Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

கட்டமைப்பின் மாற்றத்தை நோக்கி!!!

உழைக்கும் மக்களுக்கான விடுதலையை வென்று எடுப்பது என்பதுதான் இன்று எம்முன்னால் இருக்கின்ற அரசியல். அதாவது உழைக்கும் மக்களுக்கான உரிமையை உறுதி செய்யாத வலதுசாரிய சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமாக வென்றடையலாம். ஆயினும் ஒரு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நகர்வதற்கு எதிராகவும், முக்கிய பிரச்சினையாக இருப்பது எதிர்ப்புரட்சிகர சிந்தனைக் கூறுகளும் செயற்பாடுகளுமாகும். ஆகவே தான் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொள்ள வைப்பதற்கான யுத்த - அரசியல் தந்திரோபாயத்தை, சமூக மட்டத்தில் இருந்து வகுப்பது இதில் அவசியமாகின்றது. இதில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கான வரலாற்றுக் கடமையை செய்து முடிப்பதற்கு எம்மை நாம் இதில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயமும் தேவையும் இருக்கின்றது. அத்துடன் உற்பத்திச் சாதனத்தை உடைமையாக்குவதன் ஊடாக அனைத்து உற்பத்திச் சக்திகளை உயர்ந்த தளத்திற்கு மாற்றி அமைப்பதற்கு, சமூக மேற்கட்டுமானத்தின் நிறுவனங்களின் பாத்திரத்தினையும் இந்தச் சமூக அமைப்பின் தன்மையில் இருந்து ஆராயவேண்டியுள்ளது.

உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும் மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது. உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களை தொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனை அறிவுறுத்தியும் இருந்தனர். நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரஸ்யப் புரட்சியின் பின்னரும், சீனப் புரட்சியின் பின்னரா கலாச்சாரப் புரட்சி என்பன முன்னால் உள்ள படிப்பினைகளை அனுபவங்களாக மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை போராட்டத் திசைவழிப் போக்கில், தவறான மனநிலையை வளர்த்துக் கொள்வதை தவிர்ப்பதற்கும் இவை மிக அவசியமாகின்றது. மனிதர்களின் தவறான மனநிலைப் போக்கினை சீர்நிலைப்படுத்துவது என்பதும் ஒவ்வொரு காலத்திலும் அவசியமாகின்றது. போராட்டங்களைத் தனியே ஆயுதப் போராட்டம், தொழிற் சங்கப் போராட்டம் அல்லது வேறு அடையாளப் போராட்டங்களுடன் நிறுத்திவிடும் மனோநிலைக்கு எதிராகவும் இங்கு போராட வேண்டியிருக்கின்றது. அத்துடன் வர்க்கப் போராட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய பொறுப்பு கம்ய+னிஸ்ட் கட்சியின் முக்கிய கடமை என்பது கார்ல்மார்க்ஸ் கூறியதன் அனுபவமாகின்றது.

இன்றைய சமூக இயங்கு தளத்தில் உற்பத்தி முறையில் அமைந்த சிந்தனை முறைகளும் அவை போதிக்கும் கருத்தியலுக்கு உட்பட்டுச் சிந்திக்கும் போக்குக்களையும் எதிர்க்கொள்ள வேண்டியிருக்கின்றது. அவை கொட்டித் தீர்க்கும் சமூக எதிர் விளைவுகளைப் பற்றிய மேம்போக்கான பார்வை ஆபத்தானதாகவும் இடராகவும் இருக்கின்றது. ஆயினும் இந்தப் பார்வைக் குறைபாட்டை தீர்ப்பதென்பதும் இலகுவானதுதான். காரணம் மார்க்சியம் இந்தச் சமூக அமைப்பின் கள்ளத்தனத்தையும், சிக்கலான சிந்தனை ஓட்டத்தையும் விபரமாக வெளிப்படுத்துகின்றது. ஆகவே இப் பார்வைக் குறைபாட்டை தீர்ப்பது இலகுவானதுதான். ஆனால் மார்க்சீயத்தினை நாம் புரிந்து கொள்வதில் பல தவறுகள் விடுவதும் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

இன்றைக்கு இருக்கின்ற மார்க்சிய இயக்கங்களில் உள்ள பலர் ஏதோ சிலவகைக் குறைபாட்டினுள் சிக்கியுள்ளனர். இவர்கள் முற்போக்கு முகாம் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு சாத்தியவாதம், கலைப்புவாதம், கவர்ச்சிவாதம், நடைமுறைவாதம், சட்டவாதம், தூய்மைவாதம் ஆகியவற்றைக் களைந்து, முன்னோக்குவது எவ்வாறென்று ஆராய்தல் மிக அவசியமாகும். இதனால் அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் அடுத்த கட்ட சமூக நகர்வில் ஓர் முன்னோக்கிய பாச்சலை உருவாக்க முடியும்.

பொருளாதார அமைப்பை தகர்ப்பதும் அதன் தேவையும்:

இன்றைய பொருளாதார அமைப்பு, மூலதனம் கொண்டவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் இந்த உற்பத்திச் சாதனத்தை, மூலதனம் படைத்தவர்களிடம் இருந்து கைப்பற்றியும், இருக்கும் சமூக அமைப்பை தகர்த்துப் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு உரியதாக்குவதாகும். இவ்வாறு தகர்த்துக் கைப்பற்றும் போராட்டத்தின் ஊடாக உற்பத்தி முறையை மாற்றியமைப்பதும், இதிலிருந்து ஓர்பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்கும் ஜனநாயகத்தை அனைவருக்குமாக உருவாக்கிக் கொள்வதுமாகும்.

இது சமூகக் கட்டமைப்பில் மாற்றங்கொள்ள வைப்பது என்பது உற்பத்திச் சாதனம் பொது உடமையாக்கப்படுவதன் ஊடாகவே சாத்தியம். புதிய வகை சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்வதும் புதியவகை உற்பத்தி முறைக்கேப்ப கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். இவைகள் இலகுவானதல்ல ஏனெனில் பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் பண்டைய உற்பத்தி உறவின் எச்சசொச்சங்கள் புதிய வகையான குறைவளர்ச்சி கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையில் கூட தொடர்ச்சியாக உயிர்வாழ்கின்றது.

ஒடுக்கும் வர்க்கத்தைக் பாதுகாத்து வரும் அரச இயந்திரத்திற்க்கும், அதனைப் பாதுகாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, ஒடுக்கப்படும் வர்க்கங்கள் போராட வேண்டும். இந்த வகையில் நில உடமை, ஏகபோக எதிர்ப்பு போன்றவற்றில் இதனை எதிர்க்கின்ற அனைவருக்குமிடையில் ஐக்கியத்தினைக் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் கட்டமைப்பில் மாற்றங்கொள்ளவைப்பதன் ஊடாகவே இறுதியிலக்கை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். கட்டமைப்பை மாற்றங்கொள்ள வைக்க வேண்டும் என்றால் முரண்பட்ட வர்க்கக் கூறுகளின் ஒத்துழைப்பு வௌ;வேறு தளங்களில் வெள்வேறு முரண்பட்ட நிபந்தனைகளுடன் ஒத்துழைத்துச் செல்வதன் ஊடாகவே சாத்தியமாகும்.

மேலே கூறப்பட்ட பெரிய விடயமான அரசியல், சில வரிகளுக்குள் அடங்குகின்ற போதிலும் இதனை அவ்வளவு இலகுவாக அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது. அதாவது எதற்காக இருக்கின்ற சமூகக் கட்;டமைப்பை மாற்ற வேண்டும் எனக் கருதும் பல ஆய்வாளர்களே, மேற்கட்டுமானத்தில் அமைந்த குடும்பம், சமயம், இராணுவம், நாடாளுமன்றம், சட்டம், நிர்வாகம் என்பவற்றை இயற்றி இயக்கும் இன்றைய விதிகளுக்குள் முடங்கிக் கொள்ளும் நிலையும் ஒரு காரணமாகும்.

