Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

எவன்டா சொன்னான் என்னாட்சியில் இன-மதவாதம் இருக்கென்று?...

றோட்டால் போகும் வெறிகாரனைப் பார்த்து சனங்கள் சிரித்தால்..., பார் எனக்கு வெறியாமென இதுகளும் சிரிக்குதுகள் என சனத்தைப் பார்த்து கோபப்படும் சண்டித்தனப் போதையர்களும் உண்டு. இதுபோல் நாடே கை கொட்டிச் சிரிக்கும் அளவிற்கு, நாட்டில் பொதுபல சேனாவின் இன-மத-வெறியுடன் கூடியதும், சாராய-மதுபோதையுடன் கூடியதுமான காடைத்தன கானமழை பொழிந்து கொண்டிருக்கையில், எவன்டா சொன்னான் என்னாட்சியில் இன-மத-வெறி இருக்கின்றதென மகிந்த ராஜபக்சரும் கோபப்படுகின்றார். உண்மையில் இவ்வெறியர்களில் முதலாமவர், மதுவெறியிலும், நம்ம ஜனாதிபதி சுத்த-இன-மத வெறியிலும் உளறுகின்றார்கள்…

"நாம் நினைத்தால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியு"மென ஞான சார தேரர் சொல்ல, சட்டப்படி கைது செய்யப்பட வேண்டிய சமூக விரோதியை, புத்தமதம் அரசாங்க மதம், ஆகவே அரச மதத்தைச் சார்ந்த துறவிகளும் காடையர்கள் ஆகலாமென புதிய மகிந்த மகாவம்சம் எழுதுகின்றது அரசு. இதன்பாற்பட்டு எச்சமூக விரோதத்தையும் செய்யலாமெனும் துணிவில் புத்த துறவிகள் ஜல்லிக்கட்டின் காளை மாடுகள்போல் ஓடித்திரியுதுகள். இம்மாடுகளை கட்டுப்படுத்த அரச-ஆயுதப் படைகளினாலும் முடியவில்லை.

நேற்றைய முன்தினம் பிரதேசசபை அமர்வில் கலந்து கொள்ளச் சென்ற வட்டரகேத விஜித தேரரை பிரதேச சபைக்குள் நுழைய முடியாதபடி பொதுபலசேனக் காளைகளால் முற்றுகையிட்டிருந்தது. பொலிஸாரின் துணை கொண்டே வட்டரகேத விஜித தேரர் உள் நுழைந்தார்

தவிரவும் வட்டரகேத விஜித தேரர் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் அலுவலகத்தில் ஒழிந்திருந்திருப்பதாக கூறி பொதுபலசேனா கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது. வட்டரகேத விஜித தேரர் அண்மையில் ஜாதிக பொதுபலசேனா என்ற கட்சியை பொதுபலசேனாவுக்கு எதிராக உருவாக்கினார். குறித்த கட்சியை கலைக்க வேண்டுமென பொதுபலசேனா அச்சுறுத்தி வருகின்றது.

வட்டரகேத விஜித தேரர் பொதுபல சேனவால் ஆபத்து உள்ளதெனவும், தனக்கு பாதுகாப்பு தேவையெனவும் ஜனதிபதியிடம் கேட்டபொழுது, உங்களை ஏன் பொதுபலசேன விரட்டுகின்றது எனத் திருப்பிக் கேட்டாராம்?…. நீங்கள் இன ஐக்கியத்தையும் மத-நல்லிணகத்தையும் பற்றி பேசாது விட்டால், பொதுபல சேனா விரட்டாது என தன் கேள்விக்கூடான பதிலையும் சொல்லியுள்ளார். அரச அதிகார வர்க்கங்கள் தன்நலன் பாற்பட்டு துணைபோகும் கசாப்புக் கடைக்காரனையும் ஜீவகாருண்ணியவாதி எனத்தான் சொல்லும்.

"தம் தேவைக்கேற்ப நாட்டின் தேசிய சிறப்பியல்புகளுக்குத் தக்கபடியும் இன்னும் ஒரே நாட்டில் பல்வேறு சமூகப் பிரிவுகளின் தனித் தனமைகளுக்குத் தக்கபடியும் தன் வாய்ச் சவடால்களையும் அமைத்துக் கொள்கின்றது!…………. மக்களுடைய உள்ளங்களிலேயே ஊறிப்போயிருக்கின்ற வெறுப்புக்களையும், தப்பெண்ணங்களையும் கிளறித் தூண்டிக் கிளப்பி விடுவது மட்டுமல்ல மக்களுடைய நல்லுணர்வுகளையும் நியாய உணர்வுகளையும் சில சமயங்களில் புரட்சிகரமான பாரம்பரியங்களைக் கூட பயன்படுத்திக் கொள்கிறது.! இதனாலேயே பாஸிசவாதிகளால் மக்களை கவர முடிகின்றதென்ற" டிமிற்றோ அவர்களின் அன்றைய கூற்று இன்றைய மகிநதாவிற்கும் பொருந்துகின்றது. இச்சமூக விஞ்ஞான பொருள்முதல்வாத நோக்கு சமகாலத்திலும் யதார்த்தச் சிறப்பாகுகின்றது.