Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இணக்க அரசியல் கயவர்கள்!!!!

இன்றைய அரசியல் என்பது மக்கள் விரோதமாகவும் கோமாளித்தனமாகவும் மாறியுள்ளது.

இன்றைய தமிழ் கட்சிகள் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தினை பல வடிவங்களில் மேற்கொள்ள முடியும். சம்பந்தன், சுமந்திரன், சங்கரி, மாவை நீங்கலா மற்றவர்களுக்குத் தெரியும் எவ்வாறு போராட்டங்களை நடத்த வேண்டுமென்று. இவர்கள் மக்களை அணி திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதனை தவிர்த்து, அன்னிய சக்திகளின் தயவை நாடி மக்கள் போராட்டங்களை மலடாக்கி மழுங்கடிக்கின்ற வேலையை செய்து கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு மாறாக முடியிழந்த புலிகளின் பழைய மன்னர்கள் புதிய புதிய பாத்திரங்களை தகவமைத்துக் கொண்டு அரசியல் கோமாளிகளாக உருவாகப்படுகின்றார்கள்.

இலங்கைரசு மக்களின் துன்பத்தையும், துயரத்தையும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினையும் கேலிப்பொருளாக்குகின்றது. இதன் தொடர்ச்சியாக அரசிடம் விலைபோனவர்களைப் பயன்படுத்தகின்றது. இதே போல சரணடைந்தவர்களின் அல்லல்பட்ட அவல நிலையையும் (இவர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் தான்) தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது.

முன்னர் கூறியது போல விலைபோன புலிகளின் பழைய பிரமுகர்களை தேர்தல் களத்தில் பயன்படுத்த இலங்கை அரசு வியூகம் அமைத்துள்ளது. இவர்களை அரசியல் கோமாளிகள் என்று தெரிந்தே இலங்கை அரசாங்கம்  பயன்படுத்துகின்றது. இன்றைய அரசியல் இயங்கு தளத்தில் யார் பதவிகளை பெறுகின்றார்கள் என்பது முக்கியமானதல்ல. யாரிடம் உண்மையான அதிகாரம் உள்ளது என்பதே, இன்றைய இலங்கை அரசியலின் ஜனநாயக விரோத பாசிசத்தினை அம்பலப்படுத்தி விடுகின்றது.

அரசு என்பது அதிகாரத்தினை வைத்திருந்து மக்களை அடக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் கோமாளிகளையும் உருவாக்கிக் கொள்கின்றது.

இந்த கோமாளிகளை பசில் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்து குரங்காட்டி வித்தையினை காட்டுவார்.

தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கும் தயா மாஸ்ரர் சில பொன்மொழிகளை உதிர்ந்திருக்கின்றார். அதில் ஒன்றுதான் ....

இவர்களின் அரசியல் புராணத்தை நாம் சகிக்க வேண்டும் என்று மீளவும் புதிய முகம் கொண்டு அழைக்கின்றார்கள். கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி பேசுவது இப்போதைக்கு பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே.

இவ்வாறு புலம்பும் அரசியல் கபோதிகளை மக்கள் செருப்பால் அடித்தாலும் தகும். இன்றைய தயா என்ற அரச ஊதுகுழல் அன்று நோயுற்றிருந்த வேளை மக்கள், போராளிகளின் தியாகங்களின் மூலம் புலிகள் பலமாக இருந்த வேளையில் மரியாதையுடன் சிகிச்சை பெற்றதற்கான நன்றியை தமிழ் பேசும் மக்களுக்கு தெரிவிக்காது. இப்போ மக்களை கொலை செய்த பாசீச ஆட்சியாளருக்கு சாமரம் வீசுகின்றார்.

இந்த ஊதுகுழல்கள் அன்று பெற்ற வசதிகளும், சுகபோக வாழ்க்கையும் உயிரிழந்த மக்களின் பெறுமதியற்ற உழைப்பும், உதிரமும் தான். இவர்களை நம்பிய போராளிகள் இன்றில்லை. அவர்களின் தியாகங்களை இவர்களை மாதிரி விலைபோனவர்கள் மதிக்கத் தேவையில்லை. ஆனால் அந்த மக்களை விலைபேசும் கயவர்களின் பிடியில் இருந்து கொண்டு, உரிமையையும், உரிமையையும் மலினப்படுத்தும் வேலையைச் செய்யத் துணிந்த உம்மைப் போன்ற மானிடரை என்னவென்பது.

முன்னர் புலிகளில் வேலை செய்த போது அன்றாடம் உளவியல் யுத்தம் தொடுத்தவர்கள். புலிகளின் தலைவனை சூரிய தீபன் என்று சொன்னவர்களும் இவர்கள் தான். இப்போ துரோகி என்று சொல்பவர்களும் இவர்கள் தான். பிரபாகரனை துரோகி என்று சொல்லுவதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இதே போல காணாமலாக்கப்பட்டவர்களை பற்றி பேசுவது இப்போதைக்கு பிரயோசனமற்றது என்று கூற இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை.

ஒரு பாசீச அரச கட்டமைப்பை தொடர்ந்தும் தகவமைத்துக் கொள்ளவும், பாசீசம் போடும் எலும்புத் துண்டுக்காக நாக்கை தொங்க விட்டுக் கொண்டிருக்கும் நவீன ஓடுகாலிகள் தமிழ் மக்கள் பற்றி பேச எவ்வித அருகதையும் அற்றவர்கள். இவர்களை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்குவதே மக்களுடைய இன்றைய தலையான கடமையில் ஒன்றாகும்.