Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கோமாளி அரசியல்வாதிகளின் அண்மைக்கால அறிக்கைகளின் கண்ணோட்டம்

நாடகத்தில், கூத்தில் கோமாளிகள் என்று ஒரு வேடத்தினை கொண்டிருக்கும். சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் என்று ஒரு முக்கிய பாத்திரமும் நகைச்சுவை நடிகரை சுற்றி ஒரு கூட்டமும் இருக்கும். இவ்வாறே அரசியல் அரங்கிலும் அரசியல் கோமாளிகள் இருக்கின்றார்கள். இந்தக் கோமாளிகள் மக்களை திசை திருப்புவதற்கு என்றே உருவாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறான கோமாளிகளின் அறிக்கையைப் பார்ப்போம்...!!

‘‘வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அங்கு தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ அச்சம் வெளியிட்டுள்ளார்.‘‘

‘‘30 வருட கால யுத்தத்தில் வடக்கு மாகாணம் மட்டும் பாதிக்கப்படவில்லை இலங்கையின் அனைத்து மாகாணங்களுமே பாதிக்கப்படுள்ளது. எனவே கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காது எதிர்காலத்தை நோக்கிச் செல்வோம் என சுற்றாடல்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாணத்திற்கான வேட்புமனு குழுவின் தலைவருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்‘‘.

இவ்வாறு முரண்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டு ஆளும் அமைச்சர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள். இவ்வாறு முரண்பட்ட அறிக்கைகளை விடும் போது ஒது அமைச்சர் இன்னொரு அமைச்சரின் அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படை மரபை அவதானிக்காது முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். சரி நாம் இந்த மரபைப் பற்றிப் பேசுவதால் சமூகத்திற்கு ஒன்றும் வரப்போவதில்லை.

இன்னுமோர் முக்கிய மந்திரி..

‘‘எந்தவொரு அதிகாரத்தையும் மாகாண சபைகளுக்கு வழங்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் "ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். மாகாணப் பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது. இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை.

ஆனால் இந்த மந்திரி என்னவிடயத்தைப் பேசுகின்றார்?? இவரும் கடந்த கால வரலாற்றைத் தான் கதைக்கின்றார். தமிழ் மக்கள் இலங்கை அரசு மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதல், யுத்தம் என்பது ஆறாத வடுவைத் தான் ஏற்படுத்தியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடந்த கால துன்பத்தை அடக்குமுறையை பேசுகின்ற போது மட்டும் அதிகார மமதை கொள்ளும் அறிக்கையை விடுகின்றனர்.

இனவாத அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்படுகின்றது அனைத்து இனமக்களுமே. பாதிக்கப்பட்டவன் தன்துயரத்தை பேசுகின்ற போது கடந்த காலத்தைப் பற்றி பேசாதே என்று அறிவுறுத்தல் கொடுகின்றார்கள்.

அபிவிருத்தி செய்யப்போகின்றார்களாம் கடந்த காலத்தை மறந்து:

மாகாண சபை அதிகாரங்கள் வடக்கிற்கு இல்லாது விட்டாலும் ஏனைய மாகாணங்களை விட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு அதிக முக்கியம் கொடுத்து ஜனாதிபதி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பார்.

மேலும் ஜனாதிபதி இன மத பேதம் இன்றி செயற்பட்டுக் கொண்டு வருகின்றார். எனவே அவருக்கு ஆதரவளித்து தேர்தல்களில் வெற்றி கொள்ளச் செய்ய வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்கள் இவ்வாறான தேர்தலை நடாத்த முன்வரவில்லை ஆனால் மகிந்த ராஜபக்ச அவர்கள் முன்வந்துள்ளார்.‘‘

இதற்கிடையே தேசிய இனங்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் திரு. விக்னேஸ்வரன் தனது பேட்டியில் தெரிவிக்கின்றார். ஆனால் பசில் அதிகாரம் கொடுக்கவும், மற்றைய இனத்தவர் மீது நம்பிக்கை வைக்கவும் தயாராக இல்லாத நிலையில் இருக்கின்றார்கள்.

வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்': டக்ளஸ்

வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தனது நீண்டகால கனவு என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.

ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பாத படியாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மகிந்தாவின் காலடியில் வீழ்ந்து கிடந்து கொண்டு மீசையில் மண்படவில்லை என ஒரு அறிக்கை. இவர்களிடையே மக்கள் அல்லாடித் தவிக்கின்றார்கள்.

திரு விக்கினேஸ்வரனை ஆபர்த்தவார்ந்தவராக சம்பந்தன் முன்னிலைப்படுத்த இனவாத அரசியல் பழைய படியே இனவாத சகதியிலும், பதவியைப் பெறுவதிலும் கவனம் செலுத்துகின்றார்கள்.

தீர்வுகள் திட்டங்களை முன்வையுங்கள்

திரு. விக்னேஸ்வரனே நீங்கள் எண்ணிக் கொள்ளும் புதிய திட்டத்தினை அனைத்து மக்கள் முன்வைத்து தீர்விற்கான கருத்தியலை உருவாக்குங்கள். தேர்தலில் வடக்கில் நீங்கள் பிரச்சாரம் செய்வதால் சிங்கள மக்களுக்கு தெரியப் போவதில்லை. உங்கள் திட்டத்தினை அனைத்து மக்கள் முன்வைத்து இனமுரண்பாட்டினை அகற்ற முயற்சியுங்கள்.