Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென "மகிந்தப்" பள்ளுப் பாடுவோமே!

எம் நாட்டடின் 66-வது சுதந்திர தினத்தில் எம் நாட்டு மக்கள் சகல "சௌபாக்கியங்களுடனும் வாழ்கின்றார்கள்" என சுதந்திரப் பள்ளு பாடலாம்.

சுதந்திரத்தின் பின்னான காலனியம்-நவகாலனியம் போன்றவற்றின் தொடரான நவதாராளமய பொருளியல் மகிநத குடும்பத்திற்கும் அதன் சொந்த பந்த உறவுகளுக்குமான மயமாகியுள்ளது. நாட்டின் அதியுயர் பெருவளங்களையும்-பெருவருமானங்களையும் ஈட்டக்கூடிய அத்தனை துறைகளும் இக்குடும்ப மந்திரிகளின் மயமாகவே உள்ளது. இது 300-ற்கு மேற்பட்ட குடும்ப உறவுகளின் கூடாரமாகியுள்ளது.

இதனால் தான் நாட்டின் சகல நிறைவேற்று அதிகார மையங்களில் பீடாதிபதியாக இருந்து கொண்டு சுகம் அனுபவிக்கும் மகிந்த ராஜபக்ச "நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை" என்கின்றார்

இன்று எம் நாடு மகிந்த அரசின் உள்நாட்டு-வெளிநாட்டு கூட்டாளிகளின் சுதந்திர நாடேயன்றி, மக்களின் அபிலாசைகள், சுதந்திரம்-சுயநிர்ணயம்-சுயாதிபத்தியங்களை கொண்ட நாடல்ல. வெளிநாட்டுக் கடனாளிகளுக்கு வட்டி கட்ட எம் நாட்டு மக்கள் இன்னும் பல்லாண்டு காலம் உழைக்க வேண்டியுள்து. வெளிநாட்டு நிறுவனங்கள், கம்பனிகளின் நிகழ்ச்சி நிரலே எம்நாட்டு மக்களின் வாழ்வாகியுள்ளது. இந்நிரலின் தொழிற்பாடே, பொருட்களின் விலையேற்றமாக, வேலையில்லா திண்டாட்டமாக, ஏன் நாட்டு மக்களின் சகல அவலங்களின் மையமாகவும் மாறியுள்ளது

பேச்சு-எழுத்து-பத்திரிகை கருத்துச் சுதந்திரம், மக்களுக்கானதா? மகிந்த குடும்பத்திற்கானதா? எனும் கேள்வியைக் கேட்டால், நாட்டு நடப்பை நன்றாக கவனிக்கும் சாதாரண மக்களின் பதில் எப்படியிருக்கும்? இவ்வாட்சியில் கொல்லப்பட்ட பட்ட சுதந்திர ஊடகவியலாளர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்கள் எங்களுக்காகவே சாகடிக்கபட்டார்கள் எனப் பதிலளிப்பார்கள்.

தவிரவும் இன்றைய சுதந்திரதின விழாவில் தமிழ்மக்கள் பிரச்சினையில் "வடக்கு மக்கள் சுதந்திரத்தைத் தேடி தெற்கிற்கு வந்தார்கள். கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, மோதரை, மட்டக்குளிய பகுதிகளுக்கு வந்தார்கள். அப்போது பயங்கரவாதத்தை தோற்கடித்து வடக்கு மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம்". இப்போ இச்சுதந்திர நாட்டில் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை என்கின்றார்.

பிரச்சினை இல்லையென்றால் இவரின் "சுதந்திர நாட்டில்" எப்படி அமெரிக்க உதவிச் செயலாளர் தன்னிச்சையாக வந்து தமிழ் மக்களுக்க பிரச்சினைகள் தாராளமாக இருக்கின்றதென வலு சுதந்திரமாக சொல்லிச் சென்றுள்ளார்?.

"இலங்கையில் நீதி மீள் நல்லிணக்கம் போர்க்காலச் சம்பவங்களுக்கான பொறுப்புக் கூறல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலர் ஊடகவியலாளர்களிடம் கூறினார். இலங்கையில் மனித உரிமைகளுக்கான மரியாதை மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு, ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காத தன்மையும் இலங்கையின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிப்பதாகவும் செயலர் நிஷா பிஸ்வால் கூறியுள்ளார்.

புலிப் பயங்கரவாதத்தை ஒழித்ததில் தானும் இன்னொரு பேரினவாதப் புலிப் பயங்கரவாதிதானென சுதந்திரதின நிகழ்வில் நடவடிக்கைகளுக்கு ஊடாக நிரூபித்துள்ளார். இந்நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்றொன்று இல்லை. எல்லாம் பெரும்பாண்மையே எனும் மகிந்த சிந்தனையையிலேயே ஊன்றிநின்று தன் பேரிவாத உரையை நிகழ்த்தியுள்ளார்.

ஆகையால் மகிந்த சிந்தனையில் நாம் எல்லோரும் "சகல சௌபாக்கியங்களுடனும் சௌபாக்கிய வாழ்வு வாழ்கின்றோம்" என "மகிந்தப் பள்ளுப் பாடுவோம்!