Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

உழைக்கும் மக்களே! ஒடுக்கப்படும் மக்களே! மேதினத்தில் அணி திரள்வீர்!

புதிய-ஐனநாயக மக்சிச-லெனினிசக் கட்சியின் மேதின அறைகூவல்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப்பொருட்களுக்கும் தொடர்ந்து விலை அதிகரிப்புக்களைச் செய்து வரும் மகிந்த ராஐபக்ச அரசாங்கம் மின்சாரப் பாவனைக்கும் போக்குவரத்துக்கும் அளவுக்கு மீறிய கட்டணங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகிறது. இவற்றின் மூலம் நாட்டு மக்கள் அனைவரினதும் தலைகளில் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளை ஏற்றி வருவது மட்டுமன்றி, வயிறுகளிலும் ஒங்கி அடித்து வருகிறது. அதே வேளை நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை மறுத்து வடக்குக் கிழக்கில் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி வருகின்றது.

இந்நிலையில் உலகத் தொழிலாளர்களின் சர்வதேசத் தினமான மேதினத்தில் அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களும் அணி திரண்டு மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் கண்டனக் குரல் கொடுத்து எதிர்ப்புத் தெரிவிக்க முன்வரல் வேண்டும்.

இவ்வாறு யாழ்ப்பாணம்,அட்டன்,வவுனியா ஆகிய நகரங்களில் புரட்சிகர மேதினக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடாத்துவதற்கு தயாராகிவரும் புதிய ஐனநாயக மாக்கிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் ஆகியோர் கட்சியின் மத்தியகுழு சார்பாக வெளியிட்ட மேதின அறை கூவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் அவ் அறிக்கையில்,

இன்றைய மகிந்தராஐபக்ச சகோதரர்களின் குடும்ப ஆட்சியானது முன்னெடுத்துவரும் பொருளாதாரக் கொள்கையானது ஏகாதியத்திய உலகமயமாதலின் கீழான நவதாராள நுகர்வுப் பொருளாதாரமாகவே காணப்படுகிறது. உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பதிலான இந்த நுகர்வுப் பொருளாதாரமே நாட்டையும் மக்களையும் நாசப்படுத்தி வருகிறது.

நாட்டின் வளங்களையும் மக்களையும் சுரண்டிக் கொள்ளையிட்டு வரும் பொருளாதாரத்திற்குச் சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும், ஆலோசனை வழிகாட்டல் செய்து நிற்கின்றன. அதன் காரணமாகவே அரசாங்க – தனியார்துறை ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு மறுக்கப்படுகிறது. மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அண்மையில் கூட்டு ஒப்பந்தம் என்ற ஏமாற்றின் மூலம் அற்ப சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட உழைக்கும் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் அடக்குமுறைகளையுமே இன்றைய ஐனாதிபதி தலமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதே வேளை நாடு எதிர் நோக்கி நிற்கும் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பேரினவாத வக்கிரத்துடன் மறுத்து நிற்கிறது.

அத்துடன் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் தேசிய இனங்கள் மீதான நேரடினதும் மறைமுகமானதுமான பேரினவாத ஒடுக்கு முறைகளையும் நடைமுறைப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் அப்பட்டமான பேரினவாத ராணுவ அடக்கு முறையைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. நிலப்பறிப்பு, நிலஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு எனக் கேள்வி நியாயம் இன்றி முன்னெடுக்கப்படுகின்றன. இந் நிலையில் அனைத்து உழைக்கும் மக்களும் அடக்கப்படும் தமிழ் மக்களும் அணிதிரண்டு வெகுஐனப் போராட்டப் பாதையில் அணிதிரள்வதை விட வேறு மார்க்கம் இருக்க முடியாது. எனவே உலகத் தொழிலாளர் தினமான மேதினத்தில் அணிதிரளுமாறு எமது கட்சி அறைகூவல் விடுக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் கட்சியின் மேதினக்கூட்டம் பி.ப.4.00மணிக்கு ஸ்ரான்லி வீதி பட்டப் படிப்புகள் கல்லூரி வளாகத்தில் வட பிராரந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும். பிரதான மேதின உரையினை பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றுவார். கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம் உட்பட கட்சி, தொழிற்சங்க வெகுஐன அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரை நிகழ்த்துவர்.

அட்டன் நகரில் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் தலைமையில் மேதினக் கூட்டம் நடைபெறும். கட்சி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உரையாற்றுவார்.

வவுனியா நகரில் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் ந.பிரதீபன் தலைமையில் ஐந்து தொழிற் சங்க அமைப்புக்கள் இணைந்து மேதின கூட்டத்தையும் பேரணியையும் நாடாத்துகின்றனர். அங்கு கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா பிரதான உரையாற்றுவார். வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்துக்கு முன்பாகவிருந்து காலை 9.30மணிக்கு மேதினப் பேரணி ஆரம்பித்து பிரதான வீதிகள் ஊடாக வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்து அங்கு கூட்டம் இடம் பெறும். பி.ப.2.00மணிக்கு சுன்னாகத்திலிருந்து மேதினச் சைக்கிள் பேரணி ஆரம்பமாகி கங்சேசன்துறை வீதி வழியாக கூட்ட வளாகத்தைச் சென்றடையும்.

தொடர்புகளுக்கு:

சி.கா.செந்திவேல் – பொதுச்செயலாளர் 0779774427

வெ.மகேந்திரன் – தேசிய அமைப்பாளர் 0716745642

–25.04.2013

புதிய – ஐனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி