Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அன்புத் தோழன் சுரேஸிற்கு, ஒரு மடல்!!!

ஐயா தாங்கள் அன்னிய தேசங்களிடம் முறைப்பாடு செய்யப்போவதாக கூறுகின்றீர்கள். இப்படித்தான போராட வேண்டுமென்று 1983களில் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தீர்கள். சரி ஆயுதப் போராட்டம் இப்போ அவசியமற்றது என்று எடுத்துக் கொண்டாலும், போராட்ட வழிமுறைகள் பல இருக்கின்றனவே. இந்த பலஸ்தீனம் எத்தனையோ பின்னடைவுகளைக் கண்டாலும் விழ விழ எழுந்து நிற்கின்றது. அங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை போராடுகின்றார்கள். அங்கு ஆயுதம் என்பது சிறு விகிதம் தான். ஆனால் சிறுவர்களின் கல்லெறிக்குத் தான் எதிரி பயப்படுகின்றான். சிறுவர்களின் வீரம் தான் பலஸ்தீனத்தின் இருப்பை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் நீங்கள் சொந்தக் காலில் நிற்காது தொடர்ச்சியாக அன்னியச் சக்திகளை நம்பி அல்லவா அரசியல் நடத்துகின்றீர்கள்.

நீங்கள் கூறுவது போன்று,

"அரசியல் தீர்வு விடயத்தில் மஹிந்த அரசு காட்டும் இழுத்தடிப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் படையினரின் அராஜகங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு எதிர்வரும் தினங்களில் எடுத்துரைக்கவுள்ளோம்."

“இலங்கையில் தற்போது காட்டாட்சி நடக்கின்றது. நீதித்துறை செத்துவிட்டது. மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. இதனால் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளது."

"வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் படையினர், புலானாய்வுப் பிரிவினர், ஒட்டுக்குழுக்கள் ஆகியோரால் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர், தாக்கப்படுகின்றனர், கைதுசெய்யப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. வடக்கில் கடந்த 50 நாள்களுக்குள் கைது செய்யப்பட்ட 44 பேர் பூஸா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள் எவரையும் அரசு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை. அதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஆகியோர் வெலிக்கந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் மஹிந்த அரசின் உத்தரவுக்கமைய படையினரால் அபகரிக்கப்பட்டுவருகின்றன. தாம் நினைத்ததை இந்த அரசு செய்து முடிக்கின்றது. தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற ஆணவத்துடன் செயற்படுகின்றது.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம் பற்றிப் பேசுவதில் மஹிந்த அரசு பின்னிற்கின்றது. தமிழ்க் கூட்டமைப்பின் கருத்துகளுக்கு இந்த அரசு செவிசாய்க்குதில்லை.”

எனவே, அரசியல் தீர்வு விடயத்தில் மஹிந்த அரசு காட்டும் இழுத்தடிப்பு, வடக்கு, கிழக்கில் படையினரின் அராஜகங்கள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு எதிர்வரும் தினங்களில் தமிழ்க் கூட்டமைப்பினராகிய நாம் எடுத்துரைக்கவுள்ளோம்.

சர்வதேச நாடுகளுக்கு விஜயம் செய்து நாம் அந்நாட்டு உயர் அதிகாரிகளிடம், "சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக ஒரு தீர்வைப்பெற தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, இலங்கை அரசுக்கு தாங்கள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்" என்பதைக் கூறவுள்ளோம். ஏனெனில், மஹிந்த அரசை நம்பி நாம் இனிப் பேச்சுக்கு செல்லமாட்டோம்.

தமிழமக்களின் உரிமைக்காக போராடிய அமைப்பு அன்னியச் சக்திகளை நம்பியே மாண்டு போனார்கள். மக்களை கொல்லக்கொடுத்து தாமும் அழிந்து போனார்கள்.

மீளவும் எங்கு தொடங்கினோமே அங்கே தான் மறுபடியும் பின்னடைந்துள்ளோம். போராடுவது எப்படி என்று உங்களுக்கு நியாபகப்படுத்தவே விரும்புகின்றோம்.

அடக்குமுறையின் வடிவத்தை சிங்கள மக்களிடமும், சர்வதேச உழைக்கும் வர்க்கத்திடமும் கொண்டு செல்லுங்கள்.

சொந்தக் மக்களை நம்புங்கள். அவர்களிடம், அவர்கள் போராட வேண்டியதன் போராட்டத்தின் அவசியத்தை வழியுறுத்துங்கள்.

அன்னிச் சக்திகளை நம்பி மீளவும் சோரம் போவதை தடுப்போம்.