Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இனிமேல் இலங்கை சவுதிக்கு பணிப்பெண்களை அனுப்பக் கூடாது

இலங்கை பணிப்பெண்களுக்கு சவுதியில் பாதுகாப்பு கிடையாது.  ஆகவே ஏற்கனவே சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்களையும் உடனடியாக இலங்கை அரசாங்கம் திரும்ப அழைக்க வேண்டுமென உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறினார்.

இதற்கிடையே இலங்கையின் தலைநகர் கொழும்பில் ரிசானாவைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி ´´உரிமைகளுக்கான பெண்கள்´´  அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. 

இது இவ்வாறிருக்க சவுதியில் ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக்கூட இலங்கை வெளியுறவு அமைச்சு அறியாமல் இருந்திருக்கிறது. ஆகவே தாம் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்த சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறினார்.

இதையடுத்து ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது! 

மரண தண்டனை கண்டிக்கத்தக்கது! – நவநீதம்பிள்ளை!

சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சென்ற ரிசானா ஒரு வாரக்காலத்தில் குறித்த வீட்டின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை இறந்து போனது. இதனையடுத்து அந்தக் குழந்தையை கொலை செய்த குற்றம் ரிசானா மீது சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது ரிசானா 17 வயதை கொண்டிருந்தார். எனினும் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டபோது அதனை சர்வதேச சமூகம் கண்டித்தது. ரிசானா நபீக் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் போது அவருக்கு மொழியாக்கம் உட்பட்ட சட்ட உதவிகள் உரியமுறையில் வழங்கப்படவில்லை. அத்துடன் அவர் உடல் ரீதியாக தாக்கப்பட்டே குற்றப்பத்திரிகையில் கையொப்பமிடச்செய்யப்பட்டார் என்று நவநீதம்பிள்ளையின் பேச்சாளர் ரூபட் கொல்வெலே தெரிவித்துள்ளார்

இந்த அரசுகளும் அதன் பொம்மையுமான ஐக்கிய நாடுகள் சபையும் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதை விடுத்து பணம் படைத்த முதலாளிகளின் பக்கம் நின்றபடி பாதிக்கப் பட்டவர்களுக்கு குரல் எழுப்பி மக்களை ஏமாற்றுகின்றன என்பதை நாம் புரிந்து கொண்டு எம்மை நாம் காப்பாற்ற நாமே போராட வேண்டும்.