அரச இயந்திரத்தின் கருத்தியல், சாதிய, குடும்பம் - சமயச் சிந்தாந்தத்தினுள் அமிழ்ந்திருக்கும் நிலையில், அவை மனித இனத்தின் மீது தொடுக்கின்ற கருத்தியலுக்கு எதிரான, தொடற்சியான போராட்டத்தின் ஊடாகவே இவை வழிநடாத்தப்பட வேண்டும். இப்படியான போராட்ட வடிவம் வெற்றி பெறவேண்டும் என்றால் இன - மத - சாதிய - பிரதேச வேறுபாடுகளை அகற்றும் படியான சமுதாயத்தைப் படைக்கும் வேலைத் திட்டம் அவசியமாகின்றது. இதற்காக ஒரு புரட்சிகரத் திட்டம் இருந்தால் மாத்திரம் போதாது. அதன் நடைமுறையும் அவசியமாகின்றது.

மாறாக, சில கம்யூனிஸ்ட் கட்சிகள் பெயரிற்காகவோ அல்லது ஒப்பிற்காகவோ சமூகத்தின் முரண்பாடுகளை கற்பதும் அதனை அறிக்கையாக்கி சமூகத்தில் முன் வைப்பதுமாகவும், அதுதான் தமது முழுமைபெற்ற வேலைத் திட்டமென, தமது அறிக்கைவிடும் வேலைத் திட்டங்களைக் கொண்டிருக்கின்றனர்.

சமூக மாற்றத்திற்கான போராட்டம் இதுதான் என்று ஒற்றைப் பரிமாணத்தில் சிந்திக்கும் சிந்தனை உள்ளது. புரட்சிகர சிந்தனைக்கு மாற்றாக அல்லாது சமூகத்தின் சுரண்டல், அடக்குமுறை, சமூகச் சிந்தனைமுறைக்குட்ப தெரிவுகளும், முடிவுகளும் உள்ளது. சுரண்டில் சமூகத்திற்கு எதிரான பாதையை தெரிவு செய்வதன் ஊடாகவே புதிய கட்டத்தினை அடைந்து வெற்றி கொள்ள முடியும்.

தன்னியல்பும், தன்னார்வும்:

தன்னார்வ நிறுவனங்கள் சாதிய நலன் கொண்டதாக, பால்அடக்குமுறை எதிர்த்;த பெண்ணிய அமைப்புக்கள், சுற்றற்சூழல் மாறுபடுதல், யுத்தங்களுக்கு எதிரான சமாதான அமைப்புகள், மிருகவதை அமைப்புகள் என பல்வேறு பிரிவுகளாக செயற்படுகின்றனர். தன்னியல்பு அமைப்புகள் பல்வேறுவகையாக சமூகத்தில் தோண்றுகின்றவை பெரும் அமைப்புக்களாக சர்வதேச நிறுவனங்களின் செல்வாக்கின் கீழ் இயங்கும் அமைப்புக்களாக உருவாகின்றன. இவைகள் தனிமனித சுதந்திரம் என்ற சிந்தனையை வலுக்க வைக்கின்றது. இன்றைய உலகில் தனிமனித சுதந்திரம் பற்றி ஆதிக்கத்தில் இருக்கின்ற பெரும் தேசங்களும், தொடர்பு சாதனங்களும் உரைக்கின்றன. ஜனநாயகம் என்னும் போது தனிமனித சுதந்திரத்தைப் பற்றியே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஜனநாயகம் என்ற சொற்சிலம்பத்தில் சிறுவர்கள் பற்றிய மனித உரிமைபற்றி இவர்கள் உரைப்பதும், தன்னார்வ நிறுவனங்களை உருவாக்குவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த அமைப்புக்கள் சமூகத்தின் முரண்பாடுகளுக்கு பொருளாதார கட்டமைப்பினால் ஏற்படுகின்ற முரண்பாடுகளே காரணம் என்பதை மக்களுக்கு கொண்டு செல்லவிடாது தடுக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளை கொண்டு இயங்கும் அமைப்புவடிவமாகும். பொருளாதார உற்பத்தி உறவுகளின் முரண்பாடுகளினால் ஏற்படும் செயற்பாடுகளை பொதுநிலையில் இருந்து (வர்க்கமுரண்பாடு) அணுகாது, குறிப்பிட்ட நிலையில் இருந்து அணுகும் போக்கு தன்னியல்பானதாக அமைந்து விடுகின்றது.

அதேபோல சாதியத்தினை முன்வைத்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டும் சக்திகள் புரட்சிக்கு வெகு இடையூறாக இருக்கின்றார்கள். இந்தச் சக்திகள் பல்வேறு புதிய புதிய கோட்பாடுகளை முன்வைத்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டுகின்றார்கள். இதில் அம்பேற்கார், பெரியார் போன்றவர்களை தமது வழிகாட்டியாக கொள்கின்றார்கள். சிலர் ஒடுக்கப்பட்ட சாதிகளின் மேம்பாட்டிற்காக போராடியவர்களை முன்னிறுத்தியும் மக்களை அணிதிரட்டுகின்றார்கள். சாதிக் கட்சிகளும், சாதியை அடிப்படையாக கொண்டவர்கள் தமது நலனை பாதுகாத்துக் கொண்டு செயற்படுவது பிற்போக்குச் சக்திகளின் உயர்ந்த கட்ட நிலைப்பாடாக இருக்கின்றது. மக்களை அணிதிரட்டுகின்ற போது பழைய உற்பத்தி முறையில் அமைந்த சிந்தனையை தொடர்ந்து பாதுகாக்கும் சக்திகளாக வகுப்புவாதிகள் இருக்கின்றார்கள்.

போலியுணர்வுகளை (சாதியம்) தகர்க்கும் பொருட்டு, யாழ் குடாநாட்டில் தாழ்த்திய - தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஓர் சமூக மாற்றத்திற்கான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் படிப்பினைகள் உள்வாங்கப்பட வேண்டும். சாதியப் போராட்டத்தின் போது மற்றைய சாதிகளின் முற்போக்குச் சக்திகளும், கட்சியின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்தனர். இங்கு மற்றைய சாதி மக்கள், ஓர் சமூக மாற்றத்திற்காக அரசியல் மயப்படுத்தப்பட்டமை பிற்பட்ட காலத்தில் சிதைந்ததையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில் வகுப்புவாத, தன்னார்வச் செயற்பாட்டு அமைப்புக்கள் சமூக மாற்றத்திற்காக போராடும் அமைப்புக்களின் செயற்பாடுகளை முன்னேறவிடாது தடுக்கும் வகையில் சாதியப் பெருமைகளையும், பிற்போக்குச் சிந்தனை வடிவங்களையும் மறுவுற்பத்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். சமூக அலவங்கள், அடக்குமுறை, சுரண்டல்கள் இந்த பொருளாதார அமைப்பின் விழைவால் உண்டாவது என்பதை தன்னியல்பான செயற்பாடுகள் வெளிப்படுத்துவதில்லை.

தன்னார்வச் செயற்பாடுகளை ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு சமூகத்தில் வளர்க்கின்றார்கள். இவர்கள் மனிதநேயத் தலையீடு என்று இராணுவ வழிகளையும் மேற்கொள்கின்றார்கள். தலையீடுகளின் முதல்படி முறையாக தன்னார்வச் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. தன்னார்வச் செயற்பாடுகளும் தன்னியல்பான சிந்தனையையும் ஊக்குவிக்கின்றது. இன்றைய பொருளாதார அமைப்பில் தப்பிப் பிழைக்க முற்படும் வர்க்கப்பிரிவுகளை தன்னார்வச் செயற்பாடுகளில் மூழ்குவது இந்தச் சமூக அமைப்பில் இயல்பான ஒன்றாகும்.

