Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வவுனியாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர் ஒன்றுபட்டு ஆர்ப்பாட்டம்.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தாம் சிற்றூழியர்களாக பணியாற்றும் போதிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது புதியவர்களுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலைச் சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியும் இதனை ஆதரித்து ஊழியர்களோடு ஆர்ப்பாட்டத்தில் முழுமையாகக் கலந்துகொண்டது.

வன்னிப் பிராந்தியத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றவென சிற்றூழியர் நியமனம் இன்று (8/6/2013) வவுனியா நகரசபை மண்டபத்தில் 3 மணியளவில் இடம்பெறவிருந்த நிலையில் மதியம் 1 மணிக்கு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா வைத்தியசாலையின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஏ 9 வீதி வழியாக வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்து வாயிலை மறித்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அவ்விடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து தனது எதிர்ப்பினைக் காட்டியிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘எம்மை நம்பி வாழும் எமது குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்’’, எங்களுக்கு உடனடி தீர்வை வழங்குங்கள்’’, "வவுனியா வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள் 50 பேருக்கு நியமனம் பெற நேர்முகப்பரீட்சை நடத்தி எம்மை ஏமாற்றி வெளியாருக்கு நியமனம் வழங்காதே’’,  "4 வருடங்களாக சிற்றூழியாகாளக கடமைபுரியும் எமக்கு நியமனம் வழங்கு" என முழக்கங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இவ் வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் 5 பேரை அழைத்து சென்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீனுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப்பட்டு அதற்கான நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென 5 பேருக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட்டதுடன் மிகுதி 45 பேரும் கைவிடப்பட்டிருந்தனர். இவ்வளவு காலமும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமை தொழிலாளர்களிடையே கடும் கோபத்தினை உருவாக்கியிருந்தது.

நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டவர்களுள் சிங்கள தமிழ் முஸ்லிம் தொழிலாளர்கள் அனைவரும் அடங்குவர். இவ்வார்ப்பாட்டத்தில் மூவினத்தையும் சேர்ந்த தொழிலாளர்கள் முன்னின்று கலந்துகொண்டார்கள். இதில் 5 முஸ்லிம் தொழிலாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டபோதும் அவர்கள் தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தி நியமனங்களைப் பெற்றுக்கொள்ளாது ஏனைய தொழிலாளர்களுக்காகப் போராட முன்வந்துள்ளனர்.

-thulaa.net