Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

காமன்வெல்த்துக்கு நிதியளிப்பதை இடை நிறுத்தியது கனடா

காமன்வெல்த் அமைப்புக்கு இலங்கை தலைமை வகிக்கும் காலகட்டத்தில் இந்த அமைப்பின் செயலகத்துக்கு வழங்கிவரும் தன் பங்கு நிதியை இடை நிறுத்தி வைக்கப்போவதாக கனடா அறிவித்திருக்கிறது.

இலங்கையின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கவலைகள் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கனடியச் செய்தியாளர்களிடையே பேசுகையில் கூறினார்.

காமன்வெல்த் அமைப்புக்கு கனடா தற்போது சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் ( 20 மிலியன் டாலர்கள்) வரை நிதி வழங்கிவருகிறது.

இந்த நிதியை காமன்வெல்த்தின் பிற திட்டங்களான, சிறார் திருமணங்களைத் தடுப்பது, கட்டாயத் திருமணங்களைத் தடுப்பது, மனித உரிமை மேம்பாடு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்போவதாக அமைச்சர் ஜான் பேர்ட் கூறினார்.

கனடா இலங்கையில் நடந்த காமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டையும் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.