Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் நீதித்துறை சுதந்திர மீறல்களை ஆராய சட்டத்தரணிகள் குழு

ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிநீக்கத்தை எதிர்த்து சட்டத்தரணிகள் நடத்திய போராட்டம்

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியாக இடம்பெறும் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிலையியற் குழுவொன்றை நியமித்துள்ளது.

நாடுமுழுவதிலும் நடக்கின்ற இவ்வாறான சம்பவங்கள் பற்றி அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த தமது பிரதிநிதிகள் ஊடாகவும் பொதுமக்கள் ஊடாகவும் தகவல்களைப் பெற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்று நிலையியற் குழுவின் தலைவர் மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்தும் விதத்தில் அண்மைக் காலங்களில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க கூறினார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கில் ஏற்பட்ட திருப்பமும், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கொன்று வாபஸ்பெறப்பட்டதும், அண்மையில் பெப்பிலியான பகுதியில் முஸ்லிம் உரிமையாளருக்குச் சொந்தமான துணிக்கடை மீதான தாக்குதல் சம்பவம் நீதிமன்றத்துக்கு வெளியே இணக்கப்பாடு மூலம் தீர்த்துக்கொள்ளப்பட்டதும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது நிலையியற் குழுவால் ஆராயப்பட்டு அறிக்கையிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் சட்டத்தரணி விஜேநாயக்க கூறினார்.

இலங்கை நீதிமன்றங்களூடாக பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாது போகின்ற சந்தர்ப்பத்தில் அவை சர்வதேச மட்டத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலையியற்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஷிராணி பண்டாரநாயக்கவை தலைமை நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ள நீதித்துறைச் சுதந்திரத்தைப் மீட்டெடுக்கும் தமது பிரதான போராட்டம் வெற்றிகாணும்வரை தொடரும் என்றும் லால் விஜேநாயக்க கூறினார்.

'பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப், எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டுள்ளார் என்று பாருங்கள், அவர் நீதிபதிகளை விரட்டி ஏதேச்சாதிகாரியாக செயற்பட்டதற்கு இன்று பொறுப்புக் கூற நேர்ந்துள்ளது' என்பதை கருத்தில் எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.