Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

CHOGM : எதிர்க்காமல் இருந்தால் மக்கள் மீது இதுபோன்ற சுமைகள் தொடர்ந்தும் ஏற்றப்படும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களது ஆட்சியும் எதிர்வரும் 15ம் 16ம் 17ம் திகதிகளில் கொழும்பில் நடாத்தும் பொதுநலவாய நாடுகளது அமைப்பின் மாநாட்டின் மூலம் நாட்டு மக்கள் எவருக்கும் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.

குறிப்பாக வாழ்க்கைச் செலவின் உயர்வால் வாட்டி வதைக்கப்பட்டு வரும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதுவித பயன்களும் கிடைக்கப் போவதில்லை. அதே போன்று பேரினவாத ராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களுக்கோ ஏனைய தேசிய இனங்களுக்கோ இது எவ்வித நன்மைகளையும் கொண்டு வந்து விடமாட்டாது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பலநூறு கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டு ஆடம்பரமாக நடத்தப்படும் இம் மாநாடு மகிந்த சகோதரர்களது ஆட்சி அதிகார நிலைப்பிற்கும் நீடிப்புக்கும் மட்டுமே பயன் தர உள்ளதாக இருக்குமே தவிர நாட்டு மக்களுக்கானதாக அமைய மாட்டாது. எனவே அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் இம்மாநாடு பற்றி அக்கறைப்படுவதோ ஆதரவு தெரிவிப்பதோ அர்த்தமற்ற ஒன்றாகும்.

 அன்றைய பிரித்தானிய கொலனித்துவ எசமானர்களாக இருந்து வந்தவர்களின் வாரிசுகளும் அவர்களின் கொலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளின் மேட்டுக் குடி வழிவந்த ஆளும் வர்க்க அடிமை விசுவாசிகளும் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தி வருவதே இப் பொதுநலவாய நாடுகளது மாநாடாகும். பிரித்தானியாவின் முடிக்கும் மகாராணி எனப்படுபவருக்கும் அடிமைத்தன விசுவாசம் தெரிவித்து நிற்கும் ஐம்பதற்கும் மேற்பட்ட முன்னாள் கொலனிய நாடுகளின் ஆட்சி அதிகாரத் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்து வரும் தீர்மானங்களால் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும் மக்களுக்கும் எவ்வித விமோசனமும் விடுதலையும் கிடைக்கப் போவதில்லை. இதனையே கடந்த அறுபது வருடகால பொதுநலவாய நாடுகளின் அமைப்பு நமக்கு எடுத்துக் காட்டிவந்துள்ளன.

அதேவேளை இன்றைய ஏகாதிபத்திய உலக மயமாதலின் நிகழ்ச்சிநிரலான நவ தாராள அரசியல் பொருளாதார கொள்கைகளை நவ கொலனித்துவத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். இத்தகைய அமைப்பின் இருபத்தி மூன்றாவது மாநாட்டை இலங்கையில் நடாத்தி அதன் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமக்கு எதிராக சர்வதேச அரங்கில் நீட்டப்பட்டு வரும் குற்றச்சாட்டு விரல்களின் வேகத்தை குறைக்கலாம் அல்லது திசை திருப்பலாம் என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இருந்து வருகின்றது.

யுத்தம் முடிவடைந்து நாலரை வருடங்கள் கடந்த நிலையிலும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி உரிய விசாரனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது சர்வதேச உரிமை அமைப்புகளின் குற்றச்சாட்டுகளாகும். அக்குற்றச்சாட்டுக்களில் மேற்குலக நாடுகளது உள் நோக்கங்கள் மறைந்திருப்பினும் அவற்றிற்கு உரிய பதிலை வழங்கவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாத பேரினவாத அகங்கார நிலையிலேயே ஆட்சியாளர்கள் இருந்து வருகின்றார்கள். இம் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்படி குற்றச் சாட்டுகளுக்கு எத்தகைய பதிலை மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கு வழங்கப் போகின்றார் என்பது எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த சந்தர்ப்பங்கள் போன்று மழுப்பல் நியாயங்களும் திசை திருப்பும் பேச்சுக்களும் இடம்பெறவே செய்யும் என்றே நாம் எதிர்ப்பார்க்கலாம்.

எனவே பல நூறு கோடி ரூபாய்கள் செலவு செய்து அர்த்தம் எதுவுமற்று நடாத்தப்படும் இம்மாநாட்டின் சுமைகள் மக்கள் தலைகள் மீதே சுமத்தப்படும். இவை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மக்கள் மீது சுமத்தப்படும் பாரிய சுமைகளுடன் சேர்ந்து இரட்டைச் சுமையாகவே இருக்கப் போகின்றன. இதுபற்றி ராஜபக்ஷ சகோதரர்கள் ஆட்சிக்கு எவ்வித கவலையும் இருக்கப் போவதில்லை. இதனை நாட்டு மக்கள் எதிர்த்து நிற்க முன்வராத வரை மேலும் பல சுமைகள் மக்கள் மீது ஏற்றப்படுவதற்கான அபாயச் சூழலே நீடிக்கும். எனவே அவற்றுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராட முன்வர வேண்டும்.

12.11.2013

சி.கா. செந்திவேல்

பொதுச் செயலாளர்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி