Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

சுவடுகள்........... (சிறுகதை)

வேலை முடிஞ்சு வெளியால வந்து ரெலிபோனைத் தூக்கினா, தாமுவின் மெசேச் வந்திருந்தது, நான் பல முறை எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை... எப்படியும் இரவு ஏழு மணிபோல் கட்டாயமாக என் கொட்டலுக்கு வா என்று இருந்தது.

இண்டைக்கு வெள்ளி, அது தான் வரச் சொல்லியிருக்கிறான் என்ற நினைப்புடன் வீடு வந்து, இது அது என்று செய்ய வேண்டிய கடன்களை முடித்து விட்டு ஒரு சின்ன குட்டி நித்திரையும் போட்டு விட்டு, ஓர் இரவு நேரம் கொட்டலில் போய் இறங்கினேன்.

பார்ரில் தான் அவனின் வேலை அதிகம். அவனிடம் எப்போதாவது போய்வர எனக்கு அனுமதியுண்டு. சனம் பெரிதாக இல்லை. என்னைக் கண்டு கொண்டவன் ஒரு பெரிய கிளாசிலே பியரை நுரைக்க நுரைக்க விட்ட படி, அதிலே போயிரு... கொஞ்ச நேரத்திலே வந்து விடுகிறேன் என்று கையைக் காட்டினான்.

ஒரு மூலையின் ஓரத்தின் மெல்லிய வெளிச்சத்தின் கீழிருந்த ஒரு வட்ட மேசையில் போய் அமர்ந்தேன். சின்னச் சின்ன மெழுகுதிரிகளின் வெளிச்சங்களும் அழகாகச் செய்யப்பட்டிருந்த பூக்கொத்துக்களும் மண்டபத்தை அழகுபடுத்தியிருந்தன. இதுவெல்லாம் இவனின் கைவண்ணம் தான்.

திடீரென கிளாசுடன் வந்திருந்தவன், "மகனே நீ இண்டைக்குச் செத்தாய்"... என்றபடி விழித்துக் கொண்டான். என்னடா....? என்று நான் மிகச் சாதாரணமாக வினவ....

இண்டைக்கு உன்னுடைய மலீனா..... அவள் தான், உன்ரை பழைய காதலி....? இங்கே வந்திருந்தாள். எங்கேயெல்லாம் விசாரித்து யாரோ ஒருவர் கொடுத்த தகவல்களின் படி அவள் இங்கே வந்து என்னைக் கண்டு கொண்டாள்.

அவள் உன்னை எப்படியும் பார்க்க வேண்டுமாம். கதைக்க வேண்டுமாம், என்று அடம்பிடித்துக் கொண்டு நின்றாள். அவளாக உன்ரை வீடு தேடி வந்தால் குழப்பங்கள் ஏற்படும் என்றும், இண்டைக்கு நீ இரண்டு பிள்ளைக்கு தகப்பனாய் இருக்கிறாய் என்றும், கூறியும் அவள் கேட்கவேயில்லை. அது தான் உன்ரை நன்மை கருதி அவளை இங்கே வரச் சொல்லியிருக்கிறேன்.

பியர் முன்னால் இருந்து நுரைத்துக் கொண்டிருந்தது. தாமோ மடக் மடக்கென்று இழுத்து உறிஞ்சினான். என்னால் முடியாமல் இருந்தது..

மலீனா ..... மலீனா.... மனம் எங்கேயெல்லாம் பின் நோக்கிப் போய் வந்தது. கிட்டத்தட்ட ஒரு ஒன்பது வருடம். மனைவியாய் குடும்பமாய் அவளுடன் வாழந்த காலங்கள்.... பிறகு எல்லாரைப் போலவும் அம்மாவின் விருப்பத்தின் பேரில் ஊரில் போய் சுகந்தியை முடிச்சு வந்து இப்ப பதினைஞ்சு வருடத்துக்கு மேலே.... இப்ப இவள் ஏன் வந்து நிற்கிறாள்.... மனம் எங்கேயெல்லாம் ஓடி ஓடி... சொல்ல முடியாத வான் வெளியெங்கும் அலைந்து போய் வந்தது.

காய்... நினைவலைகளிலிருந்து மீண்டெழுந்து நிமிர்ந்து பார்த்தேன். மலீனாவே தான். நம்ப முடியாமல் இருந்தது. அவள் அப்படியே மாறாமல் அழகாய் இருந்தாள். எனக்குக் கை தந்து, அல்லது கட்டிப்பிடித்து அரவணைத்துத் தான் வந்து அமர்ந்து கொள்வாள், என நினைக்க முன்னரே முன்னிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.

