Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தூண்ட பாதுகாப்புச் செயலர் முயற்சி! ஹக்கீம் குற்றச்சாட்டு!

altபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பொதுபல சேனா அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கிறார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவொன்று, அண்மையில், பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள பெசன் பக் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இனங்களுக்கு இடையில் விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அரசு துரித நடவடிக்கை எடுக்காது போனால், அது தொடர்பாக சர்வதேசத்தின் கவனம் திரும்பும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பினால், தொடர்ந்தும் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுமாறு தாம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து விட்டார் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

தனது கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என உறுதியளித்தார்.

எனினும், அது போதுமானதல்ல என்பதே எனது நிலைப்பாடு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.