Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மன்னார் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

உண்ணாவிரதப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதை

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோரி, மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் அழைப்பில் மன்னார் செம்மந்தீவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சென்று மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்தபின்னர், கடந்த வருடம் சிறுபோக வேளாண்மை வரட்சியினால் பாதிக்கப்பட்டது. காலபோக வேளாண்மை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் வேளாண்மையில் செய்யப்பட்ட முதலீட்டிற்காகப் பெறப்பட்ட கடன்களைச் செலுத்த முடியாத நிலைமைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

முழை வெள்ளத்தில் அழிந்தது போக எஞ்சியிருக்கின்ற நெல்லை அறுவடை செய்த போதிலும், அதனை நிர்ணய விலைக்குக் கொள்வனவு செய்வதற்குப் பரந்த அளவில் மாவட்டத்தில் நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இதனால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கே நெல்லை அவர்கள் விற்பனை செய்ய நேர்ந்திருக்கின்றது.

அதேநேரம் வரட்சியினாலும், மழை வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக் கடன்களுக்குரிய வட்டியை அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ள போதிலும், மன்னார் மாவட்டத்தில் வங்கிகள் அந்த வட்டியைக் கட்டுமாறு விவசாயிகளிடம் கோரி வருகின்றது. இதனால் தங்களது நிலைமை மிக மோசமடைந்திருப்பதாக மன்னார் விவசாயிகள் கூறுகின்றார்கள்.

மானியம்

தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் வங்கிக் கடன்களையும், அதற்குரிய வட்டியையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். நிர்ணய விலைக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும்.

கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று விவசாயிகளுக்கும் எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்று மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.