Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

விவசாயிகளை ஒட்டாண்டிகளாக்கும் வங்கிகள்!

விவசாயிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி வட்டிக்கு விவசாயக் கடன் வழங்கிய வங்கிகள், இப்போது வட்டியையும் முதலையும் வழங்குமாறு விவசாயிகளின் கழுத்துக்களைப் பிடித்து நெருக்கி வருகின்றன. ஏற்கனவே பெருமழை காரணமாக வெங்காயம், கிழங்கு மற்றும் உபஉணவு உற்பத்தியில் அழிவுகள் ஏற்பட்டதனால் விவசாயிகள் பெருநட்டமடைந்தனர். பின்பு வறட்சி காரணமாகப் பெரும்போக நெற்செய்கையிலும் அழிவு ஏற்பட்டது இவ்வாறு நட்டத்தின் மேல் நட்டம் ஏற்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து தடுமாறி நிற்கும் விவசாயிகளை கடன் கொடுத்த வங்கிகள் மிரட்டியும் விரட்டியும் வருவது கண்டனத்துக்கும் விசனத்திற்கும் உரியதாகும். இதனால் சில விவசாயிகள் தற்கொலைக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர் எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு விவசாயக்கடன் தள்ளுபடியை செய்து ஏனைய நிவாரணங்களை வழங்கவேண்டுமென விவசாயிகள் சார்பாக எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.

இலங்கை ஒருவிவசாய நாடு எனப் பெருமை பேசி வரும் மகிந்த சிந்தனை அரசாங்கம் அனைத்து விவசாயிகளையும் புறக்கணித்த நிலையிலேயே இருந்து வருகிறது. அதற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கவே அண்மையில் தென்னிலங்கை விவசாயிகள் கோவணங்களுடன் கொழும்பு மாநகரில் தமது பிரச்சனைகளை எடுத்து கூறி துண்டுப்பிரசுர நிநியோகத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு விவசாயிகள் எவ்வகையிலும் மீட்சி பெறமுடியாத நிலையிலேயே இருந்து வருகிறார்கள். இராணுவ நிலைகொள்ளல் நிலப்பறிப்பு, மீள்குடியேற்ற மறுப்பு, நிலஆக்கிரமிப்பு திட்டமிட்ட குடியேற்ற முயற்சிகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காலநிலை மாற்றத்தினாலான பெருமழை, கடும்வறட்சி, பனிமூட்டம் போன்றவற்றால் பயிரளிவுகளை எதிர்நோக்கியுள்ளனர். இவற்றுடன் மல்லாடியபடி சில பயிர்களைச் செய்தாலும் அவ் உற்பத்திகளுக்கு நியாயமான சந்தை விலை கிடைப்பதில்லை பலவழிகளில் விலைவீழ்ச்சி ஏற்படுத்தப்படுவதுடன் இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகள் தமது உற்பத்தி செலவுகளை கூடப் பெற முடியாத அவலநிலையிலேயே இருந்து வருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் தாராள இறக்குமதிகள் மூலம் வெங்காயம், மிளகாய், கிழங்கு, மற்றும் உபஉணவு உற்பத்திகள் கொண்டுவரப்படுவதால் விலைவீழ்ச்சிகள் ஏற்படுகின்றன. இவ்வாறு பலபக்க அடிகளை வாங்கி நிற்கும் விவசாயிகள் எவ்வாறு தமது விவசாயக் கடன்களை செலுத்த முடியும். குறிப்பாக வடக்கின் ஜந்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயக்கடன் பெற்ற பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் திக்கற்றவர்களாககி உள்ளனர். வங்கிக்கடன் ஒருபுறமாகவும் அத்தியவசியப் பொருட்களின் விலையுயர்வு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மறுபுறமாகவும் விவசாயிகளை வாட்டி வதைத்து வருகின்றன. எனவே அரசாங்கம் அவர்களின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும் ஏனைய நிவாரணங்களை வழங்கவும் முன்வரவேண்டும். விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள இப்பாரிய பிரச்சனையில் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றினைந்து விவசாயிகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க முன்வரவேண்டும்.

சி.கா.செந்திவேல்

பொதுச்செயலாளர்