வர்க்க விடுதலைக்கு உட்படாத செயற்பாடுகள் தன்னியல்பானதாகவும், தன்னார்வங்கொண்டதாக இருக்கின்றது. ஏன் தேசியப் பிரச்சனை கூட தன்னியல்பிற்கு உட்பட்டதாக இருக்கும். தேசியம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தினர் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக போடும் கூப்பாடாகும். இலங்கை போன்ற நாடுகளில் உயர் வர்க்கத்தவர்கள் தமது இருப்பை, தமக்கான செயற்பாட்டிற்கான சந்தை, தளத்தை வேண்டியே தேசியத்தை பற்றிக் உரைக்கின்றனர். இங்கு சந்தை, தளம் என்பது உற்பத்தி செய்த பண்டத்தை விற்பனை செய்வதாக இருக்கலாம் அல்லது ஆட்சியதிகாரம் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும் இன்னும் இதரபல. இந்த வர்க்கத்தின் தன்நலத்தின் பால் கொண்ட ஆர்வமே இவர்களை தேசியத்தைப் பற்றிக் உரைக்க வைக்கின்றது. இவர்கள் தெருவில் படுத்துறங்கும் தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றியோ, அன்றாடம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களால் சுரண்டப்படுபவர்களைப் பற்றியோ இவர்கள் போராடவில்லை. இவர்கள் தமது நலன் நிறைவேறும் மட்டுமே போராடுவர். தன்னார்வ நிலையில் இருப்பதினால் பரந்துபட்ட மக்களின் தேவையை நோக்கியதாக அமையவில்லை. தமது நோக்கத்தை அடைவதற்காக இனவாதத்தை விதைக்கின்றனர்.

தேசிய இனப்பிரச்சனை:

நிலப்பிரபுத்துவத்துவ உற்பத்தியுடன் தேசிய இனங்கள் உருவாகினாலும் இனங்களுக்கிடையேயான சந்தைப் போட்டி என்பது உருவாகவில்லை. முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி ஊடாக நிலப்பிரபுத்துவ ஆட்சிகளைக் கொண்ட எல்லைகள் தமது தேசிய எல்லைகளாக மாறிக் கொண்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தையும் அவசியமாயிற்று வரலாற்று ரீதியான இனங்களைக் கொண்ட தேசங்கள் தமக்கிடையே எல்லைகளை வகுத்துக் கொண்டனர். இவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்தவர்களிடையே ஏற்பட்ட சமரசம் தான் சுவீஸ்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தேசிய இனங்கள் (தேசிய முதலாளிகள்) சமாதானமாக சந்தையை பிரித்துக் கொள்ள முடியும் காட்டினர்.

முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளான போலந்து, பின்லாந்து, உக்கிரேன், செக் போன்ற நாடுகளில் தேசிய இனக்கோரிக்கைகள் எழுந்தன. 1917 புரட்சியின் பின்னர் புதிய வகை அரசு உருவாக்கப்பட்டன. அங்கு தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டது. அப்போ பெரும்பான்மையான தேசிய இனங்கள் சோவியத் ஒன்றியத்தின் கீழ் இருக்கச் சம்மதித்தன. இதேவேளையில் பின்லாந்து பிரிந்து சென்றது.

ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சியின்வாயிலாக பழைய உற்பத்தி முறையான நிலப்பிரபுத்துவ உறவுகள் சிதைக்கப்பட்டன. தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்கு புதிய வகை நிறுவன அமைப்பு வடிவமும் தேவைப்பட்டது. தொழிற்துறை வளர்ச்சியின் மூலம் முதலாளித்துவம் வளர்ச்சிடைகின்ற போது பழைய ஆட்சிமுறையை, உற்பத்தி முறை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை. வளர்ச்சிடையந்த முதலாளித்துவ உறவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அலகுகள் நிர்வகிப்பதற்கு தேவையானது.

ஆனால் முழுமையாக முதலாளித்துவ வளர்ச்சி முழுமையாக அடையாத இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளில் விவசாயமும், குறைவிருத்தி கொண்ட முதலாளியம் கொலனித்துவத்தினால் புகுத்தப்பட்டடிருந்தது. இனங்களை ஒடுக்குவதற்கு அரைநிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சத்தில் அமைந்த அரசியல் கூறில் அடக்குமுறையின் மொழியும் மிருகத்தனமாக இருந்தது. இலங்கையில் இனவெறியை ஒரு பக்கம் ஆதரித்துக் கொண்டு இன்னொரு பக்கம் அதன் எதிரான எழுச்சியை அடக்கிக் கொண்டது.

ஆயுதத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுக் கொண்டு வந்துள்ளது. தேசிய இனத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் போராட்டத்தினை அனைத்து மக்களின் அணிதிரட்டல் ஊடாக வெற்றி கொள்ள முடியும்.

உரிமைக்கான போராட்டத்தினை இனமையவாத நிலைப்பாடுகளில் இருந்து வழிநடத்திச் செல்வதோ அல்லது இனவொடுக்குமுறைக் கூறுகளை புறந்தள்ளி புரட்சிகர அணியினை கட்டமுடியாது. இனமையவாதம் எவ்வாறு ஆபத்தானதோ அதேபோல இனங்களின் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான கோரிக்கைகளையும் புறந்தள்ளுவதாகும். வர்க்கப்புரட்சிக்கான அணிதிரட்டலில் தேசிய இனங்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையை அங்கீகரிப்பது முக்கியமானதாகும். தேசிய இனப்பிரச்சனைகளை கையாள்வதில் தன்னியல்புவாதத்தினை களைந்து கொள்ள வேண்டும். தன்னியல்புவாதத்தினை களைத்து கொள்வது அவ்வளவு இலகுவல்ல. தேசியத் தற்பெருமைகள், இரத்தமும் ஒன்றாக மக்களின் உணர்வலைகளை தாக்கவல்லது. இரத்தமும் உணர்ச்சியும் ஒன்றாக வெளிப்படுகின்ற போது இனமையவாதிகளின் சிந்தனையை வென்றெடுப்பதும், முன்னோக்கி நகர்வதும் இலகுவானதல்ல.

இனங்கள்; சுயநிர்ணயம் உடையவையாக இருந்தாலும், முதலாளித்துவ சமூக அமைப்பில் சுயநிர்ணயத்தை பெற்றுக் கொள்ள முடியாது. சுயநிர்ணத்தினை பெற்றுக் கொள்;ளும் போராட்டமே இந்தச் சமூக அமைப்பை மாற்றிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமாகும்.

தேசியப் பிரச்சினையில் ஒரு இனம் சுயநிர்ணயம் உடையது என்பதை கட்சி அங்கீகரிப்பதும், சுயநிர்ணயத்தை அடைவதற்கான போராட்டத்தினை வழிநடத்துவதும் வர்க்க நிலைப்பாட்டில் இருந்து அமையப்பெற வேண்டும்;. இங்கு சுயநிர்ணயம் என்பது உடனே பிரிந்து போவது என்றோ அல்லது இந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் சுயநிர்ணயம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்பது தவறானதாகும்.

ஆயுதப் போராட்டம்:

சமூக மாற்றத்திற்காக ஆயுதப் போராட்டத்தினை மாத்திரம் தெரிவு செய்கின்ற அமைப்புக்களில் சில, மக்கள் திரள் அமைப்புகளின் முக்கியத்துவத்தை மறுக்கின்ற போக்கு இருக்கின்றது. மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும். அரசியல் மயப்படுத்தப்படுவதன் ஊடாக, புரட்சிகர சிந்தனையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல மக்களின் அரசியல் கோரிக்கைகள் பற்றிய பார்வையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பான்மை மக்களின் உரிமைகளை சமதளத்தில் அனைவரும் எவ்வாறு வென்றெடுப்பது என்பது பற்றி அனைத்து மக்களுக்கும் அரசியலறிவு புகட்டப்பட வேண்டும்.

