Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டம்

தமிழ் மக்களின் உரிமைகாக போராடப் புறப்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கும், மேற்கு தேசங்களுக்கும், இந்தியாவிற்கும், புலம்பெயர் சொத்துப்புலிகளின் சமிக்கைக்காக காத்துக் கிடக்கின்றனர். இந்த வேளையில் தமிழ் மக்களின் உரிமைக்காக தெற்கில் இருந்து யாழ் சென்று போராடிய 09.12.11 அன்று மாலை 05 மணியளவில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்காக மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண அமைப்பாளர் லலித் குமார் வீரரராஜூ மற்றும் குகன் முருகன் ஆகியோர் ஆவரங்கால் பிரதேசத்தில் உள்ள குகன் முருகனின் வீட்டிலிருந்து NP GT 7852 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போது கடத்தப்பட்டனர்.

இலங்கையில் கடந்த 6மாதங்களில் மாத்திரம் 650பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 4பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 15,000பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் தொடர்பான 2011ம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்வருட ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி மாலை, சிவலிங்கம் சிவகுமார் என்ற தமிழ் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவமும் பதிவானது. இந்தச் சம்பவம் நடந்து 5 தினங்களின் பின்னர் அதாவது ஏப்ரல் 18ம் திகதி அவரது சடலம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு பிரதேசத்தில் மீட்கப்பட்டது.

2. காணாமல் போதலும் அடக்குமுறையும்:

மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை, அரசியல் எதிராளிகளை இல்லாதொழிப்பது அடக்கியாளும் கொள்கையைக் கொண்டவர்களின் செயற்பாடாகும். அடக்குமுறை என்பது ஒரு இனத்திற்கு மாத்திரம் பிரத்தியோகமானதல்ல. 1979 இன்பம் செல்வம் என்ற இரு வாலிபர்களை கொலை செய்து பண்ணை–மண்டைதீவுச் சந்தியில் வீசிவிட்டுச் சென்றது அன்றைய ஆயுதப்படை. இதன் தொடர்ச்சியாக வட–கிழக்கில் பல கைதுகள் நடைபெற்று வந்திருக்கின்றது. ஆனால் 1989 ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற கடத்தல்கள் அரச இயந்திரமே ஜனநாயக விழுமியங்களை திட்டமிட்டு மீறியது.

1989களில் பல சிங்கள இளைஞர்களையும் அவர்களின் உறவினர்களையும் இல்லாதாக்கியது. பலரை கொன்று களனியில் வீசியதாக அன்றைய பத்திரிகை எங்கும் எழுதப்பட்டிருந்தது. இவ்வாறு வாவியில் பிணங்கள் வீசப்படுவதன் மூலம் எதிர்ப்பவர்கள் அல்லது எதிர்த்து செயற்பட நினைப்பவர்களுக்கு இதே கதிதான் என்று கொல்லப்பட்டவர்கள் களனிப் வாவியில் வீசப்படுவதன் மூலம் மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லி வைத்தது.

அந்த எலும்புக்கூடுகள், 1989ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது கொன்று புதைக்கப்பட்ட ஜேவிபி இளைஞர்களின் எலும்புக்கூடுகள் என்று பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அந்தக் காலப்பகுதியில் மாத்தளையில் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் படைப்பிரிவினரே இளைஞர்களை கொன்று இந்த இடங்களில் புதைத்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

2009 வைகாசி 19 முன்னர் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சுமார் 400புலிகளின் உறுப்பினர்கள் கடத்திக் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த புலியுறுப்பினர்கள் முதலில் சந்தேகத்தின் பெயரில் தான் கடத்திக் கொல்லப்பட்டனர்.

வெள்ளைவான் என்பது தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆழமான தடையத்தை பதித்துச் சென்றிருக்கின்றது. 1990களில் வெள்ளை வானில் பல இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள். கடத்தில் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகள் பின்னால் இருந்துள்ளது. கடத்தப்பட்டவர்களைக் கொன்று அவர்களின் உடல்பாகங்களை எடுத்தபின்னர் உடல்களை இல்லாதாக்கும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

உடல்பாகங்களை அகற்ற வேண்டுமானால் மருத்துவரீதியாக பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவரீதியா அகற்றப்படுகின்ற பாகங்களைப் பொறுத்ததாகும். குறிப்பாக சிறுநீரகத்தை அகற்ற வேண்டுமானால் வீசேட வைத்தியசாலையில் சம்பந்தப்பட்ட நபர்களின் பிரசன்னம் இருக்க வேண்டும். நோயாளிக்கு குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் பொருத்துதல் வேண்டும். இவ்வாறாக உறுப்புமாற்றத்தை செய்ய வேண்டுமென்றால் பல முன்னேற்பாடுகள் நடந்தேயாக வேண்டும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான கட்டமைப்பு நாட்டில் இருக்கின்றது என்பதை தற்போதைய சம்பவங்கள் நிரூபிக்கின்றது.

இவ்வாறு திறமையாக மையப்படுத்தப்பட்ட கடத்தலின் கட்டுமாணம் உடையாமல் பாதுகாப்பதையே இன்றைய வரலாறு காட்டி நிற்கின்றது. புறக்கோட்டை மன்னிங் சந்தைக்கு எதிரே இந்த புதிய கட்டிடம் அமைந்துள்ளது. இலங்கைப் பொலிஸ் புனர்வாழ்வுப் பிரிவுக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் கொம்பலவிதான பொறுப்பாக இருந்தபோது இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. பொலிஸாரின் புனர்வாழ்வுக்காக பல மில்லியன் ரூபா செலவிட்டுக் கட்டிப்பட்ட இந்தக் கட்டிடம், தற்போது இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் கடத்தப்படுவோருக்கும் கைதிகளுக்கும் சித்திரவதை செய்யப்படும் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளம் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் பொறுப்பில் உள்ளது. குறிப்பிட்ட சில பொலிஸார் மட்டும் தான் இந்தக் கட்டிடத்துக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டிடத்தைச் சூழ சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரேரா என்ற பொலிஸ் ஆய்வாளரின் கீழ் இந்த சித்திரவதைக் கூடம் செயற்படுகிறது. பொலிஸ் துணைச்சேவையில் ஒரு துணை ஆய்வாளராக இணைந்த இவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளரால் இரண்டு ஆண்டுகளில் நிரந்தர சேவைக்கு மாற்றப்பட்டு, ஆய்வாளராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் சிறப்பு பிரிவில் முக்கியமான ஒருவராக உள்ள இவர், கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவராவார்.

கடந்த மார்கழி மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காவல்துறை புனர்வாழ்வு கட்டடத்தின் 6ஆவது மாடியில் உள்ள அறை ஒன்றில் இந்த ஆய்வாளரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடத்துக்கு அருகேயுள்ள இரகசிய அறை ஒன்றில் வைத்து தான் பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிக்கல ஆகியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர். குமார், திமுது ஆட்டிக்கல வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார்கள்.

3. தமிழர் அமைப்புக்களின் ஏனேதானோ என்ற போக்கு:

கடத்தப்பட்ட தோழர்களின் பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ் அமைப்புகள் பாராமுகமாக இருக்கின்றார்கள். ஒரு வருடத்திற்கு முன்னர் கடத்தப்பட்ட இரு இளைஞர்களும் தமிழர்கள் தான். இதில் ஒரு தோழர் யாழ்ப்பாணத்தையும் மற்றையவர் தெற்கை சேர்ந்தவர் ஆவார். இவர்களைத் தான் தமிழ் தேசியம் மறந்து விட்டிருக்கின்றதுடன் அவர்களுக்காக போராடவில்லை.

இவர்கள் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தினால் தான் இவர்கள் கடத்தப்பட்டார்கள். மக்களின் நலனுக்காக போராடிய போராளிகளை கவனத்தில் எடுக்கத்தவறும் சிந்தனை படுபிற்போக்குத்தனமானதாகும். புலம்பெயர் புலிகள் தன்னெழுச்சியாக நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வுகளை ஐந்தாம் கட்டப் போர் ஆரம்பிக்கப்பட்டது போல பிரச்சாரங்களை தமிழ் குறுந்தேசியம் முடக்கிவிட்டிருந்தது. இது யதார்த்த அரசியலில் இருந்து பணயிக்கும் புலம்பெயர் முள்ளவிவாய்க்கால் சதியாளர்களின் அரசியலாக இருக்கின்றது.

புலம்பெயர் முள்ளிவாய்க்கால் சதியாளர்களுக்கு முன்னரைப் போல பிணங்கள் கொத்துக் கொத்தாக இறக்கவில்லை என்ற கவலைதான் மேலோங்கியிருக்கின்றது. கொத்துக் கொத்தாக மக்கள் இறக்கின்ற போதே சர்வதேசிய அங்கீகாரம் கிடைக்கும் என்று அரசியல் நடத்தியவர்கள். புலம்பெயர் புலிகளைப் பொறுத்தவரை குறுந்தேசியம் என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டவே முயல்கின்றனர்.

முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் தமிழ் அமைப்புக்களின் போராட்ட உணர்வானது மிகவும் பின்னடைந்துள்ளது. தமிழ் மக்களிடையே எத்னையோ பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. மக்களுக்கான பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை ஜனநாயக வழிகளினான போராட்டத்திற்கு அழைத்திருக்க முடியும். ஆனால் இன்றுவரை மக்களின் உரிமைக்காக ஒரு காத்திரமான போராட்டத்தினை நடத்திட முடியாத மலட்டுத் தன்மை கொண்ட அமைப்புகளாக தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றது.

5. போராட்டம்:

போராட்டம் என்பது நாம் அரசுக்கு எதிரானதாக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மையில் அரசு என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் பொருளாதார நலனைப் பாதுகாக்கும் ஒரு இயந்திரமாகும். பொருளாதார நலன் என்பது அரசு ஜனநாயக கூறுகளுக்கு உட்பட்டதாக கூறப்படுகின்றபோதும், அது அவ்வாறு இல்லை. அரசு சுதந்திரமாக இயங்க முடியாது. அரச இயந்திரங்களான நீதி நிர்வாகம் அரசு என்பன பொருளாதார நலன்களைப் பாதுகாக்கின்றது.

பொருளாதார நலன்கள் என்கின்ற போது இன்று சந்தைக்காக போட்டிபோடும் சீன, இந்திய, யப்பான், மேற்கு தேசங்களின் மூலதனத்துடன் தொடர்பு உள்ளது. உள்ளுர் முதலாளிகள் சொந்த முதலீடுகளை கொள்கின்ற வேளையில் அரச இயந்திரத்திலும் பங்கெடுக்கின்றார்கள். இவ்வாறு முதலாளிகளின் சம்பளப்பட்டியலில் இருக்கின்ற அதிகார வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தை மதிக்க வேண்டிய தேவையில்லாது. அடக்குமுறையையும், சுரண்டலையும் மேற்கொள்கின்றது.

அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கான போராட்டத்தினை இருக்கின்ற பொருளாதார அமைப்பையும், அதனைப் பாதுகாக்கும் அரச இயந்திரத்தினையும் அம்பலப்படுத்துவதன் ஊடாகவே வெற்றி கொள்ள முடியும். ஊடகங்களும் சரி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள் பொருளாதார நலன்களை பாதுகாக்கும் உள்ளுர் முதலாளிகளையும், அன்னிய முதலாளிகளின் நலன்களையும் பாதுகாக்கின்ற காரணத்தினால் மெத்தனமாக இருக்கின்றது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பவே செயற்படுகின்றது.

நீதிமன்று மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையை ஊட்டுகின்றது. ஆனால் அவைகள் நிஜத்தில் நடப்பதில்லை. இரண்டு தோழர்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டபோதும், அரசாங்கம் இதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறி வருகிறது. இவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவல்கள் தவறு. இவர்கள் இருவரும் பொலிஸ் புனர்வாழ்வு கட்டிடத்தின் 6ஆவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

6. போராட்ட அணிகள்:

கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஆட்கடத்தல்களை நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கின்றது. இவர்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் இவ்வாறான ஆட்கடத்தில்கள், ஆட்களை இல்லாதாக்கல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிப் பொறுப்புக்களில் இருக்கின்ற போது அரச இயந்திரத்தினைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதில் எவ்விதமான தயக்கமும் இன்றி செயற்படுபவைகளே. இவ்வாறு இருக்கையில் ஆட்சி அதிகாரம் இல்லாத போது இவர்கள் ஜனநாயகம், மனித உரிமை பற்றி சம்பிரதாயத்திற்கு உட்பட்டு பேசுகின்றன. இந்தக் கட்சியில் ஏதாவது ஒன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு, மக்களை அடக்கு நிலையில் ஏற்படுகின்ற காரணத்தினால் இந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேர முடியாது.

இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்தியே போராட்டப் பாதையையும் யுத்திகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு இரண்டு ஆளும் வர்க்கத்தின் பங்காளிகளுடன் உறவை முடித்துக் கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கத்தவர்களுடன் உறவை முறித்துக் கொள்வதன் ஊடாகவே மக்கள் அரசியலை துல்லியமாக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வரும் வரை எமது உழைப்பையும் உறுஞ்சுகின்றனர். இந்தக் மக்களுக்காக அரசியல் செய்வதாக பாசாங்கு காட்டுகின்றதை ஜனநாயகம் என்ற முகமூடி போட்டுக் கொண்டு இருப்பதனால் முற்போக்குச் சக்திகளும் இவர்களினால் ஏமாற்றப்படுகின்றார்கள்.

ஜனநாயக முற்போக்குச் சக்திகளின் உழைப்பின் மூலம் ஆட்சிக்கு வந்தபின்னர். இந்த பொருளாதார அமைப்பை பாதுகாப்பதும், பணம்படைத்த நிறுவனங்களின் நலனுக்கு இசைவாக நாட்டை ஆள்வது, இரு பெரும் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகும். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாது தனித்துவமான அரசியல் பாதையை தெரிவு செய்து இயங்குவதன் மூலமே ஒரு புரட்சிகரமான போராட்டை வளர்க்க முடியும்.

எனவே அனைத்துவகை அடிமைத்தனங்களுக்கு எதிரான போராட்ட வடிவம் விஸ்தரிக்கப்பட வேண்டும். மாறிமாறி ஆட்சிக்கு வருவதும் அரச அதிகாரத்தினை பாதுகாத்துக் கொள்வதற்கான எதிராளிகளை இல்லாதொழிக்கும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். அனைத்துவகை அடக்குமுறைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்வதன் ஊடாகவே ஒடுக்குமுறைக்கு எதிரான தீர்க்கமான போராட்டத்தினை நடத்த முடியும்.