Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ். பல்கலை மாணவர்கள் 10 விசாரணைக்கு அழைப்பு: 6 பேர் பொலிஸில் ஒப்படைப்பு!!

altயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆறு பேர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் மற்றும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்களாக ஆறுபேர் இன்று (06) மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ பீடத்தை சேர்ந்த ஐவர், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மூவர் என 10மாணவர்களை விசாரணைக்கென ஒப்படைக்குமாறு பொலிஸாரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படியே இம்மாணவர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவரையும், மருத்துவ பீடாதிபதி மற்றும் அம் மாணவர்களது பெற்றோர்கள் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன், முகாமைத்துவ பீடாதிபதி மற்றும் துணைத் தலைவருடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் விஞ்ஞானபீட மாணவர்கள் மற்றும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மற்றைய மாணவன் ஆகிய நால்வரும் இன்று மாலை பொலிஸில் ஒப்படைக்கப்படுவர் என தெரிவித்திருந்த போதும் அவர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்களா? இல்லையா என்பது குறித்த தகவல் தெரியவில்லை என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவர் தொடர்ந்தும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-lankaviews.com/ta