்றத்தை விரும்பும் சக்திகளுடனும் இணைந்து இந்த மாணவர்கள் போராட்டம் தொடரவேண்டும் என்று கூற கடமைப்பட்டுள்ளோம்.

இனங்களை கடந்து சிங்கள மாணவ சமூகம் தமிழ் மாணவர்களின் உரிமைகளிற்கும் ,போராட்டங்களிற்கும் ஆதரவு தெரிவிக்கும் நிலை இன்று தோன்றியுள்ளது .இந்த நட்பு சக்திகளுடன் இணைந்து அணைத்து இன மாணவர்களின் உரிமைகளிற்காக போராடுவதன் மூலம் உறவுகளை பலப்படுத்த முடியும் . தமிழ் தேசிய இனம் போராடிக்கொண்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மறுப்பு, இன ஒடுக்குமுறை என்பனவற்றிக்கான ஆதரவையும் பெற முடியும் என்பது எமது நிலைப்பாடு.

புலம் பெயர் தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்காலின் பின் தோன்றியுள்ள புதிய கள நிலைமையை ,பாதிக்கும் காரணிகளை,சாத்தியமான போராட்ட முறைகளை நிதானமாக தொலை நோக்கோடு மறுஆய்வு செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.தமிழ் சிங்கள மாணவர்கள் தெளிவாக தமது எதிரியை இனம்கண்டு போராடும் வேளையில் அந்த போராட்டங்களிற்கு வலு சேர்க்கும் விதமாக புலம் பெயர் அமைப்புகள் இருக்க வேண்டும். இந்த போராட்டத்தை மக்கள் நலனை முன்னிறுத்தாது திரிபு படுத்தி பார்ப்பார்களேயானால் ,அது தமது குறுகிய இலக்குகளிற்கு சாதகமாக பயன்படுத்துவதிலும், அல்லது திசை திருப்பி மீண்டும் எதிரியிடம் அல்லது எதிரியின் நண்பர்களிடம் சரணடையவதிலோ அல்லது காட்டிக்கொடுப்பதிலுமே முடிவுறும் என்று நினைவுபடுத்துகிறோம்.

தமிழ் மாணவர்களின் உரிமைகளிற்கும் ,அவர்களின் போராட்டங்களிற்கும் ஆதரவு தெரிவிக்கும் சிங்கள மாணவர்களின் போராட்டங்களை வரவேற்கிறோம்.இந்த சிங்கள மாணவர்களின் ஆதரவினூடாக தமிழ் மாணவர்கள் தொடர்ந்த கருத்து பரிமாற்றங்களினூடு அணைத்து இனங்களின் பொது எதிரிக்கு எதிராக மாணவ சமூகம் அணி திரள எமது வாழ்த்துகள்.

புதிய திசைகள்

தார்.