Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

களஆய்வுகளான உல்லாசப் பயணம்!!!!

யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களின் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஐ.நா சபையினால் வழங்கப்பட்ட 350 மில்லியன் ரூபா நிதி உதவியில் விளையாட்டு உபகரணங்களை நாமல் ராஜபக்ச கலைத்தூது மன்றத்தில் வைத்து விளையாட்டுக்கழகங்களிடம் கையளித்தார். யாழ். மாவட்டத்தில் உள்ள 20 விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் லலித் திரு பெரேரா யாழ். மாவட்ட விளையாட்டு உதவிப்பணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் விளையாட்டு கழகங்களுடைய உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

“புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் மறைக்கின்ற வளர்ச்சியும் மாற்றமடைந்து வருகின்ற நிலவரங்களும்” எனவும் வன்னிக்கு சென்று வருகின்ற புலம்பெயர்ந்தவர்கள் “அரசியல் பிரச்சனை இல்லை சமூகப் பிரச்சனைதான் இருக்கின்றது” எனவும் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

இதில் குறிப்பாக தமிழ் குறுந்தேசியத்தின் ஆயுதத் தலைமை அழிக்கப்பட்ட நிலையில் இன்று பற்பல பிரமுகர்கள், இலக்கியவாதிகள், இடதுசாரியம் பேசியவர்கள் தமிழ் மக்களுக்கு பாதை காட்ட முன்னணியில் இருக்கின்றார்கள். இவர்களில் குறிப்பாக அரசு சார்ந்து மக்களின் விடுதலை அல்லது உரிமை என்று கதைப்பவர்களின் நிலைப்பாடை அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது.

இதில் இன்று யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி அல்லது வழமைக்கு திரும்புதல், தேசிய இனவொற்றுமையை ஏற்படுத்தல் போன்ற கருத்துக்களைக் கொண்ட திரைகளின் பின்னால் உள்ள அடிமைச் சேவகத்தை முன்னுக்கு கொண்டு வருதல் வேண்டும்.

அரசின் நிர்வாக அலகுகளில் வெவ்வேறு திணைக்களங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த திணைக்களங்கள் தத்தம் காரியங்களை செய்ய வேண்டிய தேவையும் இருக்கின்றது. போக்குவரத்து விதிகளை அமுல்படுத்துவது, இலகுபடுத்தப்பட்ட குற்றத்தண்டனை முறை, மீறுபவர்களை தண்டிப்பது,(பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள Urban Development Authority (UDA) மாற்றப்பட்டதை காரணமாக பலர் கருதுகின்றனர்.

1. சுகாதாரம், நகர சுத்திகரிப்பு

2.தொலைக்காட்சியில் தமிழ் சிங்கள அறிவிப்பாளர்கள் இணைந்து வேலை செய்வது

3. வர்த்தக நிலையங்களில் (குறிப்பாக முஸ்லீம் ) தமிழ் பாட்டுப் போடுவது

4.முகாம்கள் குறைக்கப்பட்டுள்ளது, அல்லது அவ்விடங்களில் காகம் குடியிருக்கின்றது.

5. புத்தர் சிலைகள் இல்லை

இவைகள் சுதந்திரத்திற்கு அடையாளமாக இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. ஒரு நாட்டின் நிர்வாகக் கட்டமைப்புக்களும், முதலாளித்துவம இயங்குவதற்கு தேவையான கட்டுமானங்களை அவசியமானதாகும். இதனைத் தான் அரசியல் உரிமையை நாட்டின் குடிகளுக்கு அரசு வழங்குவதாக உதாரணம் காட்டுகின்றார்கள்.

தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால், ஒரு பிரஜையாகவோ அல்லது ஒரு இனம் என்ற அடிப்படையிலோ அவர்களின் உரிமை உறுதிப்படுத்தப் படவில்லை என்பதே உண்மையானதாகும்.

இனங்களுக்கிடையே உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் உரிமைகளையும் சோற்றுப் பிரச்சனையைப் போல வேலைவாய்ப்பு, சுகாதாரம், போக்குவரத்து விதிகளுக்கு ஒப்பாக காட்டி மலினப்படுத்தும் அரசியல் விண்ணர்கள் ஆளும் இனவெறி அரசு சார்பாக செயற்படுகின்றனர்.