இதில் தனித்து ஆயுதம் தரித்த படைகளை வைத்திருப்பது தவறென்ற வாதமும் இருக்கின்றது. இதுவும் தவறானதாகும். அரசியல் இல்லாத இராணுவம் எவ்வளவு ஆபத்தானதோ அதே போலத்தான் இராணுவம் இல்லாத அரசியலும் ஆபத்தானதாகும். இதில் எப்போது இராணுவக் கட்டமைப்பு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை கள நிலவரத்திற்கு ஏற்ப, மக்கள் படை அமைக்கப்பட வேண்டும். அந்த மக்கள் இராணுவம் என்பது புரட்சியைப் பாதுகாப்பதாக வளர்க்கப்பட வேண்டும்.

சமூகப்பிரச்சனைகளை தன்னார்வ நிலையில் இருந்து செயற்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நிதிமூலதனம், வன்முறையற்ற (pயளகைளைஅ) சிந்தனாமுறையை ஏற்படுத்துகின்றது. உரிமைக்கான போராட்டங்களை நசுக்குவதற்கும், பிரச்சனைகளை தீர்ப்பதற்குமான முழுக் குத்தகையையும் வலுக்கொண்ட தேசங்கள் தம்கைகளில் வைத்துக் கொண்டு பொருளாதார நலனுக்கு ஏற்ப உலகை பிரிப்பதில் ஒன்றித்துத்து செயற்படுகின்றன. மனித நேய இராணுவவாதத்தினை குத்தகைக்கு எடுத்திருக்கும் அதே வேகத்தில் வன்முறையற்ற (உரிமைக்காக போராடுவது பயங்கரவாத பூச்சாச்சாண்டி) முறையில் போராடுமாறு சமூகத்தின் மீதான கருத்தியல் மேலாதிக்கத்தை விதைக்கின்றது. ஆனால் மனிதநேய இராணுவ நடவடிக்கைகள் என்று தனது சந்தையை விஸ்தரிப்பதற்காக ஆக்கிரமித்து அழிவுகளையும் ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக தென்னமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஆயுதப் போராட்டமே சரியானது தெரிவு செய்தனர் போராடினர். 1990களின் பின்னான பலஸ்தீனர்களின் விடுதலையை ஒடுக்கிய ஒஸ்லோ ஒப்பந்தமும், அதன் பின்னர் ஆயுதப் போராட்டம் என்பது காலாவதியாகிப் போன போராட்ட வடிவம் என்ற பிரம்மையை ஏற்படுத்திய சகாப்பத்தில் நுழைந்த காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் சர்வதேச நிலையில் விடுதலைப் போராட்டக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைவது சமாதான ஒப்பந்தங்களின் பின்னர் இடம் பெறும் ஒரு சடங்காகி விட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து ஜனநாயக வழிக்கு திரும்பியதாக பல அமைப்புகள் பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் ஆயுதங்களை ஒப்படைப்பதன் மூலம் ஒரு பாதுகாப்பை புரட்சிகர வர்க்கம் இழக்கின்றது. இவர்கள் சனநாயகவழி எனக் கூறிக் கொண்டு தமது புதிய நிலைக்கு புதிய விளக்கம் கொடுக்கின்றனர்.

இதிலும் குறிப்பாக 2001 பின்னரான காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் வெற்றிபெற்றிருக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் மக்களை வன்முறையற்றவர்களாக இருக்கும் படியான கருத்தியலை மேற்கொள்கின்ற வேளையில், பல ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்தி மக்களை ஒட்டாண்டியாக்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் இரத்தக் களரியைச் சந்தித்த சமூகத்தில் போராட்டம், ஆயுதம் என்பது பற்றிய சிந்தனையை மறுபடியும் முளைக்காது பாதுகாப்பதில் ஆழும் வர்க்கம் படைத்தளங்களை விஸ்தரித்தும், வன்முன்முறையற்ற விதிமுறைகள் என்று கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்கின்றது. மனிதர்களிடையே பிரச்சனைகளுக்கு ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற உளவியலையும் ஏற்படுத்துகின்றது.

வன்முறையற்ற முறைகள் என்பதற்கு பாட்டாளிவர்க்க முன்னணிச் சக்திகள் பலியாவது ஆபத்தானதாகும். ஆயுதத்தை தூக்கும்படி எதிரிதான் நிர்ப்பந்திக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

தேர்தல் பாதை:

தேர்தல் பாதையின் ஊடாக வர்க்கப்புரட்சியை வெற்றி கொள்ளும் சிந்தனை ஒரு ஆபத்தான போக்காகும். நாடாளு மன்றத்திற்கான கட்சியாக மாத்திரம் கட்சியின் பாத்திரத்தை சுருக்கிக் கொள்கின்ற போக்கு புரட்சிக்கான பின்னடைவை ஏற்படுத்துகின்றது. அது ஏனெனில் நாடாளுமன்றம் என்பதே ஒரு ஒடுக்குமுறை நிறுவனமாகும். நாடாளுமன்றத்தில் உற்பத்திச் சாதனத்தை உடமையாக வைத்திருக்கும் முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமான நலன் கொண்ட சட்டங்களை இயற்றியும், மக்களின் ஜனநாயக எதிர்ப்புகளை படைகளின் ஊடாக அடக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருக்கும் நிறுவனம் என்பதுதான் அவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை, இந்திய பொதுவுடமைக் கட்சிகள் தேர்தல் நேரத்தில் எந்த நேரத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேரலாம் என்ற சிந்தாந்த நியாயப்படுத்தலில் இறங்கி விடுகின்றனர். இவர்கள் காலத்திற்கு காலம் பிற்போக்குச் சக்திகளை வளர விடக் கூடாது என்பதற்காக கூட்டுச் சேருகின்றனர். ஆனால் இவர்கள் கூட்டுச் சேருவது கோட்பாட்டிற்கு சரியான நிலைப்பாடாகவே இருக்கின்றது. ஆனால் இவர்கள் கூட்டுச் சேருகின்ற கட்சிகள் நிரந்தர பாதையில் செல்வதில்லை. இலங்கையில் கம்ய+னிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றனர். இனவாதக் கட்சி தனது நிலையை மாற்றாமலே தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல மார்க்சிஸ்ட், கம்ய+னிஸ்ட் கட்சிகள் கடந்த 35 வருடங்களாக முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் இவர்கள் அவர்களை இடதுபக்கத்திற்கு இழுப்பது நடைபெறவில்லை. மாறாக அந்தக் கடசிகள் வலதுபக்கம் செல்ல, இவர்களோ கடல் வற்றும் எனப் பார்த்திருந்த கொக்கு மாதிரி இவர்கள் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்பிக் கொண்டே இருக்கின்றனர்.

கடந்த கால அனுபவங்கள் கற்பிப்பவைகளை படித்தேயாகவேண்டும். இந்த நிலையில் இருந்து மாற்றம் பெறவேண்டும் வாக்குக்கள் அதிகாமாக விழும் என்ற நம்பாசை கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவதன் மூலம் தமது ஆழுமையை, பலத்தைப் பாவிக்க முடியும் என்ற கோட்பாட்டை வெற்றி கொண்டதாக வரலாற்றில் இல்லை என்பதை கற்றுக் கொண்டுள்ளோம். எனவே அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும். இல்லாவிடின் இடதுசாரிகள் வெற்றி கொள்ளவே முடியாது. அவ்வாறு மாறாத பட்சத்தில் இந்தச் சமுதாயத்தை அமைப்பை பாதுகாக்கின்ற சக்திகளின் ஒரு பிரிவினராகவே இருக்க முடியும். இவர்கள் தொடர்ந்தும் வலது முகாமில் நல்ல சக்திகளை தேடுவதை விட்டு விட்டு இடது முகாமில் நல்ல சக்திகளை தேடிக் கொள்ளல் வேண்டும்.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய ஒரு உண்மையான சக்தியை இன்றைய நவீன உலகம் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையும், அவர்களே சிறந்த பாதுகாவலர்களாக பொறுப்பெடுத்துக் கொள்கின்ற காலகட்டமே இதுவாகும். முன்னர் வரலாற்றில் சமூக ஜனநாயகம் தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதாகவும், அவர்களின் உரிமையை சமாதானமான முறையில் தேர்தல் மூலம் பெற்றும் கொள்வதாக தன்னை மாற்றிக் கொண்டிருந்தது.

