Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அறிவுஜீவிகளிடம் காணப்படும் சில தன்மைகள்!!!

சமூகத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றார்கள். புத்திஜீவிகளின் வர்க்க நிலைப்பற்றிய பார்வையை கொடுக்கும் முகமாக மேற்கொண்ட தலைப்பின் கீழ் ஆராயப்படுகின்றது. அறிவுஜீவிகளின் வர்க்கப் பின்புலமும் அவர்கள் எவ்வாறு புதிய வர்க்கமாகவும் மாற்றம் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம். அறிவாளிகளின் பின்னால் இருக்கும் வர்க்கத்தின் சிந்தனையை பகுத்தறிவதும் முக்கியமானதாகும். சமூகத்தின் பொருளாதார அமைப்பு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறே சமூகத்தின் சிந்தனைகள் இருக்கின்றது. இதிலிருந்து தான் மனிதர்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இன்றைய உலகில் ஆய்வாளர்கள் அறிஞர்கள் கவிஞர்கள் என்று பற்பல துறையினர் எழுத்துலகில் இருக்கின்றார்கள். அவர்களின் கருத்துக்கள் சமூகத்தில் பலவேறு ஊடகங்கள் ஊடாக சமூகத்திற்கு செல்கின்றது. இதில் குறிப்பாக மார்க்சீயம் பேசுபவர்கள் மார்க்சீயம் பேசா எழுத்தாளர்கள் என்று இருக்கின்றார்கள். அவர்கள் தமக்கு அந்த சித்தாந்தம் தெரியாது அல்லது தேவையில்லை அல்லது அது பற்றி அறிமுகம் அற்றவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் ஏதோவகையில் நேர்மையானவர்கள். ஆனால் மார்க்சீயம் பேசுபவர்கள் இன்றைய உலகில் நிறையப்பேர்கள் உள்ளார்கள். இவர்களின் பல தளங்களில் செயற்பட்டுக் கொண்டு இருப்பவர்கள். அறிஞர்களாக விமர்சகர்களாக மற்றவர்களை தம் புலமையின் காரணமாக மற்றையவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர்.

கல்விசார் முறைமைக் கோட்பாடுகள்

இன்றைய கல்விசார் உலகில் மானிடவியல், சமூகவியல், உளவியல் வரலாறு என்ற பாடநெறிகளுக்குள் அந்த பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போது அணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாக பாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்து இருக்கின்றது ஒரு புறமிருக்க) இவர்கள் Sturcturalism> functionalism (pil Durkheim)> sturctural functionlism (Levi Struss) <conflict perspective> marxism. பின்நவீனத்துவம், நவமார்க்சீசம் (அகநிலைவாத) என்று புதிய புதிய அணுமுறைகளை புகுத்துவது இன்றைய கலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம்.

இந்த அணுகுமுறைகளை எழுத்தாளர்கள் என்ற சிறிய வட்டத்தினுள்ள புகுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான கல்வித்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான ஊழியர்களை உருவாக்க வேண்டியது தேவையாகும். அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படும் அறிவுசார் பிரிவினர்கள் சமூகதளத்தில் தமது புலமைகளை வெளிப்டுத்த நுழைகின்றனர். இவர்களின் கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு) இவர்கள் கொண்டுள்ள பல்வேறு இசங்களை (ISM) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விட மேலாண்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள்.

இவ்வாறான இசங்களின் (ISM) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துக்களினால் ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையான மக்கள் நலம் கொண்டவர்களிடயே ஆழுமையையும் மயக்கத்தையும் உண்டு பண்ணுகின்றார்கள்.

சிந்தனையின் வேர்

இன்றைய எழுத்துலகில் இருக்கும் சிந்தனையாளர்கள் மார்க்சீய அணுகுமுறை கொண்டு சமூகத்தை ஆராய்கின்றனர். எமது தேசங்களில் நடைபெற்ற இயக்க அரசியலில் இருந்து பெறப்பட்ட மார்க்சீய அறிவே அடித்தளமானதாக இருக்கிறது. மேற்கு நாடுகளில் இருக்கின்ற பொதுவுடமைக் கட்சிகள் கல்வித்திட்டத்தை தாமே உருவாக்கி தமது ஊழியர்களுக்கு பயிற்றுவிக்கின்றது. இவ்வாறான சூழல் என்பது எமது தேசங்களில் உருவாக்கப்படவில்லை. ஆனால் ஜே.வி.பியினர் 5 தலையங்களைக் கொண்ட வகுப்புக்களை நடத்தி கட்சியில் இணைத்திருக்கின்றனர். இவை போதுமான இருக்கும் என்பது சந்தேகமாகும்.

