Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மன்னார் மீனவர் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் கடற்தொழில் செய்வதற்கு நடைமுறையில் உள்ள கெடுபிடியான நடைமுறைகளை நீக்க வேண்டும் எனக் கோரி அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.

மன்னாரில் மீனவர்களுக்கென நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாஸ் நடைமுறையினாலும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின் மூலம் சிலிண்டர்களைப் பயன்படுத்தி அட்டை மற்றும் சங்கு குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதனால், தமது வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய இழுவைப்படகுகளினாலும் தமது தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மீன் பிடிப்பதற்குத் தனியான பாஸ், அட்டை பிடிப்பதற்குத் தனியான பாஸ், சங்கு குளிப்பதற்க வேறான பாஸ் என்று பலவிதமான பாஸ் நடைமுறைகள் உள்ளுர் மீனவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வருபவர்கள் ஆழமற்ற தமது கடலில் சிலிண்டர்களைப் பாவித்து அட்டை பிடிப்பபதையும் சங்கு குளிப்பதையும் மன்னார் மீனவர்கள் எதிர்க்கின்றார்கள். இவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மீனவர்களுக்கென ஒரு தனியான அடையாள அட்டையை வழங்கி ஏனைய பாஸ் முறைகளை நீக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அத்துடன் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.

மீனவர்கள் கையளித்த மகஜரை மன்னார் அரசாங்க அதிபர் மீனவ பிரதிநிதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டதன் பின்னர், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒரு வாரத்தில் கலந்துரையாடி தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் மீனவர்களிடம் உறுதியளித்தார்.