என்ன....? என்னைச் சந்திக்க வேண்டும் என்றாயாம்....? அப்படி என்ன விசையம், அது தானே அன்று சொல்லியிருந்தேன், இனிமேல் எங்களுக்குள் ஒன்றுமில்லை, இனிமேல் நாங்கள் ஒருபோதும் சந்திக்கவும் கூடாது என்றும். அப்போது சொல்லியிருந்தேனே.....?

நான் இப்போது கலியாணம் முடிச்சு குடும்பமாய் இருக்கிறேன், என் வாழ்க்கையை குழப்பிப் போடாதே என்று ஒரு வகைக் கோபத்துடனும் பதட்டத்துடனும், என்னுடைய குற்றவுணர்வும் கோளைத்தனமும் என்னை அப்படிக் கதைக்கப் பண்ணியது.

மிகவும் நிதானமானவும் எந்த வித பதட்டமும் இல்லாமல் மெல்லிதாய்ச் சிரிச்சபடியே இல்லை.... 'ஒரு ஆறு மாதத்துக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்திருந்தனான். அடுத்த கிழமை பழையபடி நான் வசிக்கும் நாட்டுக்குப் போகப் போகிறேன், அது தான் உன்னை ஒருதரம் பார்க்க வேண்டும் போல் இருந்தது, அது தான் என்ற போது அவளுடைய முகத்திலும் குரலிலும் மாற்றங்கள் தெரிந்தது.

எனக்கும் ஒரு மாதிரியாகவே இருந்தது. என்னைத் தேடி வந்தவளை எப்படியிருக்கின்றாய்.... என்ன செய்கிறாய் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல், இப்படி எரிந்து விழுந்து விட்டேனே என்று நினைத்த போது என்னையே நான் நொந்து கொண்டேன்.

எங்கேயோ நின்ற தாமோ ஒரு கோப்பியை கொண்டு வந்து அவள் பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்று விட்டான்.

என்ன...? உனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றதாம், இப்பொழுது நல்ல சந்தோசமாய் வாழுகின்றாய் என்றும் உன்னைப் பற்றி தாமோ மூலம் நிறையவே அறிந்து கொண்டேன். நல்லது, சந்தோசம் என்றாள்.

அப்ப நீ என்ன செய்கிறாய்.... மலீனா? திருமணம்.....? குழந்தை குட்டிகள்.........?

ஒன்றுமே பேசாது மௌமாய் இருந்தாள். எங்கேயோ ஒலித்துக் கொண்டிருந்த பியானோவின் இசை காதில் வந்து வீழ்ந்தாலும் அவளின் முகத்தில் தோன்றிய சோக ரேகைகள் என்னை ஒரு கணம் நிலைகுலையச் செய்தது.

மலீனா ....மலீனா.... என்ன? சொல்....

இல்லை.... நான் எதைச் சொல்ல.... எதை மறைக்க.... அது தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.... நீ நம்புகிறாயா... இல்லையா.... ஏற்றுக் கொள்ளுறாயா இல்லையா... தெரியாது, ஆனால்..... நான் இப்பவும் உன்னுடைய நினைவுகளோடும் கனவுகளோடும் தான் வாழ்ந்;து கொண்டிருக்கிறேன். உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மலீனா.....?

இடிவீழ்ந்தது போல் இதயம் ஒரு கணம் இறுகி நின்றது.

நீ அன்று இரவு சொன்னது இப்பவும் காதிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது. மலீனா என்னை மன்னித்துக் கொள். அம்மா அப்பா பார்க்கும் ஒரு பெண்ணைத்தான் தான் முடிக்கப்போறேன் என்றும் அது தான் சரி என்றும், எனது எதிர்காலத்துக்கு அது தான் உகந்தது என்றும் நினைக்கின்றேன் என்றும், நீ கூறிய போது.... என் நிலையைக் கொஞ்சம் கூட நீ யோசித்துப் பார்க்க்கவில்லை.

அந்தச் சொற்ப நேரத்திலேயே உன்னுடைய கோளைத் தனத்தையும் உன்ரை கொடுர குணத்தையும் கண்டு கொண்டேன். நீ பிறகு வேறு என்ன காரணங்கள் தான் சொல்லியிருந்தாலும் உன்னோடு என்னாலே முன்பு போல் அன்பாக சேர்ந்து வாழ்ந்திருக்க முடியாது.

வெறும் உடலியல் தேவைகளுக்காக மட்டுமே நீங்கள் பழகுகின்றீர்கள், ஏதோ வெள்ளைக்காரிகள் என்பதால் நாங்கள் எல்லாம் திறந்து போட்டுத்திரிகிறோம், என்றும், தமிழ்ப்பெண்கள் தான் உலகத்திலே நீங்கள் எதிர்பார்க்கிற கற்பானவர்கள் என்றும் நினைக்கிறையளோ....? அல்லது தமிழ்ப் பெண்களைத் தான் பேக்காட்டி, ஏமாத்தி வாழலாம் என்று நினைக்கிறையளோ தெரியாது.