இன்று ஆதிக்கம் செய்யும் தமிழ் மார்க்சீயவாதிகளில் பெரும்பான்மையின் தமிழ் தேசியமையவாத்தின் ஊடாக மார்க்சீயத்தினை கற்ரறிந்துள்ளனர். இந்தப் பரம்பரைக்கு மார்க்சீயத்தினை கற்றரறிந்தவர்கள் ஊடாக பெற்ற அடிப்படை மார்க்சீயக் கல்வி கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

இவர்கள் மார்க்சீயத்தை தேசத்தில் எவ்வாறு பிரதியிடலாம் என்பது பற்றி ஆய்வு செய்பவர்களாகவும். அதேவேளை சமூகத்தைப் பற்றிய சரியான ஆய்வு செய்யபவர்களாகவும் நிலைநிறுத்துபவர்கள். கடந்த 20 வருட பத்திரிகை, சஞ்சிகை ஊடாக இவர்களை அவதானிக்கின்ற போது தாம் கூறும் மார்க்சீயச் சிந்தனையே சரியானதாக நிலை நிறுத்துகின்ற போக்கினை அவதானிக்க முடியும். மார்க்சீயத்தினை மறுபடியும் மறுபடியும் திரும்பத்திருப்ப வாசிப்பதன் மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற சிந்தனை மறுப்பவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடியும். மார்க்சீயத்தினை எவரும் மாற்றம் செய்ய முடியாது. மார்க்ஸ் கற்றுத் தந்த, அவர் கண்டுபிடித்த விஞ்ஞானம் என்பது மாற்ற முடியாத நிலையில் இருக்கின்றது. ஆனால் எமது சமூகத்தினை ஆராந்து படித்தறிந்து கொள்வதற்கு தடையாக எமது சிந்தனை இருக்கின்றது. அது எந்தவகைச் சிந்தனை என்பதை நாம் எம்மை மறுவாசிப்புக்கள் ஊடாகவே புடம் போட்டுக் கொள்ள முடியும்.

இந்த சமூகத்தின் தன்மை

இந்த சமூக உற்பத்தியின் உறவின் காரணமாக இருக்கின்ற சிந்தனை என்பது அவதானிக்கப்பட வேண்டும். அரைநிலபிரபுத்துவத்தின் சிந்தனை என்பது மறுவுற்பத்தி செய்கின்ற சமூக அமைப்பே இன்றிருக்கின்றது.

ஈழப்போராட்ட வரலாற்றில் (ஒடுக்கப்பட்டவர்களின்) பஞ்சப்பராரிகளின் தத்துமானது சரியான வகையில் மண்ணில் பிரதியீடு செய்யாமைக்கு சமூகத்திலிருந்தும், அவர்களின் குருக்களிடம் இருந்து பெறப்பட்ட சிந்தனையே காரணமாகும். கடந்த காலங்களில் இயக்கங்களின் மேல்மட்டமானது, சமூகத்தின் மேல் வகுப்பைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்பட்டது. இவர்களே அமைப்பின் கொள்கைகளை தீர்மானித்தனர். இப்படி இருக்கையில் தம்மையே (இருப்பை) அச்சுறுத்தக்கூடிய தத்துவத்தை எவ்வாறு தேசத்தில் பிரதியிடுவார்கள்? மார்க்சீயக் கல்வி குருசீடன்முறையில் அமைந்த அரசியல் வகுப்புமுறைக்கு அப்பால் போராட்ட காலங்களில் வளரவில்லை. பழைய சமூக உறவின் தன்மைகளைக் கொண்ட மனிதர்களே புலம்பெயர் தேசங்களிலும் மார்க்சீயத்தினை தமது அறிவிற்கு ஒப்ப பத்திரிகை, சஞ்சிகைகளை கொண்டு வந்தனர். மார்க்சீயம் பற்றிய அறிதல் என்பது அனுபவ மற்றும் கேள்வி ஞானத்தில் அமைந்தாகவும் சமூகத்தின் சிந்தனை எச்சங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றது.

பழைய சமூகப் சிந்தனையின் தொடர்ச்சியாக சிலர் தாம் சமூகத்தில் பத்துப் பேராவது தம்மைப் பற்றி கதைக்கவேண்டும், இச்சமூகத்தில் தானும் ஒரு இலக்கியவாதி, அரசியல் விமர்சகர் எனப்பெயர் எடுக்கவேண்டும், என்ற அடிப்படையில் சகமனிதர்களைப் பாவிப்பது, இதன்பொழுது எவரையும் தம் நலனிற்காக பலியிடவும் தயாராக இருப்பது.

பாசிசவாதிகள் அதிகார உச்சியில் இருந்து விட்டு பிற்பாடு அதிகாரத்தில் இருந்து இறங்கி வருவதற்கு அவர்களால் இயலாது காரணம் அவர்கள் அதிகாரத்திலிருந்து இறங்கும் போது அவர்கள் இருப்பு என்பது கேள்விக் குறியாகின்றது, இதன் பொருட்டு தமது இருப்பை நிலை நிறுத்தும் பொருட்டு மென்மேலும் அடக்குமுறை, கொலை பாதகம் புரிகின்றனர். இதன் ழூலம் தமது பதவியை காப்பாற்றிக் கொள்கின்றனர். பாசிசவாதிகளுக்குள்ள குணாம்சத்தைப் போல இலங்கை, உட்பட அரைநிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகளை கொண்டதாக காணப்படுகின்றது. இதனை நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சம் எனலாம். அதாவது ஒருநபர் ஒரு குறிப்பிட்ட பதவியை வகிக்கின்றார் எனில் அவர் அப்பதவியை விட்டு விலகுவதற்கு எப்பவும் தயாராக இல்லை காரணம் பதவியை விட்டு விலகுவதென்பது கௌரவம் விட்டுப் போய் விடுவது என்பது ஆகும். இந்த மனோநிலையானது மக்கள் விமோசனம், புரட்சி, விடுதலை என உரக்கப் பேசுபவர்களிடமும் காணப்படுகின்றது. இப்படிப்பட்ட மனோநிலையானது அமைப்பை போராட்டத்தை அழித்துவிடுகின்றது. இதை சரியாக் கணிப்பிட்ட சீனத்தின் மேதை கலாச்சாரப் புரட்சியின் போது பல பஞ்சப்பராரிகளின் விடுதலைக்கு எதிரானவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்கப்பட்டனர்.

சமூகத்தில் முகத்தை இழப்பது என்பது பெரிய விடயம். சமூகத்தில் பலர் தற்கொலை கூடசெய்து கொள்கின்றனர். இந்த சமூக அமைப்பானது பல எழுதாத விதி முறைகளை கொண்டுள்ளது. இதனை மீறுவது இச்சமூகத்தில் இருந்து அந்நியப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இதன் காரணமாக சமூகத்தின் ஏளனத்துக்கும் ஆளாகின்றோம். இச்சமூக அமைப்பின் நெருக்குதல்களுக்கு பணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதினால் முகத்தை இழப்பதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புவதில்லை. இதன்காரணமாக தொடர்ந்தும் வரட்டுத்தனமான போலி கௌரவம், மரியாதை, என்பவற்றை பாதுகாத்துக் கொண்டு வருகின்றோம். (இதன்காரணமாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதில் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. இதனால் ஒரு அமைப்பை சீரழிவிற்கே இட்டுச்செல்கின்றது.)

இவ்வாறான நிலை காரணமாக தம்மிடையே அணிசேர்ப்புக்கள் இடம்பெறுகின்றது. கருத்துக்களம் என்பதற்கு அப்பால் தனிமனித முகங்களை பாதுகாக்கும் அணி உருவாகிக்கின்றது.

