Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

விஸ்வரூபமான அரைவேக்காடு கமலஹாசன்.

ரஜனிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் ... போன்றவர்களை கதாநாயகர்களாக போட்டு அவர்களின் இமேஜ் பிரதிபலிக்கும் வகையில் பெரும் பணச்செலவுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருபொழுதும் தரமான சினிமா தரப்பில் விமர்சிக்கப்படுவதில்லை. காரணம் இப்படங்கள் கீழ்மட்ட ஜனரஞ்சகத்தை ரசிக்கும் வண்ணம் அப்பாவி பாமர ரசிகர்களின் உணர்ச்சிகளுக்கு தீனிபோட்டு முற்றுமுழுதாக பணம் பண்ணுவதையே நோக்கமாக கொண்டு எடுக்கப்படுபவை.

ஆனால் புரியாத புதிர் என்னவென்றால் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்ட விஸ்வரூபம் படத்திற்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கமலை வித்தியாசமான கலைஞாகவும் புதுமைகள் செய்பவராகவும் சொல்வதற்கு என்ன இருக்கிறது. இங்கே விஸ்வரூபம் படத்தில் புரிந்தும் புரியாமலும் பல விடயம்கள் இருப்பதாக பலர் பிரமித்தார்களாம். உண்மையில் கமலஹாசனின் அரைவேக்காட்டுத்தனமான சமூகப்புரிதலின்மையே படத்தில் வெளிவந்திருக்கிறது.

தலிபான்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பது உண்மை. ஆனால் அமெரிக்க ரஸ்சிய பனிப்போரில் பந்தாடப்பட்ட பிரதேசமே ஆப்கானிஸ்த்தான் என்பதை அரசியல் புரிதல் உள்ளவர்கள் விளங்கிக் கொண்ட விடயம். நஜிபுல்லா, பின்லாடன் போன்றோரின் வரலாறுகள் தெரியாதவர்களும் அவற்றின் அரசியல் ஆழமும் தெரியாதவர்களே இப்படி ஒரு படம் எடுக்கமுடியும். மேற்குறிப்பிட்ட அமெரிக்கா, தலிபான், ரஸ்சியா , இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற விடயங்களால் சிதறிச் சின்னாபின்னமாக்கப்பட்ட ஆப்கான் மக்களின் வாழ்வை பற்றி அதன் காரணங்களை எள்ளளவும் ஒரு செய்தியை கூடச் சொல்ல முடியாத கமலஹாஸன் தனது அமெரிக்க அடிமைப்புத்தியை காட்டி விட்டார்.

ரோஜா படத்தில் காஸ்மீரிய மக்களின் அடிப்படை பிரச்சனை மறைக்கப்பட்டு வெறும் பயங்கரவாதமாக காட்டி தனது வியாபாரப் புத்தியை காட்டினார் மணிரத்னம். இதற்கு ஒப்பானது தான் விஸ்வரூபம்.

இந்திய அரசும் அதிகாரத்துவமும் இந்தமத அடிப்படைவாதத்தில் வாழ்வாங்கு வாழுகின்றது. இந்த லட்சணத்தில் றோ வின் சார்பில் அமெரிக்காவை நக்கியபடி இஸ்லாமிய அடிப்படைவாத்தை சிதறடிக்கிறாராம் இந்த பிராமணி.

தமிழகத்திரைப்பட துறையில் சங்கர், கே. எஸ. ரவிக்குமார், அஜித், வியஜ் .... போன்ற பலர் தங்களை தாங்களே முற்போக்கானவர்களாகவோ, சமூகப் பொறுப்பானவர்களாகவோ காட்டிக்கொள்வதில்லை. அப்படி முயற்சித்தாலும் அறிவியல், அரசியல் பரப்பில் இவர்களை ஏற்று விமர்சிப்பதில்லை. ஆனால் இந்த மணிரத்தினம், கமல் போன்றவர்கள் தங்களை வித்தியாசமானவர்களாகவும் முற்போக்கானவர்களாகவும் காட்டியபடி இனம், மதம் போன்ற மனித உணர்வுகளை தூண்டும் விடயங்களை வியாபாரமாக்குகின்றனர். இவர்களே ஆபத்தானவர்கள்.

பிறேஸிலும், கனடாவிலும் வாழும் புர்வீகக்குடிகள் கமலின் படத்தையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? இல்லை இந்தியா என்ன செவ்வாய் கிரகத்திலா இருக்கிறது? பிறகேன் இந்த “உலகநாயகன” என்ற பெயருக்கான அற்பத்தனமான ஆசை?

கமலுக்கு தான் வெள்ளைகாரனாக பிறக்காதது கவலை. கோலிவுட்டில் நடிக்க முடியாதது கவலை. அனைத்தும் காலனித்துவ அடிமை மனோபாவம். இதற்காகத்தான் அமெரிக்காவின் அங்கீகாரம் தேடுகிறார். தனது தோலின் நிறத்தையும், தோளின் தசைகளையும் வெளிப்படுத்துவதிலும் ஒரு அற்பத்தனமான ஆசை.

தான் முஸ்லிம்களை புண்படுத்தவில்லை அடிபபடைவாதிகளையும் பயங்கரவாதிகளையும் தான் சாடுவதாக சொலவது வெறும் சால்ஜாப்பு. இந்த தலிபான் பயங்கரவாத்தின் உருவாக்கத்திற்கு அமெரிக்காவின் பங்கு எதுமே இல்லையா? ரஸ்சியசார்பு ஆப்கானிஸ்தான் அதிபர் நஜிபுல்லாவின் காலத்தில் அதற்கு எதிராக அமெரிக்க உளவு ஸ்தாபனத்தின் ஏஜண்ட்டாக போராடியவர் பின்லாடன். இதுபற்றி ஒரு சிறு மூச்சாவது விடவில்லை திரைக்கதையில்.

இந்து மதவாதத்தினாலும் , இஸ்லாம் அடிப்படைவாதத்தினாலும் தமிழ்நாடும், முழு இந்தியாவும் எரிந்து கொண்டிருக்க இந்தியா உட்பட்ட அனைத்து கீழைத்தேசங்களையும் மிக மோசமாக சுரண்டிக்கொண்டிருக்கும் மேற்குலகத்தையும் குறிப்பாக அமெரிக்காவையும் காப்பாற்ற “இவா” போராடுகிறாராம்.

இந்த விஸ்வருபம் படத்தை பார்த கோலிவுட்காரர்கர் அடுத்த ஜேம்ஸ் பொண்ட் படத்திற்கு தன்னைத்தான் அழைப்பார்கள் என்ற அற்ப ஆசையாகக் கூட இருக்கலாம். கமலஹாசன் சிந்தனையில் “உலகத்தரம்” என்பது ஹோலிவுட் தரம் தான். இவர் எத்தனை ஈரானிய கலைப்படங்களை பார்தாரோ தெரியவில்லை.

இப்போது தமிழ் சினிமாவில் வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் போன்றோரின் வரவு ஓரளவு கவனிக்கத்தக்கவை. இவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களைக் கூட கமலால் அவதானிக்க முடியவில்லை.

இங்கே வெளிப்படும் ஆத்திரம் என்னவென்றால் ஒரு சமூகப்பிரச்சனை கூறப்படும் போது அதன் உண்மையின் அடிப்படையை அதாவது அதன் ஒரு பகுதியயை கூட சொல்லாமல் வியாபாரமாக்குவதுதான். கமலுக்கு இந்த சமூக அக்கறை, சமூகப் பொறுப்பு என்பன இல்லை என்பது மட்டுமல்ல இவற்றை புரிந்துகொள்ள அறிவியல் ஆழமும் இல்லை என்பதுதான் உண்மை.

-சபேசன் -கனடா