இதை விட உங்களுக்கொரு கொழுத்த சீதனம், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் என்ற போலிக் கொளரவங்கள் வேண்டிக் கிடக்கு, நீங்கள் பட்ட கடனை அடைப்பதற்கும், இன்னொரு சகோதரிக்கும் நீ சீதனம் கொடுக்க வேண்டும் என்ற சாட்டும் உன்னைப் போன்ற முதுகெலும்பில்லா ஆண்கள் சொல்லுகிற பொய்க்காரணங்களும் புரட்டுக்களும்.

பெண்கள் என்றால் எல்லாம் பெண்கள் தான். உறவுகளும் உணர்வுகளும் அன்பும் பாசமும் காதலும் எல்லோருக்கும் ஒன்று தான். என்ன உங்கடை பெண்கள் அடக்கி அடக்கி வைச்சிருக்கிறார்கள், நாங்கள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கிறோம்.

இல்லை.... தெரியாமத் தான் கேட்கிறன். ஒன்பது வருடமா என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்திப் போட்டு இன்னொரு மனுசியைத் திருமணம் செய்து வந்து குடும்பம் நடத்துகிறாய். முன்பு உன்ரை மனுசியும் யாருடன் பழகிப் போட்டு படுத்திட்டு வந்திருந்தால், தமிழ்ப்பெண் தானே என்று நீ ஏற்றிருப்பாயா.......?

இல்லை உன்ரை அம்மா தான் திருமணம் முடித்து வாழ்வை இழந்த ஒரு பெண்ணையோ அல்லது போரிலே தன்னைப்பறி கொடுத்த ஒரு போராளிப் பெண்ணையோ தனக்கு மருமகளாத் தேடுவாளோ....:? அல்லது உன் மகளுக்குத் தான் உன்னைப் போல் ஒரு மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வைப்பாயா....?

உங்களுக்கொரு நியாயம்.... பெண்களுக்கொரு நியாயமா....?

ஒரு பெரிய சுத்தியலால் தூக்கித் தூக்கி அடித்தது போல் இருந்தது.

ஒன்றுமே பேசாது மௌனமாய் தலையைக் கவிழ்த்துக் கொண்டேன்.

இன்றைக்கும் உங்களுடைய அடுத்த சந்ததியினரும் இதைத் தான் செய்கின்றார்கள். ஒரு வெள்ளைக்காரியோடு இருந்து விட்டு ஒரு தமிழ்பெண்ணை இலகுவாக முடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் வெள்ளையனுடன் இருந்து பழகி வெறுத்து வந்த ஒரு தமிழ்ப் பெண்ணை எத்தனை தமிழ் இளைஞர்கள் ஏற்கத் தாயாராய் இருக்கிறீர்கள்......?

இப்பவும் பல தமிழ் இளைஞர்கள் தாய் தகப்பனின் அனுமதியுடன் இங்கே கூடிச் சேர்ந்து வாழ்ந்து விட்டு பின்னர், பிரச்சினைகள் என்று வந்தவுடன் பிரிந்து ஊர் சென்று தமிழ்ப்பெண்ணை முடித்து விட்டு வருகின்றார்கள். அதுவும் இளமையாய் புதிதாய், கன்னியாய் இருக்க வேண்டுமென்று, சட்டமும் போடுறையளாம். அந்தப் பெண்களிற் பல பேர் வறுமையினாலும், போரின் கொடுமையினாலும், பாதிக்கப்பட்டதால் மற்றவர்களைப் போல் தாங்களும் வாழ வேண்டும் என்பதற்காக உண்மை நிலைறிந்தும் வந்து வாழுகின்றார்கள். தெரியாமல் வந்த சிலர் தங்களுடைய கணவனுக்கு வேறு பிள்ளைகள் இருக்கு என்று அறிந்தும் மௌனிகளாய் இருக்கின்றார்கள்.

ஆனால் சில பேர் தங்கள் உண்மை நிலைகளையும் சொல்லி திருமணம் செய்து கொண்டு வாழும் சில விதிவிலக்கானவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

என்ன...? என்னை, என்ன பொய்யன் ஏமாற்றுக்காரன் எனறு சொல்லுகிறாயா........?

என்ன கோபம் வருகின்றதோ.....? கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையை யோசித்துப் பார்.

உனக்கும் எனக்கும் ஒரு குழந்தையிருந்தால்......?

மெல்லதாய் தலையை நிமிர்த்தி உயர்த்திப் பார்த்தேன்.