ஒருவர் ஒரு விடயத்தை தெரிந்து கொண்டால் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் விருப்பமின்மை (இங்கு அமைப்பு இரகசியத்தினை குறிப்பிடவில்லை) ஏனெனில் மற்றவர் மீதுள்ள கட்டுப்பாடு சீர்குலைந்து விடும் அல்லது கட்டுப்பாடு இல்லாது போய்விடும் என்பதாலேயாகும். எப்பவும் மற்றவர்களை தமக்கு கீழ் வைத்திருக்கும் போது தமக்கு நிகரான ஒரு போட்டியாளன் உருவாகமாட்டான் என்ற நம்பிக்கையாகும். ஒரு பிராமண மந்திரத்தை கற்றுக்கொடுக்கும் போது அனைத்து மந்திரத்தினையும் முழுமையாக கற்றுக் கொடுப்பதில்லை என்பார்கள். ஏனெனில் முழுமையாக கற்றுக்கொடுத்தால் தன்னை விடஉயர்ந்தவனாக வந்துவிடுவான் என்பதேயாகும். போட்டி மனப்பான்மை காரணமாக இவ்வாறு இடம்பெறுகின்றது. ஒரு மனிதன் தனக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதன் மூலம் தான் வாழுவதற்காக கிடைக்கின்ற வளத்தை இழக்க விரும்புவதில்லை. காரணம் இச்சமூக அமைப்பில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக தனக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தவறவிடாது அடைவதன் மூலம் தனது தேவைகளை தீர்க்க முயற்சிக்கின்றார்கள் இப்படிப்பட்ட மனப்பான்மை மனிதர் தனது பதவியைக் காப்பாற்றும் பொருட்டு அமைப்பினுள் தமது ஆளுமையை கல்விப்புலமையை பிரயோகித்து சாதித்துக்கொள்கினர்.

இன்றுமொன்று குரு சீடன் உறவு முறையாகும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் படிப்பிக்கும் போது மாணவர்களை கதைக்க விடுவதில்லை, தான் கூறுவதுதான் சரி அதாவது ஆசிரியர் பிழையாக பாடம் கற்பிப்பாராயின் அதனையும் மாணவர்கள் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இதேபோன்ற நிலை ஒரு அமைப்பினுள்ளும் தலை தூக்கின்ற நிலமைகளை கடந்தகால போராட்ட வரலாற்றில் இருந்து பெறமுடிகிறது. பெரியவன் சிறியவன் என்ற தன்மையின் வெளிப்பாட்டினை இயக்கங்களுக்குள் அதிகமாக காணக்கூடியதாக இருந்தது. இத்தன்மையின் வெளிப்பாடானது எம் சமூகத்தில் காணப்படுகின்ற உறவு முறைகளில் இருந்து பெறப்பட்டது எனக்கருதுகின்றேன். சிறு வயதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவெனில் பெரியவர்களை அண்ணன், அக்கா, மாமா, மாமி எனக் கூப்பிடும் படி கற்றுத்தந்துள்ளனர் நமது பெரியவர்கள். இதன் மூலம் பெறப்பட்ட பழக்கங்கள் நம்மை இலகுவாக குரு சீடன் மனப்பான்மையில் ஆட்கொள்ள வைக்கின்றது. இவ்வாறான அரைநிலப்பிரபுத்துவ எச்சங்கள் மீதான சமூக உறவுமுறை புரையோடிப்போயும் உள்ளது.

தனித்துவவாதம்

தனிமனிதருக்கான நுகர்வின் நோக்கம் கொண்டும் தனிமனிதர்களின் உரிமையை முன்வைத்து செயற்டும் போக்கும் இருக்கின்றது. தனிமனிதர்களின் தேவையை மற்றும் உரிமையை சமூகத்தின் உறுப்பினர் தேவையில் இருந்து நோக்குவதில்லை. தனிமனிதர்களின் தேவையில் இருந்து சமூகத்தைப் பார்ப்பதான தாராளவாதச் சிந்தனையை சமூகத்தில் கல்விகற்றவர்களாலும், கைநிறைய சம்பளம் எடுப்பவர்களாலும் முதலில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவ்வகையான தாராளவாதச் சிந்தனை கூட்டுச் செயற்பாடுகளை ஒரு அமைப்பில் பங்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த வகை அறிவுஜீவிகள் ஒரு அமைப்பினுள் இணைந்து வேலை செய்வதற்கு தயாரில்லாத ஒரு அணியாக இருந்து தனித்துவவாத சிந்தனையை சமூகத்தினுள் திணிக்கின்றனர். மேற்கைப் பொறுத்த வரை தனித்துவாத சமூக உறவிற்குள் முழுமையாக தம்மை இணைத்துக் கொண்டவர்கள்.

