Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் புரட்சிகர அழைப்பு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இது மக்கள் தொழிலாளர் சங்கம் உங்களைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம். மக்களுக்கான தொழிற்சங்கம் என்ற ரீதியில் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அன்று முதல் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை அவர்கள் எடுத்ததில்லை. கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிக்காரர்கள் கூறும் அதே பொய்களை கூறிக் கொண்டு மக்களை தொழிற்சங்கங்கள் ஏய்த்தும் வருகின்றனர்.

அத்தோடு தொழிற்சங்க சட்டங்களினால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க உருப்படியான எந்த முயற்சிகளையும் அவர்கள் எடுப்பதில்லை. மக்களுக்கான தொழிற் சங்கம் என்ற வகையில் தோட்டத் தொழிலாளர்கள் கீழ் வரும் கேள்விகளுக்கான விடைகளை அறிந்து கொள்ளுவதும் அது பற்றி கலந்துரையாடுவதும் அவசியம் என நாம் கருதுகின்றோம்.

தொழிற்சங்கம் என்றால் என்ன?

ஒரு குறித்த தொழிற் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் (தொழில் பெறுநர்கள்) அல்லது முதலாளிகள் (தொழில் வழங்குநர்கள்) தங்களின் தொழில் நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காக தமது உறுப்பினர்களை உள்ளடக்கி கூட்டாக செயற்படும் அமைப்பை தொழிற்சங்கம் என்று சுருக்கமாக கூறலாம். இலங்கையில் முதன்முதலில் பதிவு செய்யப்பட தொழிற்சங்கம் இலங்கை முதலாளிமார் சம்மேளனமாகும். இது இலங்கையின் முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சங்கமாகும். இதுவே தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கம்பனிகள் சார்பாக பேரம் பேசுகிறது. அதேபோல் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க பல தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.

தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் என்றால் என்ன?

தொழிலாளர்களின் நலன்களை அடைந்து கொள்வதற்காக தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு ஒழுங்கமைப்பு. அதாவது தொழிலாளர்களை அணித்திரட்டி அவர்களை அரசியல்மயப்படுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடும் அமைப்பு என்று கூறலாம். இவ்வாறான தொழிற் சங்கங்களை மக்கள் சார்பு தொழிற் சங்கங்கள் எனலாம். இவற்றுக் மாறான தொழிற்சங்கங்கள் மக்கள் விரோத தொழிற்சங்கங்களாகும்.

தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

தோட்டத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஐக்கியப்படுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வல்லமையை தொழிலாளர்களிடம் உணர்வு ரீதியாக ஏற்படுத்துவதனையே தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டும்.

இதற்கு தொழிற்சங்கமானது பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்றோம்.

1. உறுப்பினர்களான தொழிலாளர்களுக்கு தொழிற் சங்கங்கள் அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

2. தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக அரசியல், தொழிற்சங்கச் சட்டங்கள் பற்றிய அறிவை வழங்க வேண்டும்.

3. தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முன்னின்று உழைக்க வேண்டும்.

4. தொழிலாளர்கள் பெற வேண்டிய உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.

5. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் வாழ்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்திற்காக மக்களை அணித்திரட்டிப் போராட வேண்டும்.

6. தொழிலாளர்களிடம் இருந்து தலைவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களைத் தலைவர்களாக ஆக்க வேண்டும்.

7. தொழிலாளர்கள் அன்றாடம் தொழில் இடத்தில் முகம் கொடுக்கும் பிரச்சினைளைத் தீர்க்கத் தலையிட வேண்டும்.

8. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக வேலை நிறுத்த பேராட்டங்களையும் ஏனைய போராட்டங்களையும் முன்னெடுக்கும் போது, அதற்குத் தேவையான சட்டரீதியான உதவிகளையும் பாதுகாப்புக்களையும் வழங்குதல்.

9. இன்றைய அரசியல், பொருளாதார, சமூக, கலாசார காரணிகளால் தொழிலாளர்களிடையே தோன்றியுள்ள பண்பாட்டுச் சீரழிவுகளை நீக்கி, மாற்று மக்கள் பண்பாட்டை ஏற்படுத்தச் செயற்படல்.

10. மிக முக்கியமாக அனைத்துவித பேதங்களையும் கடந்து உறுப்பினர்கள் மத்தியில் தொழிலாளர்கள் என்ற ஐக்கிய உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேற்கூறிய விடயங்கள் இன்று தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குள் கேட்க வேண்டிய கேள்வியாக நாம் கருதுகின்றோம்.

மக்கள் தொழிலாளர் சங்கம் தொழிலாளர்கள் தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு என்ன?

தொழிலாளர்களே சமூகத்தின் இயக்க சக்தி என்று நாம் கருதுகின்றோம். உழைப்பு இன்றி இந்த உலகம் இயங்குவதில்லை. எனவே அந்த உழைப்பை வழங்கும் தொழிலாளர்களே உலகை இயக்குகின்றனர் என்ற உண்மையினை எமது அனைத்து செயற்பாடுகளுக்கும் அடி ஆதாரமாக கொண்டுள்ளோம்.

இலங்கையில் உழைக்கும் மக்களின் ஒரு பகுதி என்ற வகையில் இலங்கையின் பொருளாதாரத்தில் தோட்டத் தொழிலாளார்கள் இன்றும் மிகவும் முக்கியத்துவமிக்கவர்கள். எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதிகளும் கொடுமைகளும் ஓரவஞ்சனைகளுமே பரிசுகளாக கிடைத்தன.

தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அறிவைப் பெற்று தங்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக ஒன்றாக போராடும் நிலை ஏற்படும் போதே புதிய வாழ்வு கிடைக்கும். அந்த புதிய வாழ்வை அடைய, தொழிலாளர்களினால் வழிநடத்தப்படும் மக்கள் சார்பான நேர்மையான தொழிற்சங்கம் ஒன்று இன்றைய கட்டாய தேவையாகும்.

எமது வேலைத்திட்டம் என்ன?

தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் என்ற அடிப்படையில் சட்டரீதியாக உறுதிப்படுத்தியுள்ள அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க செயற்படுவதும், தொழிலாளர்களுக்கு அரசியல் அறிவை வழங்கி வென்றெடுக்கப்பட வேண்டிய உரிமைகளுக்காக அணிதிரட்டுவதே எமது பணியாகும். இந்தப் பணிக்கு, மேலே நாங்கள் சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கம் ஆற்ற வேண்டிய பத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

எனவே இம்முறை உழைக்கும் மக்களுக்கான தொழிற்சங்கமாக உள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி (பெப்ரவரி 2013)

மக்கள் தொழிலாளர் சங்கம்

இல. 52/3, ஆலயவீதி,

கஹவத்த.

மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.