Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசு அனுசாரணையில் தொடங்கியுள்ள தென் ஆபிரிக்க மத்தியஸ்த்தம்!

தென்னாபிரிக்க அனுபவம் மற்றும் தீர்வின் அடிப்படையில், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது மக்களுக்கானதல்ல. தென்னாபிரிக்க தீர்வு என்பது மக்களுக்கு கறுப்பரின் ஆட்சியைத் தவிர, வேறு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை. "தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டும்" என்ற அடிமுட்டாள்தனமான அறியாமையை முன்னிறுத்தியே, மக்களுக்கு எதிராக இந்தப் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே தென்னாபிரிக்கவின் மதிஸ்யத்தை அரசு நாடுகின்றது. கூட்டமைப்பு அதற்கு இணங்கிப் போகின்றது.

மேற்கு ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு மேலான போர்குற்றம் இன்று முதன்மை பெற்றுள்ளது. இலங்கை விவகாரத்தில் உலகின் முதன்மையான முரண்பாடாக இதுவேயுள்ளது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து விடுபட விரும்பும் அரசுக்கு உதவுதன் மூலம், இயல்பாக மேற்கு சார்பான நிலைக்குச் செல்லவே இந்த மத்தியஸ்தமாகும். மேற்கல்லாத ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து நிற்கும் இன்றைய அரசின் நிலையை இலகுவாக கடக்க, தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களே இந்த பேச்சு வார்த்தையை முன்னெடுக்கின்றன. மத்தியஸ்தம் ஏகாதிபத்திய நலன் சார்ந்து முன்னெடுக்கப்படுகின்றதே ஒழிய, "தமிழ் மக்களுக்கு தீர்வை" பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல.

தென்னாபிரிக்காவில் நடந்தது என்ன? வெள்ளையின அதிகாரத்தை கறுப்பரிடம் வழங்கியதன் மூலம், இன ரீதியான வெள்ளையின ஆட்சியாளர்களின் குற்றங்களுக்கு மன்னிப்பையும், இனரீதியாக குவித்த சொத்துரிமையை பாதுகாக்கும் பொறுப்பையுமே தீர்வாக்கியது.

இலங்கையில் தென்னாபிரிக்கா செய்ய முனைவது "தமிழ் மக்களுக்கு தீர்வாக" கூட்டமைப்புக்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம், இனரீதியான குற்றங்களில் இருந்து குற்றவாளிகளுக்கு விடுதலையை பெற்றுக் கொடுப்பதையே தீர்வுவாக முன்வைத்து பேசப்படுகின்றது. இதைத்தான் தென்னாபிரிக்கா, தனது சொந்த அனுபவம் சார்ந்த மத்தியஸ்த்தம் மூலம் இன்று முன்னெடுக்கின்றது.

தென்னாபிரிக்காவின் கறுப்பின ஆளும்வர்க்கம் வெள்ளையின ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்தே ஆட்சியை கையில் எடுத்தது. கறுப்பின ஆளும் வர்க்கம் உரிமைகளுக்காக  போராடிய சுரங்கத் தொழிவாளர்களை சுட்டுக் கொன்று போராட்டத்தை அடக்கியது. தென்னாபிரிக்க சுதந்திரத்தினாலோ அன்றி உண்மையை கண்டறியும் குழுவினராலோ சாதாரண அடிமட்ட மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்ப்படுத்த முடியவில்லை.