ஆனால் வளரும் உலகமயமாதலின் பிடியினுள் சிக்கியிருக்கும் இலங்கை இந்தியா போன்ற நவகாலனிய தேசங்களில் உயர்கல்விகற்றவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் மூலதன வல்லமை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மூளை உழைப்பை வழங்குகின்ற போது

சாமானியர்கள் தமது உடலுழைப்பை வழங்குபவர்களை விட அதிக ஊதியத்தை பெறக்கூடியதாக இருக்கின்றனர். இவர்களின் தேவை இன்னும் இன்றும் சமூக ஏறுநிலைக்கு செல்வதே முனைப்பாக இருக்கும்.

முகாம்கள் மாறும் நபர்கள்

முன்னர் முற்போக்கு முகாம்களில் இருந்தவர்கள் பின்னர் பிற்போக்கு முகாம்களுக்குச் செல்வதும் முன்னர் நம்பியதாக காட்டிக் கொண்ட கருத்துக்கு முரணாக நடப்பதையும் நாம் வாழ்க்கையில் சந்திந்து இருக்கின்றோம்.

இன்றைய இனவெறி அரசியல் அங்கம் வகிக்கும் பல முன்னைய மார்க்சீயர்களில் பெரும்பகுதியினர் இவ்வாறுதான் மக்கள் முன் பிரபல்யமாக வந்தவர்கள் (இங்கு நபர்களின் பெயர்கள் அவசியமற்றது). இதேபோல புலிகள் இருந்த போது பல போலி இடதுசாரிகள் புலிகளின் பாசீசத்திற்கு தந்துவ விளக்கங்கள் கொடுத்தனர். இன்றும் குறுந்தேசியவாத்தினை வளர்ப்பற்கும் துணைபோகின்றனர்.

இவ்வாறு சந்திரிக்கா இருந்தபோது பலர் அவருக்கு ஆலோசகர்களாக பல பிரபல்யமான “இடதுசாரிகள்” இருந்திருக்கின்றார்கள். இவ்வாறான பிரபல்யங்கள் கட்சி மாறுவது முகாம் மாறுவது எல்லாம் ஒரு இனத்திற்குகோ அல்லது நாட்டவருக்கோ தனித்துவமான குணாதிசயமாக கொள்ளத் தேவையில்லை. இவை ஒரு வர்க்கச் சிந்தனை சார்ந்த நிலைப்பாடாகும். நாம் பேசும் கொள்கைக்கும் செயலுக்குமான இடைவெளி இந்த சமூக உற்பத்தி உறவுடன் அதாவது இந்தப் பொருளாதார அமைப்பின் மீது கட்டப்பட்ட சமூக அமைப்பானது, இந்த பொருளாதார நலனுக்கு ஏற்றவாறாக உருவாக்கப்படும் கவ்வி, மதம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றால் உருவாக்கப்படும் சிந்தனைகள் எம்மிடம் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவ்வகை நிறுவனத்தினால் மறுவுற்பத்தி செய்யும் அறிவுஜீவுகள் தேசத்தின் தலைவிதியை மாற்றுகின்ற சக்தியாக விளங்குகிறது.

இவர்கள் அரசியல் பின்புலம் தன்னார்வ நிறுவனங்கள் போடும் தீனியை பெற்றுக் கொண்டு தமது வாழ்வையும் வளத்தையும் பெருக்கிக் கொள்ளும் நபர்களாக உருவாகின்றனர். அறிவுசார் பிரிவினர்கள் இந்த சமூகத்தை எழுச்சி பெற வைப்பதற்கு எவ்வளவு முக்கியமோ. அந்த மக்களை எழுச்சியடையாது கட்டிப்போடுவதற்கும் முக்கியமாகும். இவ்வாறு உருவாகும் நபர்கள் (புரட்சிகர கட்சிசார) சுதந்திர எழுத்தாளர்களாகவும் எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கின்றது (இதை மறுக்கவில்லை) என்றும் அமைப்புக்கு வெளியில் இருந்து கொண்டு புரட்சிக்கு விசுவாசமான கருத்தைக் கூறுவதாக பிரகடனப்படுத்திக் கொண்டு எதிர்ப்புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

ஆய்வு முறைமை மார்க்சீயமும் - புரட்சிகர மார்க்சீயம்

ஆய்வு முறை மார்க்சீயம் மேற்கத்தைய கலாசாலையில் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி திட்டமாகும். பல்கலைக்கழகங்களில் மார்க்சீயம் கற்பது இன்றைய காலத்தில் ஒரு தடைசெய்யப்பட்ட ஒரு பாடமாக இல்லை. மார்க்சீயத்தை மிகவும் நுட்பமாகவும் தெளிவுடனும் சமூகவியல். மானிடவியல். உளவியல். வரலாற்றுத் துறை என்று முரண்பாட்டு கோட்பாட்டில் இருந்து ஆய்வுசெய்யும் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக ஆய்வுமுறைமை மார்க்சீயம் பல்கலைக்கழகங்களில் வளர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் உற்பத்தியே இன்றைய நவீன எழுத்தாளர்களும் ஆய்வாளர்களில் முன்னணி வகிப்பவர்களாவர். இதில் இன்னொரு பகுதியினர் நவமார்க்சீயர்கள் (அகநிலைவாதிகள்) என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இவர்களின் ஆய்வுகள் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ அமைப்புக்குள்ளாகவே தீர்வு கொடுப்பதற்கான வழிமுறைகளையும் பொறிமுறைகளையும் உருவாக்கும் நபர்களாக இருக்கின்றார்கள்.

இவ்வாறே எமது (இந்திய, இலங்கை) நாடுகளில் உள்ள கல்விப் பின்புலத்தில் இருந்து வந்த மார்க்சீய ஆய்வாளர்களும் ஆகும். இவர்களின் அறிவு அல்லது மார்க்சீயப் பார்வை சரியான ஆய்வைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இதில் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை சரியாக புரிந்து கொண்டு ஆய்வுகள் இடம் பெறும் போது பிரச்சனைக்கான காரண காரியங்கள் இயங்கியலுக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஆனால் கல்விசார் ஆய்வு முறைமை பயன்படுத்தும் ஆய்வாளர்களும் ஆய்வு முறையும் புரட்சிக்கு பங்கு வகிக்கின்றதா? இதுவே தான் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது. ஒரு தனிமனிதனின் ஆய்வு முடிவுகள் சரியாக இருக்கின்ற போது அவர்கள் சமூகத்தின் இயங்கு தளத்தில் பணியாற்றுவதும் ஆளுமை செலுத்துவமாக இருக்கின்றனர்.

இவர்களின் ஒரு பகுதி முற்போக்குத் தளத்தில் இருந்து கொண்டு சமூக மாற்றதிற்காக பணியாற்றுவதாக கூறிக்கொள்கின்றனர். இவர்கள் ஒரு புரட்சிகர கட்சிக்கு உட்படாத மனிதர்களாக இருக்கும் வரை இவர்களின் கருத்து எப்பொழும் புரட்சிக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இவ்வாறாக புரட்சி பேசிய பிரமுகர்களை நாம் வரலாற்றில் பலரைக் கண்டுள்ளோம்.

இன்று புரட்சிகர சக்திகள் எதிர்நோக்கும் சவால் என்னவெனில் முரண்பாடு ஆய்வு முறைமையில் இருந்து வெளியாகும் ஆய்வுகளையும், அதன் பிரதிநிதிகளினால் வரும் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளையும் எவ்வாறு எதிர் கொள்வதாகும். கல்விசார் முறைமைபற்றி அறியாமை தான் பெரும்பான்மையான மக்கள் பலியாகின்றனர். இன்று மார்க்சீய பின்புலத்தில் இருந்து வந்த அரசியல்வாதிகளின் எதிர்வினையை எதிர்க் கொள்ளவும் பரந்து பட்ட மக்களை தயார் செய்தல் வேண்டும்.

இன்று இலங்கை அரசியலில் மக்களை அரசியல் ரீதியாக மொட்டையடிக்கும் சிந்தனையான சாத்தியவாத நாசகார அரசியலை முன்மொழிந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் அரசியலை முடியடிப்பதற்கும் தயார்படுத்தல் வேண்டும். சாத்தியவாத கவர்க்சிவாத அரசியல் சிந்துவிளையாட்டுக்களை கலாசாலை சார் ஆய்வு முறைமையையும் மார்க்சீய பரீட்சையம் உள்ளவர்களாலும் செய்ய முடியும்.

இந்தப் போக்கு காற்று எந்தப் பக்கம் வீசுகின்றதோ அந்தப் பக்கத்திற்கு சார்ந்து நிற்கின்றது. சாத்தியவாதம் எனும் போது தமது அரசியலை அவர்கள் எது சாத்தியமானது எதுவெனப்பட்டதோ நிறைவேற்றிட முனையும் படி திணிக்கின்றனர். இவர்கள் கோட்பாடானது சாத்தியமானது எனப்பட்டதை தெரிவு செய்தல் வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். வன்முறை, கிளர்ச்சி என்ற நிலையில்லாமல் செய்யக் கூடியதை செய்வோம் என்பது சந்தர்ப்பவாதப் போக்கு மாத்திரமல்ல மார்க்சீயத்தை திரித்து தமது வர்க்க நலனுக்காக பயன்படுத்துவதாகும்.

இறுதியாக:

இந்த அறிவுப் பிரிவினரின் செயற்பாடுகள் இலங்கைப் புரட்சிக்கு பாதகமாகவே செயற்படுகின்றனர். இதனை இன்று மார்க்சீயம் பேசிக் கொண்டு இனவெறிரசுக்கு சாமரம் வீசிய தமிழ் அமைப்புக்களும் சரி சிங்கள போலி கம்யூனிஸ்டுக்களும் சரி திரிபுவாதத்தை வௌ;வேறு வகை சொல்லாடலில் இருந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். முன்னர் குறிப்பிட்டது போன்று மார்க்சீய அறிவுப்புலமை ஒடுக்குமுறையானதுக்கு துணைபுரிகின்ற போது அவை எதிர்ப்புரட்சிக் கூறாகும்.

குட்டி முதலாளிய சிந்தனைவாதிகள் அறிவுஜீவிகள் புரட்சிக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றில்லை. ஈழப்போராட்டத்தில் மார்க்சீயம் பேசிய நகர்புற குட்டிமுதலாளிய வர்க்கத்தை சேர்ந்த அன்றைய அமைப்புக்களில் உள்ளவர்களைப் போல தான் இப்போ பல பிரமுகர்களும், இலக்கியவாதிகளும், ஆய்வாளர்கள் சமூகத்தில் இருகின்றார்கள்.

இது எல்லாம் நகர்புறபுத்திஜீவிகளின் இலக்கு என்பது சமூகத்தின் முன்னரங்கிற்கு வருவது. அதிலும் குறிப்பாக இளம் வயதியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத விடலைப் பருவத்தில் இலகுவாக இருக்கின்றது. பின்னரான காலம் கல்வித் தகமை சமூக அந்தஸ்து, என பெயர்கள் வந்த பின்பு இன்னும் இன்னும் முன்னுக்கு வரத்துடிப்பதுதான் குட்டி முதலாளிய வகுப்பினரின் இறுதியிடம். ஆகவே குட்டி முதலாளிய வகுப்பினராகிய அறிவு வர்க்கத்தவர்களை இளம் வயதில் புகழ்வது போற்றுவது என்பது ஒரு கட்சிக்கு வெளியே சாதாரண விடயம். இவர்கள் போல பல குட்டி முதலாளிய வர்க்க அறிவுயீவிகள் இடதுசாரிகள் என்ற முகமூடி அணிந்து இருக்கின்றார்கள். இவர் இன்னும் பலபேர் வருவார்கள் இவர்களை இட்டு அதிர்ச்சி கொள்ளத் தேவையில்லை.

 

குறிப்பு: கட்டுரையின் நீளம் கூடியமை காரணமாக பின்னூட்ட வசதி செய்ய முடியவில்லை. உங்கள் பின்னூட்டங்களை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சலிற்கு அனுப்பினால் இங்கு பிரசுரமாகும்.

பின்னூட்டம்1:

நாகலிங்கம்

"பழைய சமூகப் சிந்தனையின் தொடர்ச்சியாக சிலர் தாம் சமூகத்தில் பத்துப் பேராவது தம்மைப் பற்றி கதைக்கவேண்டும்இ இச்சமூகத்தில் தானும் ஒரு இலக்கியவாதி-அரசியல் விமர்சகர் எனப்பெயர் எடுக்கவேண்டும்என்ற அடிப்படையில் சகமனிதர்களைப் பாவிப்பது இதன்பொழுது எவரையும் தம் நலனிற்காக பலியிடவும் தயாராக இருப்பது." போன்றவர்கள் மிக ஆபத்தானவர்கள்!