Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தற்கொலை செய்த பிரிட்டிஷ் படையினர் ஆப்கனில் பலியானவர்களை விட அதிகம்

பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்துகொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது.

2012-ம் ஆண்டில் பணியிலிருந்த பிரிட்டிஷ் படைவீரர்களும் முன்னாள் வீரர்களும் அடங்கலாக 50 பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

 பிபிசியின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சியில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

இதே ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுடனான மோதல்களின்போது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையிலேயே, படைவீரர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒவ்வொரு தற்கொலையும் ஒரு பெருந்துயரம் என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை இப்போதும் பிரி்ட்டிஷ் படையில் உள்ள, முன்னர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிவிட்டு வந்துள்ள படைவீரர்களில் பலர் மன அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமையையும் பனோரமா நிகழ்ச்சி கண்டறிந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டை மடங்கைவிட அதிகரித்துள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது.

தகவல்பெறும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த வேண்டுகோளின்படியும் பனோரமா நிகழ்ச்சிக்கு இது பற்றிய புள்ளிவிபரங்கள் கிடைத்துள்ளன.