இங்கு நாடாளுமன்றப் பாதையை பின்பற்றும் கட்சிகள் மக்களுக்கான ஜனநாயக உரிமையை மறுக்கின்ற, அரசின் பாத்திரத்தை மறுக்கின்ற மறுக்காத நடைமுறையை பின்பற்றுகின்றனர். இந்தக் கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வருவது என்பது நாடாளுமன்றத்தின் மூலம் சாத்தியம் இல்லை என்பதையே தேர்தல் பாதையை பின்பற்றுபவர்கள் நிராகரிக்கின்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் இருந்து வாக்குக்களை பெறலாம். ஏன் சிறையில் இருந்துகொண்டும் பாராளுமன்றம் செல்ல முடியும். ஆனால் பொருளாதாரம், நிதிநிறுவனங்கள் என்பது அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருந்து இயக்குகின்றது. இதன் காரணமாக சிலிப் புரட்சி, கௌத்தமாலாப் புரட்சி, நேபாளப்புரட்சி, ஏன் கேரள, மேற்கு வங்காள ஆட்சிகள்கூட இதனால் நிலைத்து நிற்க முடியாதுபோனது.

தேர்தலில் ஈடுபடும் சக்திகள் முதலாளித்துவ பொருளாதாரத்தினை கொள்கையாக ஏற்றுக் கொண்ட சக்திகளின் பின்னால் செல்லும் நிலை என்பது அவலமானது. ஆகவே சமூகத்தினை மாற்றவேண்டும், உற்பத்திச் சாதனததை கைப்பற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்ட சக்திகள் சொத்துடமை வர்க்கச் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தால் புரட்சிக்குத் தான் பின்னடைவு ஏற்படும்.

சட்டவாக்கம் என்பது:

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றி சட்டங்களை உருவாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவது முதலாளித்துவச் சிந்தனையாகும். முதலாளியச் உற்பத்திமுறையை மாற்றிக் கொள்வதில்லை. சமூக அமைப்பின் உற்பத்தி உறவுகள் மாற்றங் கொள்வதில்லை.

உண்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அதிகமான சட்டங்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையினைப் பாதுகாக்கின்றது. சுதந்திரமாக உழைக்கும் மக்கள் சார்பாகவோ அல்லது ஒடுக்கப்படும் தேசிய, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு எவ்வித உரிமையையும் உத்தரவாதம் செய்வதில்லை.

நாடாளுமன்றமும் புதிய சட்டங்களை இயற்றி அதன் மூலம் போராடும் மக்களை அடக்குகின்றது. இதில் அரசிற்கு எதிராக வழக்குத் தொடர்கின்ற போது அரசு அதன் சட்டங்களைப் பின்பற்றுவதில்லை. ஆயினும் வழக்குகளுக்கு மேல் வழக்கு தொடர்ந்து குறிப்பிட்ட காரியத்தை சீர்குலைக்கின்றது, சின்னாபின்னமாக்கின்றது.

நீதிமன்றம் என்பது மக்களை அடக்கி வைப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரச இயந்திரம் ஆகும். நீதிமன்றம் என்ற அரச இயந்திரத்தில் பல பிரிவுகள் இருக்கின்றது. மக்களின் குற்றங்களை விசாரிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதாக இது உள்ளது. நுகர்வோர் நல வழக்கு, பொதுநல வழக்குத் தொடர்வது என்ற வழமைகள் இருக்கின்றது.

இப்படித்தான் இலங்கை அரசு சட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டது. இனி நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கை இணைக்க பாராளுமன்றத்தின் ஊடாக தடைசெய்யப்படும். உண்மையில் நீதிமன்றம் என்பது சுயாதீனமானது என்று முதலாளித்தவம் பாசாங்கு செய்யும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருப்பதில்லை.

அரச அடக்குமுறை நிறுவனம்:

இதில் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்கு புதிய வகை நிறுவன அமைப்பு வடிவமும் இதற்குத் தேவைப்படுகின்றது. படிப்படியான அரசின் வளற்சிக் கட்டமானது, பழைய உற்பத்தி முறையான நிலப் பிரபுத்துவ உறவுகளை ஓரளவுக்குச் சிதைக்கின்றது. இந்தத் தொழிற்துறை வளற்சியின் மூலம் முதலாளித்துவம் வளற்சியடைகின்ற போதும், பழைய ஆட்சிமுறை உற்பத்தி முறைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவதில்லை. வளர்ற்சிடையந்த முதலாளித்துவ உறவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அலகுகள் நிர்வகிப்பதற்கு தேவையானது.

அரசு நாட்டினை நிர்வகிக்கும் முகமாக வரியை வசூலிக்கின்றது. அதனால் எழுகின்ற மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுக்கும் அரசு, படைகள் சட்டங்கள் கொண்டு மக்களை அடக்குகின்றது. சில விரல் விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளின் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு, வளர்ச்சி என்பதே அரசிற்கு முக்கிய விடயமாக இருக்கின்றது. இங்கு அரசு என்பது ஒரு வர்க்கத்திற்கு சார்பானதாகவும், அதுவும் நிர்பானதாகவும், அதுவும் நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு பாதுகாக்கும் ஒரு கருவியாகவே தனது நிறுவனங்களை வைத்துக் கொண்டு செயற்படுகின்றது.

இதில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் பாதுகாக்கும் ஒரு அரசினை கட்டுப்படுத்துவது பெரும் முதலாளிகளும், நிதிநிறுவனங்களும் ஆகும். இந்த அரச நிதிநிறுவனங்களுக்கும் அரசிற்கு வெளியே இருக்கின்ற சர்வதேச பெரும் நிதிநிறுவனங்களும், தொழிற்சாலை முதலாளிகள், வங்கிகள் என்பனவும் அரசை ஆட்டிவிக்கின்றது.

“மக்களின் வற்புறுத்துதல் காரணமாக, (பூர்ஷ்வா) முதலாளிய பழமைவாத அரசு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆயினும் இப்படியான அரசு அடிப்படை சமூக மாற்றத்திற்கு அனுமதிக்க மாட்டாது. அது தமது அரசைக் காத்துக் கொள்ளச் செய்யும் இடைக்கால சமாதானமே சில சீர்திருத்தங்களாக அமைகின்றன. இதுதான் அரசின் சீர்திருத்தம். ஆனால் புரட்சி என்பது, அந்த ஆட்சி அதிகாரத்தை ஒரு வர்க்கத்திடமிருந்து மற்றொரு வர்க்கத்திற்கு மாற்றுவது என்பதாகும். இதனாலேயே பழமைவாத அரசின் சீர்திருத்தம் என்பது ஒருபோதும் புரட்சியாகாது. சீர்திருத்தத்தால் ஒருபோதும் சமூக மாற்றம் வராது” அடக்குமுறை நிறுவனத்தின் அதிகாரத்தினை ஒரு அரசியற் புரட்சியின் மூலமே வெற்றி கொள்ள முடியும்.

ஆயினும், அரச அதிகாரத்தை கைப்பற்றினால் மாத்திரம் போதாது. அரச நிறுவனங்கள் முதல் அனைத்துச் சமூக அமைப்பின் நிறுவனக் கட்டமைப்புகளிலும் மாற்றம் கொள்ளவேண்டும். சிந்தனா முறையிலும் மாற்றி அமைக்காவிடின், இந்தச் சமூகத்திற்கான பிரச்சினைகளை தீர்க்கவே முடியாது.

தன்னியல்புவாதம்:

வன்முறை எதிர்ப்பு என்பது முதலாளித்துவ சக்திகள், சமூக சனநாயக சக்திகள், மிதவாதிகளிடம் காணப்படுகின்றது. ஆனாலும் இவற்றின் வன்முறை எதிர்ப்புக் கோசம் என்பது, சுரண்டல் அரச அமைப்பை பாதுகாக்கும் கவசமாகவே பாவிக்கப்படுகின்றது. இதில் அகிம்சை வழியைத்தான் மிகப் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர்.

