Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சீன மீனவர்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கிறது: வட இலங்கை மீனவர்கள்

அண்மையில் சீன மீனவர்களுடன் மீன் பிடிப் படகொன்றை இலங்கை கடற்படையினர் பிடித்திருந்தனர்.இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன தேசத்து மீனவர்களும் தமது கடற் பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை கூறுகின்றார்.

"முப்பது வருட கால யுத்தத்தின் முடிவில் கடற்பரப்பில் தொழில் செய்ய செல்லும் எமது மீனவர்கள் இந்திய மீனவர்கள் மற்றும் சீன மீனவர்களின் அத்துமீறல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வடமராட்சி கடற்பரப்பின் ஆழ் கடற் பிரதேசத்திலேயே சீன மீனவர்களின் பெரிய கப்பல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றது. இதனால் கடற்கரையை அண்டிய பகுதிக்குள் மீன்கள் வருவதில்லை. எமது மீனவர்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்படுகின்றது."

சீனதேசத்து மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து தொழில் செய்வது குறித்து நீர்கொழும்பில் இருந்து செயற்படுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் கூட முறையிட்டிருக்கின்றது.

சீன தேசத்து மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கக் கூடாது என்று தாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருப்பதாக அந்த அமைப்பின் தேசிய இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கூறுகிறார்.

இது குறித்து, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமால் ஹெட்டியாரச்சி அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறு சீன தேசத்து மீனவர்கள் இங்கு வந்து தொழில் புரியவில்லை என்று மறுத்துரைத்தார்.

"இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கென, எமது கடற்தொழில் திணைக்களத்தில் எந்தவொரு சீன கம்பனியும் பதிவு செய்யப்பட்டிருக்;கவில்லை. அவ்வாறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவுமில்லை. ஆனால், கடலுணவு பதனிடுகின்ற சீன கம்பனி ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தொழில் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எமது தேசிய கடற்பரப்பில் இந்தக் கம்பனிக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. சர்வதேச கடற்பரப்பிலேயே தொழில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெளிவாகக் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது"