Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் அணிதிரண்டு எழுச்சிக் கொள்ளுவோம்!

தற்போதைய பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் நிறைவேற்று அதிகாரத்தையும் பயன்படுத்தி சகல அதிகாரங்களையும் தங்களது கைகளுக்கு எடுத்து அப்பட்டமான குடும்ப சர்வாதிகாரத்தை முன்னெடுப்பதே ராஜபக்ஷ ஆட்சியினரது குறிக்கோளாகும். அதன் அடிப்படையிலேயே ஜனநாயகமும், மனித உரிமைகளும் மக்களின் அன்றாட வாழ்வுரிமைகளும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றின் வெளிப்பாடே தெவிநெகும சட்ட மூலத்தின் நிறைவேற்றமும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையுமாகும். ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி அரசாங்கத்தினதும் இத்தகைய தான்தோன்றித் தனமான ஜனநாயக விரோத மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மக்கள் விரோத செயற்பாடுகளை எமது புதிய - ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளை ஜனநாயகம் மனித உரிமை மற்றும் மக்களின் பிரச்சனைகளுக்காக முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்ட இயக்கங்களுக்கு கட்சி தனது ஆதரவை தெரிவித்து அவற்றில் பங்கும் கொள்கிறது.

நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே அத்தியாவசிய உணவு பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் நாளாந்த விலை அதிகரிப்புகளாகும். இவற்றால் மக்களது வாழ்க்கை செலவின் உயர்வானது தாங்க முடியாத சுமையாகி அனைத்து மக்களையும் அல்லலுற வைத்து வருகிறது. அதே வேளை தேசிய இனப்பிரச்சனையின் தீர்வை மறுத்து பேரினவாத ஒடுக்குமுறை முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் தெற்கில் இனவாதம் மதவாதம் தூண்டப்படுவதுடன் வடக்கு கிழக்கில் புலிகள் வந்துவிட்டதாக அரசாங்கம் புலிப்பூச்சாண்டியைக் கிளப்பி தெற்கு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பியும் வருகின்றது.

இச்சூழலில் ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சியினருத் தேவைப்படுவது சர்வாதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்டங்களேயாகும். தமக்குரிய தான்தோன்றித்தனமான அத்தகைய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு உயர்நீதி மன்றமும் பிரதம நீதியரசரும் தடையாக இருப்பதைச் சகிக்கமாட்டாத காரணத்தாலேயே பிரதம நீதியரசரைப் பதவி நீக்கும் குற்றப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள விடாப்பிடியாக முற்பட்டுள்ளனர். இதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தினரின் சர்வாதிகார ஆட்சியானது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அம்பலமாகி நிற்கிறது. இந்நிலையில் ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் மக்கள் அணிதிரண்டு எழுச்சிக் கொள்ளும் தேவை உருவாகியுள்ளது. நீதித் துறையினரும் சட்டத்துறையினரும் அவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டு நிற்கும் மக்கள் சார்பான கட்சிகளும் முன்னெடுக்கும் ஜனநாயகத்திற்கான போராட்ட முன்னெடுப்புகளுக்கு எமது கட்சி முழு ஆதரவை வழங்கி நிற்கிறது என அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஊடகங்களுக்கான அறிக்கை

புதிய - ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

09.01.2013