Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கபட நாடகம் ஆடுகின்றார்கள்!

தலைமை அரசுத் தலைவர் ராஜபக்சவின் பேச்சியை தாராக மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருக்கும் அரச தொங்கு தசைகள் தமது பதவி ஆதாரயத்திற்காக மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அரச தொங்கு சதைகள் மக்களை பொருளாதார ரீதியாக அன்னிய சக்திகளிடமும், அரசியல் ரீதியாக இலங்கை பாசீச அரசிற்கும் அடிமையாக இரு என்று போதிக்கின்றார்கள். அரச தொங்குசதைகள் மக்களை அரசியல் உரிமைக்காக போராடக் கூடாது என்று போதனை செய்கின்றார்கள்.

தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல் காய்நகர்த்தல்களை ஒவ்வொரு அமைப்பும் அரசியல் நகர்வுகளை நகர்த்துகின்றார்கள். ஜேவிபியினர் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைத்துள்ளார்கள். வடக்கில் அரசு தொழிற்சாலை திறக்கின்றது இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன, மத, குல பேதங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றதுடன், பிரிவினை வாதத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றார்..

அன்னிய முதலீடு

வவுனியாவில் 150 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. முதற்கட்டமாக நிறுவப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் 250 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கின்றது என்றும், நாளடைவில் இங்கு மூவாயிரம் பேர் வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்படுக்கின்றது.

அன்னிய முதலீடுகளின் ஊடாகவும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐநா உதவி நிறுவனங்கள் ஊடாகப் பெறப்படும் கடன் மற்றும் உதவிகளைக் கொண்டே வடக்கு - கிழக்கில் புதிய புதிய பெயர்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை அன்னிய நிதிநிறுவனங்களின் நிதியைக் கொண்டே மேற்கொள்கின்றார்கள்.

அபிவிருத்தியையும், திட்டங்களையும் நிறைவேற்றி தமது பெயர்களை நிலை நிறுத்துகின்றனர். ஆனால் இந்த அபிவிருத்தி, அதன் நிதிக் கொள்கைக்குப் பின்னாலும் ஒரு அரசியல் ஒன்று இருக்கின்றது. எந்த நாடாக இருந்தால் என்ன எந்த நிறுவனங்கள் என்றால் என்ன அது கொடுக்கும் உதவிக்குப் பின்னால் ஒரு ஆதிக்க அரசியல் இருக்கின்றது. கடன்களைப் பெற்றுக் கொள்கின்ற போது அந்த கடனுக்கு வட்டி கொடுக்க வேண்டும். உதவியினைப் பெறுகின்ற போது உதவி கொடுப்பவர்களுக்கு இசைவாக நடந்து கொள்ள வேண்டும்.

தன்னார்வ நிறுவனங்கள் அன்னிய நிறுவனங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்கின்றது என்பதற்கு அப்பால் இந்த சமூக அமைப்பினை குலைவதில் இருந்து தடுக்கும் காரியமாற்றுகின்றது.

சொந்த மக்களின் உழைப்பிலும், சொந்த மூலனத்தை திரட்டி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டமில்லாது. இரவல் புடைவையில் கொய்யகம் கட்டுவது போலவே அன்னிய நிதிஉதவியையும், அன்னிய மூலதனத்தையும் பெற்று தமது பெயரை காப்பாற்றுகின்றது. ஏதோ நாட்டின் வளர்ச்சி ஏற்படுகின்றதாக பிம்பத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் பெற்றுக் கொள்ளும் கடன்கள் முழு நாட்டிற்கும் கடன் சுமைதான்.

அன்னிய மூலதனத்தை தங்குதடையின்றி திறந்து விடுவதன் ஊடாக தொழிலாளர்களின் உரிமையை, தொழிற்சங்க உரிமையற்றும் குறைந்த கூலியில் உழைப்பை வழங்கும் கட்டாய நிலைக்குத் தான் தமிழ் பிரதேச தொழிலாள வர்க்கமும் உள்ளாக்கப்படுகின்றது.

