Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சத்தியப்பிரமாணத்திற்கு வந்துள்ள சத்திய சோதனை!

கூட்டமைப்பு அப்புக்காத்து, நீதவான் பிரக்கிராசிமார்களைத் தலைமையாகக் கொண்டது. இவர்களெல்லாம் சிவில்-கிறிமினல் சட்ட-திட்டங்களை கரைத்துக் குடித்தவர்கள். இப்பேர்ப்பட்டவர்களுக்கு இலங்கையின் அரசியல் அமைப்புப் பற்றியும் தெரியும்தானே!

தெரிந்துதானே அதன் சட்ட-திட்டங்களுக்கு அமைவான மாகாணசபைத் தேர்தலிலும் பங்கு பற்றினார்கள். வெற்றி பெற்றால் சத்தியப்பிரமாணம் என்ற ஒன்றும் வருமென்பது உந்த சட்ட-வல்லுனக்-குழாமிற்கு தெரியாதோ?

இப்போ ஏதோ சத்தியப் பிரமாணத்திற்கும் சத்தியசோதனை வந்துவிட்டதென அரிச்சந்திர-வேடம் போடுகின்றார்கள். மகிந்தாவிற்கு முன்னால் சத்தியப் பிரமாணம் செய்தால் ஏதோ தமிழின-பிரதோச-பாபம் வந்து விடுமாம். இதற்கு சண்டாளப் பிரார்த்தனை செய்தாலும் பாப-தோசம் நீங்காதாம் எனும் ஐதீகச் சண்டை குடுமிப் பிடியாக நடைபெறுகின்றது.

இவர்களின் ஐதீக சித்தாந்தத்தின்படி மகிந்தாவை விட தமிழின படுகொலைப் பாவத்தின் கறைபடிந்த பாப-தோச-சண்டாளர் சரத் பொன்சேக தான். ஜனாதிபதித் தேர்தலில் இவரை முன்நிறுத்தியபோது, ஏதாவது அஸ்வமேத யாகத்துடன் கூடிய வேள்விகள் செய்து, பாப-தோசங்களை நீக்கித்தான் தமிழ்மக்கள் முன் தேர்தலுக்கு கூட்டிச் சென்றீர்களோ?...

மேலும் இதற்கு வலுச் சோக்கும் வகையில், மகிந்தா முன் சத்தியப் பிரமாணம் எடுக்க முற்பட்டால் "முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைவைக்கப்பட்டுள்ள 500 பேரையாவது ஜனாதிபதி விடுவிக்க வேண்டும்" அப்படி விடுவித்தாலும் பாபதோசம் நீங்குமென கூட்டமைப்பில் போட்டியிட்ட வவுனியா வேட்பாளர் ஒருவர் இதற்கு பிராயச்சித்தமும் சொல்கின்றார். இதற்காக வவுனியாவில் இருந்து யாழ்-குடாநாடு வரை மாபெரும் மக்கள் படை நடப்பையே முன்னனெடுத்துள்ளார்.

உண்மையில் தமிழ்மக்கள் இப்பேர்ப்பட்ட பாப-தோசம் அற்றதொரு தெய்வீக அரசியல் தலைமையை பெற எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

விநாயகக் கடவுளின் உருவில் வந்துள்ள "விக்கினேஸ்வரன்" அருளால் தமிழ் மக்கள் சகல அரசியல் சௌபாக்கியங்களும் பெறுவார்கள். இவர் மகிந்தா முன் சத்தியப்பிரமாணம் எடுத்தால் தமிழ்மக்களுக்கல்ல, மகிந்தாவின் பாப-தோசங்களும் நீங்கும்.

"ஞானி நிலவைக் காட்ட மூடன் விரலைப் பார்த்தனாம்" இந்நிலைபோல்தான் சத்தியப்பிரமாணத்திற்கும் வந்துள்ள சத்திய சோதனை.

-அகிலன்