காகங்கள் பழைய முகாம்களின் குடியிருப்பதாக களஆய்வாக உல்லாசப் பயணம் சென்று வருபவர்கள் வாக்குமூலம் கொடுகின்றார்கள். ஆனால் பல முகாம்களை மன்னார் - சங்குப்பிட்டிப் பாதையில் காடுகளை அழித்து விட்டு முகாம்கள் தெரியாதவகையில் முகாம்களை அமைத்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை பொதுமக்களின் காணிகளிலும் காடுகளையும் அழித்து முகாம்கள் அமைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் சிறிய முகாம்களாக இருந்த இடங்கள் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறே யாழில் இருந்து அம்பாறை செல்லும் பாதை முழுவதுமாக சிறிய முகாம்களாக இருந்தவைகள் பெரிய முகாம்களாக மாறியிருக்கின்றன. இவ்வாறே வாகரையில் மிகப்பெரிய கடற்படை முகாம் அமைக்கப்படுகின்றது. அவ்முகாம் பல மைகள் நீளமானதாகும்.

ஆளுனர் சந்திர டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் ஒரு சிவில் நிர்வாகம் நடைபெறுமாயின் அதனை ஜனநாயகம் என்று கூறிக் கொள்ள முடியுமா?

ஜனநாயகம் என்பதின் கீழ் தேசிய இனங்களின் இருப்பினை உத்தரவாதம் தராத மறுக்கும் அரசியல் முன்வைக்கப்படுகின்றது. இன்றைய அரசியல் அமைப்புக்குள் தீர்வு கண்டுவிட முடியும் என்பது போலவும், இருக்கின்ற அரசியல் அமைப்பு மக்களுக்கு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் என்பது போலவும் பிரச்சாரம் செய்ய பிரமுகர்கள் இருக்கின்றார்கள்.

சிறிய புத்த சின்னம் இருந்த இடத்தில் உதாரணத்திற்கு மூதூர் நகரில் இப்பொழுது பெரியதாக கட்டப்பட்டிருக்கின்றது. இவ்வாறு புதிய புதிய புத்த சிலைகள் முளைத்திருக்கின்றது. இதனை சரியான ஆய்வுகள் மூலம் கொண்டுவரப்பட வேண்டும்.

நாமல் ராஜபக்சவின் படத்தை தென்பகுதியில் பார்க்க முடியாது. வடக்கிலும் கிழக்கிலும் பார்க்க முடியும். நாமலின் புகைப்படத்தை பிரசுரிக்க வேண்டியது தமிழ் அரச ஆதரவு கட்சிகளின் நிலையாக இருக்கின்றது. கிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட பாரீய தண்ணீர் தாங்கியினை நாமலின் சிந்தனையின் கீழ் என்று பொறிக்கப்பட்டே உள்ளது. இங்கு தனிமனித வழிபாட்டை பலமாக புகுத்துவதற்கும் இந்த தமிழ் தொங்கு சதைகள் தயாராவே இருக்கின்றனர்.

உல்லாசப் பயணம் சென்றுவிட்டு பின்னர் ஊடகங்கள் வாயிலாக வடக்கு கிழக்கில் வசந்தம் வீசுவதாக பிரச்சாரம் செய்வது, சமூகக் கொடுமையாகும். களஆய்வுகள் ஒழுங்குபடுத்தி இருக்கப்பட வேண்டும். உல்லாசப் பயணியாகச் சென்று அங்குள்ள நிலவரத்தை நுனிப்புல் மேய்தது போல ஆய்வுகள் மக்களுக்கு பயன்படாது.

வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு செயல்படுத்தப்படும் உதவித் திட்டங்களை அரசியலாக்கும் கயமைத்தனம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. சில விளையாட்டு வீரர்களை தெரிவு செய்து அவர்களை கொழும்புக்கு அழைத்துச் செல்வது, சில நாட்கள் பயிற்சி கொடுப்பது பின்னர் அவர்களை கவனத்தில் எடுக்காது விடுதல் என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகின்றது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படுவது கடன், இதன் ஊடாக நாட்டின் கடன் சுமை அதிகரிக்கின்றது ஆனால் வெளிநாட்டு உதவிகளை தங்கள் கட்சி சார் நலனுக்கு பயன்படுத்துவதும் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி செய்வதாக பிரச்சாரம் செய்கின்றார்கள்.