மலீனாவின் கண்களிலிருந்து தண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது.

எத்தனை வருடங்கள்... எத்தனை நினைவுகள்....

அன்றொரு நாள் நீயும் நானும் சந்தித்த அந்த தனி இரவு. என்னை தனித்துவிட்டுப் போன பாழாப் போன இருண்ட இரவு. இனிமேல் உனக்கும் எனக்கும் உறவே இல்லை என்று சொல்லிப் போன கடைசி இரவு. இன்றிலிருந்து நீ வேறு நான் வேறு என்ற பிரிந்து போன ஓர் முடிந்த இரவு.

அழுது அழுது அந்த இரவே முடிவெடுத்தேன். இது என் சொந்த நாடாய் இருந்தாலும் இனிமேல் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றும், உன்னை நான் சந்திக்கக் கூடாது என்றும், எனது படிப்புச் சம்பந்தமாய் வெளியில் வெளிக்கிட வேண்டிய தேவையிருந்தாலும், அடுத்த கிழமையே இஸ்ரேல் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

எனது கடந்த காலங்களையும் மறந்து உன் நினைவுகளையெல்லாம் எங்கேயோ தூக்கியெறிந்து விட்டு வாழ வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால் எல்லாமே ஏமாற்றமாய்..... ஏக்கங்களாய்...

முன்னலிருந்த ஒரு சேவியற் ஒன்றினால் தன் கண்களை மாறி மாறி ஒற்றிக் கொண்டாள்.

அதன் பிறகு தான் தெரிந்தது. உன் வாரிசு ஒன்று வயிற்றிலே வளருது என்று. ஒரு புறம் அளவில்லாச் சந்தோசம். சொல்ல முடியா ஆனந்தம். மறுபுறத்தில் நினைத்தே பார்க்க முடியாத போராட்டம். குழம்பினேன் தவித்தேன். யாருமற்ற அனாதையாய் நின்றேன்.

இறைவன் இதை எனக்கு வேண்டுமென்றே தந்திருக்கிறான். என் விலைமதிக்க முடியாத சொத்து. தாயென்று என்னை அறிமுகம் செய்யும் முகவரி. நான் தனித்து விடவில்லை என்பதற்கு கிடைத்த துணை, என் உயிர்.

மலினா என்று அவள் கரங்களைப் பற்றினேன். என் கண்களிலிருந்தும் கண்ணீர் பனித்துக் கொண்டன.

தலையை ஆட்டியபடி..... ஆம் எங்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றாள். அவளுக்கும் தெரியும் தனக்கு இங்கே ஒரு அப்பா இருக்கிறார் என்று.

எனக்காகவே இசைப்பது போல் கிறிஸ்ரீனா லவ்கிராவின் பாடல் ஒன்று அழுகுரலாய் ஒலித்துக் கொண்டிருந்துது.

உன் வாழ்க்கையைக் குழப்ப வேண்டுமென்றோ..... அல்லது உன் குடும்பத்தைப் பிரிக்க வேண்டுமொன்றோ அல்லது யாருக்கும் தீங்கு செய்ய வேண்டுமென்றோ இங்கு வரவில்லை. இங்கே வந்தவுடன் ஏதோ சொல்ல முடியாத விளங்கிக் கொள்ள முடியாத உணர்வொன்று உன்னைச் சந்தி சந்தி என்று எனக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு குற்றவுணர்வும் என்னை வாட்டியதால் தான் இன்று இந்த நிலைக்கு வந்தேன்.

எத்தனை வருடங்கள் தனிமையில் உன் நினைவுகளுடன்... தனியாய் நின்று என் குழந்தையை.... அப்பா என்ற போதெல்லாம்....

உன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று நீ விரும்பினால் உன் மனைவி குழந்தைகளுடன் உன் உண்மை நிலையைத் தெரியப்படுத்தி விட்டு வா. வந்து பார் என்றபடியே எழுந்து மெல்ல போய்க் கொண்டிருந்தாள்.

மனம் மேலும் கீழுமாய் புரண்டு புரண்டு எழுந்தது. அழுதது.

எனக்கு இன்னொரு குழந்தையா.... இதை என் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்களா.....? இந்த தமிழ் சமூகம் தான் இதை ஏற்குமா.... எனது மானம் மரியாதை....கௌரவம்... என்னுடைய கோளைத்தனமும், வரட்டுக் கௌரவமும், என்னுடைய கலாச்சாரமும் என்னைத் தடுத்தாண்டது.

என்னைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இரகசியமாய் அப்பாக்களாய்....

தாமோ வாடிக்கையாளர்களுக்காக... கொக்ரெயில் செய்யும் போத்தல்களை எறிந்து எறிந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான்.

முற்றும்.