இதில் வன்முறை எதிர்ப்பு என்பதில் மாத்திரம் கவனம் செலுத்தினால், இந்த வன்முறையில் ஈடுபடுபவர்கள் தம்மவர்கள் இல்லை என்கின்றனர். வன்முறை, கிளற்சி என்ற நிலையில்லாமல் செய்யக் கூடியதை செய்வோம் என்ற பல மட்டத்திலான கருத்தைக் கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதனை பின்வரும் வகையாக பிரித்துப் பார்க்கலாம்:

ஐ.நா.வின் தன்னார்வக் குழுக்களின் ஆதரவில் நடைபெறும் மாநாடுகள், ஆய்வு முயற்சிகள் (சுற்றாடல் பாதுகாப்பு மாநாடு, கண்ணிவெடி தடைசெய்தல், சனத்தொகை தடுப்பு போன்றவை)

அரசியற் கட்சிமட்டம்:

தனிநபர் மட்டத்தில் தம்மால் முடிந்ததை செய்வோம் என எண்ணுதல். ஆனால் இவைகள் எல்லாம் தன்னார்வ நிலை எனக் கொள்வதில் எல்லோரும் உடன்பாடு கொள்ள மாட்டார்கள். வன்முறை கிளற்சி செய்பவர்களை நாகரீகமற்ற மனிதர்களின் செயல்கள் என இவர்கள் கொள்கின்றனர். உலக அரசியல் ஓட்டத்தில் எவ்வகையான ஓட்டங்கள் நடைபெற்றாலும் பரவாயில்லை, தேவையில்லாமல் வல்லரசுகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதிலும் பார்க்க, தம்மால் செய்யக் கூடியவற்றை செய்வோம் என்ற மனோநிலையே இவர்களிடம் காணக்கூடியாக உள்ளது.

இதில் தனிநபர் நலன் என்பது தமது இருப்பை உறுதி செய்வதற்கானது என, ஒரு அமைப்பில் தனிநபர்கள் எவ்வகையான பாத்திரத்தை வகிக்க முடியும் என்ற தெளிவில் பேசுபவர்கள் இவர்கள். இதனாலும் இவர்கள் தனிநபர் நலனை முதன்மைப்படுத்துகின்றனர். இவர்கள் தனிநபர் சுதந்திரத்தை அல்லது தனித்துவவாதத்தை முன்வைக்கின்றனர்.

இப்படியானோர் தன்னியல்பிற்கு உட்பட்டு பின்வரும் தளங்களில் எமது தேசங்களில் எவ்வாறு செயற்படுகின்றனர் எனில், அவை மனித உரிமை அமைப்புக்கள், பெண் விடுதலை அமைப்புக்கள், சாதிய எதிர்ப்புச் சக்திகள், குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக மட்டும் தம் சக்தியைப் பயன்படுத்தும் சக்திகளாக மட்டும் இவர்கள் இருக்கின்றனர். இவைகள் தன்னார்வச் செயற்பாட்டிற்கு அப்பால் செல்ல முடிவதில்லை. ஆனால் இவர்களின் சீர்திருத்தப் போராட்டங்களை ஒரு கட்சியும் கூட எதிர்ப்பதில்லை. அதனால் குறிப்பிட்ட வரம்பினுள் இவர்கள் திருப்தி அடைவதையும், மக்கள் தேவையற்றுத் தனிப்போக்கில் திசை திருப்பப்படுதலையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

மக்களிடையே தன்னியல்பான செயற்பாடுகள் என்பது தாராளமாகவே காணப்படும். அதனை ஒழுங்குபடுத்தி, போராட்டத்தை சரியான வழிக்கு நடத்திச் செல்ல வேண்டிய கடமையானது ஒரு கட்சியின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையை போக்குவதற்கு கட்சியானது கடுமையான உழைக்க வேண்டியுள்ளது. ஒரு கட்சியினுள் தன்னிச்சைகளுக்கு இடமளிக்கக் கூடாது. அவற்றை கட்சியானது உடனுக்குடன் முடிவிற்கு கொண்டு வரவேண்டும்.

பழைய சிந்தனைகள்:

முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாக்குவது மாத்திரம் இல்லை சிந்தனையும் மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தை மாற்றவேண்டும் என்றால், அதனை இந்தச் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்துதான் உருவாக்கவேண்டும். இந்த நிலையில் சமவுரிமைக்கான வெகுஜன திட்டம் கூட சமூக மாற்றத்திற்கான ஆரம்ப வேலைமுறையே. ஆனால் இன்று சமூக அரசியலில் யார் சரியான கோட்பாட்டாளர் என்ற போட்டி மனப்பான்மையும் ஒரு புறத்தில் உருவாகி இருக்கின்றது.

இவர்களும் இந்த அழுகிய சமூகத்தின் உற்பத்திப் பண்டங்கள் தான். இந்தப் பொருளாதாரம் படைக்கும் மனிதர்களும் இந்தச் சமூகத்திற்கு ஏற்பவே பிற்போக்குத்தனம் கொண்டவர்களாகவும், புரட்சிக்கு தயாரற்ற மனிதர்களாகவுமே இருக்கின்றனர்.

ஆண்டான் அடிமைக் காலத்தைப் போல, சொல்வதைக் கேட்டுக் கொண்டு கக்கத்தில் துண்டை வை என்று கூறும் ஆண்டான் அடிமையை நிலை நிறுத்தும் ஆதிக்கச் சிந்தனையே இது. இந்தச் சிந்தனையை யாழ் சைவ மேட்டுக்குடி வேளாளம் என்பார்கள் இலங்கையில். இந்தியாவில் பார்பனியம் என்பார்கள். இது அரை நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் ஆகும். அரை நிலப்பிரபுத்துவ சிந்தனையில் தூய்மைவாதமும் முக்கிய அம்சம்.

இந்தத் தூய்மைவாதம் ஒவ்வொரு மதங்களிலும் வெவ்வேறு வடிவத்தில் பொறிமுறைகளைக் கொண்டு இருக்கின்றது. துடக்கு, தீண்டத் தகாதவர் என்னும் சிந்தனை இதனுள்ளே இருக்கின்றது. இதில் தூய்மை வாதத்தை யார் எப்படிக் கதைக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டியதும் அவசியமாகின்றது.

கத்தோலிக்கத்தில் திருச்சபைக்கு விசுவாசமாக இல்லாது விடின், கோவிற் சபையை விட்டு விலக்கி அன்னியப்படுத்துவது. கத்தோலிக்கத்தில் சுவாமியாகப் போகவேண்டும் என்றால், தவறு செய்யாதவனாக திருமணம் முடிக்காதவனாக தூய்மையாக இருக்க வேண்டும். அவனே கிறிஸ்தவ பாதிரியாகப் போக முடியும். புரட்சிக்கும் அவ்வாறே தூய்மையானவர்களை தேடித் திரிகின்றார்கள் சிலர். புரட்சியை விரும்புவோர் எத்தளத்திலும் தவறு விட்டிருக்கக் கூடாது, அவ்வாறு தவறு விட்டிருந்தால் துடக்கு. ஆக புரட்சிக்கும் புரட்சியை முன்னெடுப்பதற்கும் துடக்கில்லா ஜீவன்களை தேடியோடுகின்றது இந்தச் சமூகச் சிந்தனை.

இந்தப் பழைய உற்பத்தி முறையின் சிந்தனைக்கு மாற்றாக, புதிய சிந்தனையை உருவாக்காது விடின், இந்த கவித்துவ - புத்திஜீவிப் புரட்சிக் காரர்களுக்கு முன்னால் எல்லோரும் தூய்மைவாதமான பாவம் செய்தவர்களாவும், தீண்டத் தகாதவர்களாகவுமே இருக்க முடியும்.