அபிவிருத்தியின் பின்னால் உள்ள அரசியலை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் ஆட்சியாளர்களும், அதன் தொங்கு சதைகளும் திட்டமிட்டு செயற்படுகி்றனர்.

இனவொடுக்கல் இருக்கின்ற வேளையில் அன்னிய மூலதனம் சார்ந்த பொருளாதாரம் என்பது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வது ஒரு மாயையே. நாடு முழுவதும் கடனாளியாகின்றது என்பதை மக்கள் புரியக் கூடாது என்பதற்காக கவர்ச்சி அரசியலை மேற்கொள்கின்றார்கள். அதனையே அரசின் பாதங்தாங்கிகள் சிரமேற்கொண்டு பணி செய்கின்றனர்.

உரிமையா சோறா?

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதில்லை. மக்களின் துயரங்களை இட்டு அக்கறை கொள்வதில்லை இலங்கை ஆட்சியாளர்கள். ஆனால் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுகின்றவர்களை பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகின்றது.

இலங்கை ஆட்சியாளர்களின் அடிவருடிகள் ஏதோ மக்களுக்கான உரிமைகளை சோற்றுக்கு ஒப்ப நிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றார்கள். மக்களின் வாழ்வாதாரம் என்பது வாழ்வதற்கான அடிப்படை உற்பத்திகளை அந்த மக்கள் மேற்கொண்டு தான் தமது அன்றாட வாழ்வை போக்குகின்றார்கள். மனித வாழ்விற்கும் அதன் அடிப்படை என்பது ஒரு சமூக ஒட்டத்தில் தன்னை மென்மேலும் பொருளாதாரஇ அரசியல்இ கலாச்சார, பண்பாட்டு தளத்தில் தன்மை வளர்த்துக் கொள்வதற்கான உரிமை என்பது இல்லை.

ஆட்சியாளர்கள் தான் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க அவர்களின் அடிவருடிகள் முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதத்தை ஏந்தினார்களோ. என்ன காரணத்திற்காக சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகினார்களோ. அவற்றை எல்லாம் மறந்து அரசின் பிரச்சாரத்தை சிரமமேற்கொண்டு செயற்படுகின்றார்கள்.

அரசு அன்னிய உதவியுடன் உட்கட்டுமானங்களையும், தொழிற்துறையையும் மேற்கொள்வதையே அபிவிருத்தி என்று போதனை செய்கின்றனர். ஒரு மனித கூட்டத்தின் ஒரு பகுதியை இனரீதியாக பிரிந்து வைத்துக் கொண்டும். தன்னினத்துக்கு உயர்வர்க்கத்தவர்களுக்கு உரிமையும், சலுகையையும் வழங்குகின்றது. இந்த உயர்வர்க்கம் சந்தையை மன்றைய இனப் பிரதேசத்தில் விஸ்திரப்படுத்தி வளங்களைச் சுரண்டுகின்றது. இதனை நீயாயப்படுத்த ஜீவகாருண்ய சிந்தனையை போதிக்கின்றது. இன, மத, சாதி, பிரதேச வேறுபாடுகளை கூர்மைப்படுத்திக் கொள்கின்றது.

இன்று தேர்தல் திருவிழாவில் பங்கெடுக்கும் அரச தொங்குசதைகள் ஜனநாயக உயர்பண்புகளை பெற்றுக் கொள்ளும் ஒரு சமூக அமைப்பை உருவாக்கிக் கொள்ளவிடாது. சமூக மாற்றத்தின் எதிரிகளாக உள்ளார்கள். அரசியல், பொருளாதார உரிமைகளை அனைத்து மக்கள் பிரிவும் அனுபவித்துக் கொள்ளவதை மறுதலிக்கின்றார்கள். இதற்கு அபிவிருத்தி, தேசவொற்றுமை, பிரிவினைவாத எதிர்ப்பு பூச்சாண்டி காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி பதவியை பெற்றுக் கொள்ள கபடநாடகம் ஆடுகின்றார்கள்.