Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ரகசிய முகாம்கள் பற்றி முறையிடுவோம் - காணாமல்போனோரின் உறவினர்கள்

ஒருவார கால விஜயமாக இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை, காணாமல்போனவர்களின் உறவினர்களை எதிர்வரும் 29ம் திகதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை 30ம் திகதியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இறுதிப் போரின்போது காணாமல் போனவர்களும் சரணடைந்தவர்களில் பலரும் ரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் தமக்கு முறையிட்டிருப்பதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவினர் சுட்டிக்காட்டினர்.

பல ஆண்டுகளாக காணாமல்போயிருந்த பலர் முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்துள்ளதாகவும் காணாமல்போன பலர் இவ்வாறு ரகசிய முகாம்களில் இருப்பதாக உறவினர்கள் முன்வைக்கும் முறைப்பாட்டை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரிடம் சுட்டிக்காட்ட இருப்பதாகவும் காணாமல்போனவர்களை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறினார்.

அரசாங்கத்திடம் அனுமதி பெற்று முகாம்களுக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நவி பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நவி பிள்ளையுடனான சந்திப்பு பற்றி பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹநாம ஹேவா, தாம் ஏற்கனவே நவி பிள்ளையின் பிரதிநிதிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறினார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து ஆட்கடத்தல்கள், காணாமல்போதல்கள் தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாடுகள் பற்றி 6 மாதங்களுக்கு முன்னரே தமது விசாரணைக் குழு விசாரணைகளை நடத்திவிட்டதாகவும் அதன் முன்னேற்றம் குறித்து நவிபிள்ளையிடம் எடுத்துக்கூறவுள்ளதாகவும் பிரதிபா மஹநாம கூறினார்.