ஆகவே பாவம் செய்யாதவன் எவனோ..! அவன் வந்து கல்லெறி. தீட்டில்லாத உயர்குடியே நீ வந்து புரட்சி செய் போன்ற போலி உணர்வு சமூகத்தின் சிந்தனையில் ஆட்கொள்கின்றதுடன், சமூகக் கட்டுப்பாட்டையும் இப்படி விதிக்கின்றது.

அத்துடன் எதிரிக்குத் துணைபோகும் கருத்துக்கள், துணையாக நடப்பது என்பதும் கூட இந்தச் சமூக அமைப்பினால் உருவாக்கப்படும் லும்பன் சிந்தனை தான். தனிநபர்கள் தான் தப்பினால் காணும் என்ற சுய நலச் சிந்தனைதான். இதுகும் ஒரு வாழ்வு முறைதான். இந்த வாழ்வு முறையையும் இந்தச் சமூகம் உருவாக்கிக் கொள்கின்றது.

இந்தச் சமூகத்தில் உள்ளவர்களின் குற்றம் என்பது சந்தர்ப்பவசத்தாலும், உளவியல் ரீதியாகவும், லும்பன் தன்மையாலும் உருவாக்கப்படுகின்றது. இவைகளை திருத்த வேண்டியது அரசின் கடமையாகின்றது. ஆனால் அரச இயந்திரம் என்பது உழைக்கும் மக்களிடம் இல்லாதபோது இவ்வாறான தவறான பாதையில் செல்கின்றவர்களையும் சரியான பாதைக்கு கொண்டுவருவதும் ஒரு வேலைமுறைக்கு உட்பட்டதாக இருக்கின்றது.

இதேபோல அரசியல் சக்திகளில் மூளை உழைப்பில் மட்டும் தங்கியிருப்பவர்களில் சிலர் இந்தச் சமூக அமைப்பை பாதுகாக்கின்றவர்களாகவே உருவாகின்றார்கள். இவர்கள் தமது வர்க்க நிலை காரணமாக ஒரு அமைப்புக்கு எதிரான தனிமனித சிந்தனையை சமூகத்தில் முன்வைக்கின்றார்கள். இவர்களின் தனித்துவவாதச் சிந்தனை என்பது, ஏகாதிபத்தியப் பொருளாதார உற்பத்தியைக் கொண்ட நாடுகளில் வளர்ந்துள்ளது. ஆனால் அரை நிலபிரபுத்துவத்தில் முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடையாத நாடுகளில் சுயநலம் உள்ளதாகவும், ஓர் அரைத் தனித்துவவாதம் கொண்டதாகவும் இது இருக்கின்றது. இதன் காரணம் யாதெனில் முழுமையாக தனித்துவ மனிதர்களாக மாறக்கூடிய பொருளாதார அமைப்பு இன்னும் வளற்சியடையவில்லை என்பதாகும்.

இவ்வாறானவர்களை எவ்வாறு அணுகுவது என்பது ஆராயப்பட வேண்டும். ஆனால் இந்தச் சிந்தனையில் பிற்போக்கு பழமைவாதத் தன்மை கொண்டவர்களாக இருப்பினும், இவர்களும் இந்தப் பொருளாதார அமைப்பின் சுரண்டலுக்கு உள்ளாகின்றார்கள் என்பதை இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியதும் கடமையாகின்றது. (இங்கு வர்க்க பேதங்கள், நேச சக்தி பற்றிய ஆய்வு அவசியம்)

மக்களை அணிதிரட்டுவதற்கும், சமூகச் சூழலை அளவிடுவதற்கும் அளவுகோலாக பழைய உற்பத்தி முறை சார்ந்த நீதிநெறி உயிர்வாழ்கின்றது. பழைய உற்பத்திமுறை சார்ந்த அரை நிலப்பிரபுத்துவம் தொடர்ந்து உயிர்வாழ்வதை இன்றைய சமூக அமைப்பில் காணலாம்.

பழைய உற்பத்தி முறைக்கும் அது உருவாக்கிக் கொண்ட போலியுணர்விற்கும் புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்குமான சிந்தனை மாற்றத்திற்கான போராட்டம் என்பது, வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தே தொடர வேண்டும்.

அணுகுமுறையும் கோட்பாடும்:

போராட்டம் தோல்வியடைந்ததற்கு அரசியல் காரணங்களை நோக்கி நகர்வது முக்கியமாகின்றது. அவைகள் ஒரு தீர்க்கமான முடிவுகளில் இருந்து அல்ல. அவைகள் பொதுவான சமூகத்தளத்தில் உள்ள முரண்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். எமது தேசங்களில் எவ்வாறு பிரதியிடலாம் என்று ஏதாவது ஆய்வு நிலை வைத்திருந்து அதில் இருந்து புதிய கோட்பாட்டை உருவாக்க வேண்டும்.

ஆனால் எமது தேசத்திற்கான கோட்பாட்டை வகுக்கின்ற போது தன்னியல்பான அம்சங்களை எதிர்க்கொள்வது என்பது இனமையவாதிகள், வகுப்புவாதிகள் (சாதி), பெண்ணியம் போன்ற பிரிவினர்களிடையே இருந்து வரும் கருத்துக்களை எதிர்க் கொள்ள வேண்டியிருக்கின்றது.

மார்க்சீயம் என்பது தத்துவம் அதில் இருந்து எமது தேசத்திற்கான பொருந்தக் கூடிய கோட்பாட்டை உருவாக்க வேண்டும். அதேபோல மார்க்சீயம் என்பது ஒவ்வொருநாளும் சமூக நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் ஆகும். இன்றையப் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரு சமதர்ம சமூதாயத்திற்கான புரட்சிதான். நாம் கடக்க வேண்டிய பாதை வெகுதூரத்தில் இருக்கின்றது. ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைதான் செய்யவேண்டுமென்பது வைத்திய ஆலோசனை அல்லது முடிவு. அறுவைச் சிகிச்சை செய்யும் வரையும் வேறு மருந்துவகை கொடுத்து நோயாளியின் வலிக்கு ஆறுதல் கொடுப்பது தவறாகுமா? நோய்க்கு கொடுக்கும் மருந்துதான் முதலாளித்துவ ஜனநாயகமாகும். புதிய ஜனநாயகப் புரட்சியானது முதலாளித்துவ கடமைகளை நிறைவேற்றுச் செல்வதாகும்.

முதலாளிய தேசிய வாதிகளைவிட மாற்றுச் சிந்தனையுடன் கவர்ந்த ஒரு திட்டத்தை வைக்கின்ற போது அது கவர்ச்சிக்குரியதாகிறது. இதன் மூலம் தமது அரசியலை அவர்கள் தமக்கு எது சாத்தியமானது எதுவெனப்பட்டதோ அவற்றை நிறைவேற்ற முனைகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பவாதப் போக்கு தமது நலனுக்கு நல்லது என்று கருதியவற்றிற்காக மட்டுமே பாடுபட வேண்டும் என்ற சீர்திருத்தவாதக் கோட்பாட்டை பிரகடனம் செய்தார்கள். இந்தப் போக்கு காற்று எந்தப் பக்கம் வீசுகின்றதோ அந்தப் பக்கத்திற்கு சார்ந்து நிற்கின்றது. முதலாளிய வர்க்க அரசியல் கொண்டவர்கள் மக்கள் திரள் பிரச்சினைகளை வர்க்கப்பார்வையுடன் அணுகுவதுமில்லை. தமது குறுகிய கால தேவையும், தேர்தலில் பிரபல்யமாகும் நோக்கோடு செயற்படுகின்றனர். மக்களை கவர்ந்து கொண்டு தமது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றன. இது போராட்டப் பாதையில் முக்கிய பிரச்சினையாகவுள்ளது. குறுக்கு வழியாக சாதித்து விடலாம் என்ற குட்டி முதலாளித்துவ சிந்தனையை திட்டமிட்டு விதைக்கும் போக்கும் போராட்ட முனைப்பிற்கு பாதகமாக இருக்கின்றன.

கடந்த காலத்தில் எவ்வாறு வலதுதேசியவாதம் தன் கையில் எடுத்துக் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ளாமை தற்கால நிலமைகளையொட்டிய பிரச்சனைக்கு தீர்வும் அடுத்த நிலைக்கு நகரும் படியான அரசியல் திட்டம் முதலாளித்துவ கடமையை வரலாற்றுக் கடமையை முடித்துக் கொள்வதற்கும் அடுத்த நிலையை அடைவதற்குமான வழி இதுவாகும்.

இன்று பிரச்சனைகளை பொத்தாம் பொதுவாக அடக்கிக் கொள்கின்ற நிலை உள்ளது. இது இனவாத அரசும் சரி, ஏகாபதிபத்தியங்களும் சரி இனப்பிரச்சினைகளை திசைதிருப்புவது, அல்லது இனமுரண்பாட்டை அதிகப்படுத்துவது, அல்லது பயங்கரவாதம் என்ற போர்வையில் போராட்டத்தை திசைதிருப்புவது, நசுக்குவது என்ற நிலையில் செயப்படும் நிலைக்கு ஒத்ததாகும்.

ஆனால் இனத்துவ மோதல் என்பது இனங்களுக்கிடையில் பகை ஊட்டப்பட்டுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் உணர்ச்சி அதிகம் கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்கு தூபமிட்ட வர்க்கச் சக்திகள் பகையை தணிக்க எந்த முயற்சியும் எடுக்காது. அரசியல் சதிராட்டம் தொடர்வதால் பொதுவான பிரச்சனை பின்தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது. இதனால் தான் இனங்களின் தேசிய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு இலங்கைக் கான புதிய ஜனநாயகப் போராட்டம் என்பது கட்டியெழுப்பப் படவேண்டும். “எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்." மார்க்ஸ்" கடக்கின்ற பாதையில் முதலாளித்துவ கட்டத்தை அடைந்த பின்னர் தான் சோசலிசத்தை அடையமுடியும்.

இங்கு பழைய உற்பத்தி முறைக்கும் அது உருவாக்கிக் கொண்ட போலியுணர்விற்கும் புதிய பொருளாதார கட்டமைப்பிற்குமான சிந்தனை மாற்றத்திற்கான போராட்டம் என்பது வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தே தொடர வேண்டும். எவ்வாறு புதிய பொருளாதார கட்டமைபில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமோ அதே போல புதிய சமூகத்தின் கட்டுமாணங்களில் பழைய நிறுவனங்களில் உள்ள அனைத்தையும் மாற்றத்திற்கு கொண்டு வரவேண்டும். புரட்சியின் பின்னரான சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியில் பழைய உற்பத்தி முறையில் ஏற்பட்ட சிந்தனை கூறுகளுக்கு முடிவுகட்டும் நோக்குடன் நடைபெற்ற வர்க்கப் போரின் தொடர்ச்சிதான். அதில் உள்ள சாதகமான பாதகமான வெற்றி தோல்விகளை நாம் கற்க வேண்டியுள்ளோம். எவ்வாறு லெனின் சோவியத் புரட்சியின் பின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகர கடமையை நிறைவேற்றும் படி கட்சிக்கு அறைகூவல் விடுத்தார். கலாச்சாரப் புரட்சியிலும் பழைய உற்பத்தி உறவில் இருந்து பிற்போக்கு தனங்களையும் சோசலிசப் புரட்சியின் பின்னரும் வர்க்கங்கள் இருக்கும் என்பதினால் ஏற்பட்ட வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக பார்க்கத் தவறுகின்றதை திட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.

சோசலிசத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் விடைபெறகிடைக்கும் என்ற நிலைப்பாடானது இன்றைய உலகில் உனக்கு கிடைக்காததை இட்டு கவலை கொள்ளாதே விண்ணுலக இராட்சியத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்து முதல்வாதத்திற்கு ஒப்பாகும். புதிய ஜனநாயகப்புரட்சியை சீரளித்த தேர்தல் பாதையின் மூலம் வெற்றி கொள்ள முடியாது.

முன்னர் குறிப்பிட்டது போன்று சோசலிசம் தான் தீர்வு. ஆம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அனைவருக்கும் உரிமை கொடுக்கப்படும் அது உண்மை. போகும் பாதை நெடுந்தூரம் உள்ளது அதனை கடப்பதற்கு நேச சக்திகளின் அணிதிரட்டல் அவசியமானதேவையாகும்.

இங்கு பழைய உற்பத்தி முறைக்கும் அது உருவாக்கிக் கொண்ட போலியுணர்விற்கும் புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்குமான சிந்தனை மாற்றத்திற்கான போராட்டம் என்பது, வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தே தொடர வேண்டும். சோசலிசக் கட்டத்திற்கு நகர்வதற்கு முன்னர் அமையவேண்டிய ஜனநாயக அம்சங்கங்கள் குறைவிருத்தியடைந்த இலங்கை போன்ற நாடுகளில் அது முதலாளித்துவ ஜனநாயக வகைப்பட்டதாகவே இருக்கும். முதலாளித்துவ ஜனநாயத்தினை பிரதியிடுகின்றது போது பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுகின்றது. புதிய பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமோ, அதேபோல புதிய சமூகத்தின் கட்டுமாணங்களில் பழைய நிறுவனங்களில் உள்ள அனைத்தையும் மாற்றத்திற்கு கொண்டு வரவேண்டும்.

லெனின் சோவியத் புரட்சியின் பின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகர கடமையை நிறைவேற்றும்படி கட்சிக்கு அறைகூவல் விடுத்தார் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இதேபோல முதலாளித்துவ ஜனநாயக திட்டத்திற்கு அமைய மாவோ புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டதினை முன்வைத்தார். இங்கு தேசியமுதலாளிகளையும் அன்றைய சூழலில் இணைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க் கொண்டார். அன்றைய உலகச் சூழலில் யப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. ஆனால் தேசிய முதலாளிகள் யப்பான் ஆக்கிரமிப்பு வெற்றி கொண்ட பின்னர் கம்ய+னிஸ்ட்டுக்களுக்கு எதிராக திரும்பினார். எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் போது தேசிய முதலாளிகளின் பங்களிப்பு என்பது இலங்கை போன்ற தேசத்தில் நிபந்தனையாகத் தேவையில்லை. ஆனால் சோசலிசத்தை அடைவதற்கு தேசியங்களின் முதலாளித்துவ ஐனநாயக உரிமையை அங்கீகரிக்காது அவர்களை இணைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அங்கீகரிக்காத இடதுசாரி இயக்கங்களின் குறைபாடுதான் வலதுசாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். இதுதான் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆக புதிய ஐனநாயகப் புரட்சிக்கு அவசியமானது இனங்களின் நேச வர்க்கங்களின் முதலாளித்துவ ஐனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரித்து அவர்களை இணைத்துக் கொள்வதாகும்.

புரட்சியின் பின்னரான சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியில் பழைய உற்பத்தி முறையில் ஏற்பட்ட சிந்தனை கூறுகளுக்கு முடிவுகட்டும் நோக்குடன் நடைபெற்ற வர்க்கப் போரின் தொடர்ச்சிதான். அதில் உள்ள சாதகமான பாதகமான வெற்றி தோல்விகளை நாம் கற்க வேண்டியுள்ளோம். கலாச்சாரப் புரட்சியிலும் பழைய உற்பத்தி உறவில் இருந்து பிற்போக்கு தனங்களையும் சோசலிசப் புரட்சியின் பின்னரும் வர்க்கங்கள் இருக்கும் என்பதினால் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டம் அவசியமானதாகும்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத்திட்டமானது அனைத்து இனங்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையையும், தாழ்த்தப்பட்ட சாதிகளின், பெண்கள், குழந்தைகள், தனிமனிதர்களின் முதலாளித்துவ ஜனநாயகத்தை அங்கீகரிப்பதன் மூலமே இலங்கைகான புதிய ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொள்ள முடியும்.{jcomments on}