Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் போராட்டங்களை இருட்டடிப்பு செய்து அரசுக்கு உதவுகின்ற "தமிழ்" இனவாதம்!

புலிகளை வெற்றி கொண்ட இறுமாப்பில் நாட்டை இராணுவமயமாக்கி, நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் அரசுக்கு எதிராக இடியாக இறங்கியது மாணவர்களின் நவதாராளவாத கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள். தொடரான தடைகளையும், அடக்குமுறைகளையும் மீறி, அலை அலையாக மாணவர்களின் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. நீதிமன்ற தடையையும், அதியுர் பாதுகாப்பு அரணையும் தாண்டி, ஜனாதிபதி வாசஸத்;தலமான அலரி மாளிகை வாசலிலேயே மாணவர்கள் போராடியதைக் கண்டு அரசும், ஆளும் வர்க்கமும் அதிர்ந்து போய் உள்ளன. பழிவாங்கும் உணர்வுடன், பாசிச வழியிலான அனைத்து ஒடுக்குமுறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. கைதுகள், தேடுதல்கள், தாக்குதல்கள்... வரைமுறையின்றி தொடருகின்றன.

இந்த மாணவர் போராட்டத்தைக் கண்டு, அரசு மட்டும் அதிரவில்லை. மாணவர்களையும், மக்களையும் இன-மத ரீதியாக பிரித்துவிட முனையும் இனவாதிகள் கூட அதிர்ந்து போய் நிற்கின்றனர். தமிழ், சிங்கள இனவாதிகளுக்கு இனம் கடந்து, தங்கள் "தேசிய" இன எல்லையைக் கடந்து மாணவர்கள் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இந்தப் போராட்டங்களையும், இதன் மீதான அடக்குமுறைகளையும் கண்டும் காணாதவாறு, தமது கண்களை தமிழ், சிங்கள இனவாதம் இறுக்க மூடிக்கொணடிருக்கின்றது. தமிழ் ஊடகங்களோ, அரசுக்கு ஆதாரவாக மாணவர்களின் போராட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றது. அன்று தமிழ் தேசியம் பேசியவர்கள் எப்படி புலிகளின் குற்றங்களை மூடிமறைத்தனரோ, அதே போன்று அவர்கள் இன்று அரசக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்கின்றனர்.

அரசுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுடன் தமிழ் மாணவர்களும், மக்களும் இணைந்து விடுவர்களோ என்ற "இனவாதம்" சார்ந்த அச்சம், நடந்து கொண்டிருககும் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றது. மாணவர்களின் போராட்டம் தோற்றுப்போகும் வண்ணம், அரசுக்கு ஆதாரவாக இயங்குகின்றது. அமெரிக்காவுடனும், இந்தியாவுடனும் சேருவோமே ஓழிய, அரசுக்கு எதிராக போராடும் சிங்கள மக்களுடன் இணைய மாட்டோம் என்பதே இன்று தமிழ் தேசியமாக இருக்கின்றது. தம் இனத்தை, சொந்தங்களை, உறவுகளை கொன்று குவித்த அரசை பழிவாங்கும் உணர்வுடன் உள்ள தமிழ் மக்களுக்கு, சிங்கள மாணவர்களின் போராட்டம் மற்றும் தென்னிலங்கையில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கான அரசியல் உந்து விசையாக இருக்கின்றது.

தமிழ்த்தேசியம் பேசும் தமிழினவாதிகள் தமிழ் மாணவர்களும், மக்களும் நடைபெற்றுக் கொணடிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக போராடுபவர்களை "சிங்களவன்" என்று சிறுமைப்படுத்துகின்றனர். இதன் மூலம் தமிழ் இனவாதிகள் அரசுக்கு உதவுகின்றனர். இடதுசாரியம் பேசுகின்ற தமிழ் தேசியமோ இதை மூடிமறைத்து அரசுக்கு உதவும் வண்ணம், பிரிவினையை "சுயநிர்ணயமாக" முன்வைக்கின்றது. தமிழ் இனவாதம் முன்னிறுத்தும் பிரிவினை அரசியல் உள்ளடகத்தில், தமிழ் இடதுசாரியம் "சுயநிர்ணயம்" மூலம் பிரிவினையை கோருகின்றது. இந்த அடிப்படையில் இருந்து மாணவர் போராட்டங்கள் இருட்டடிப்பு உள்ளாக்கப்படுகின்றது. இடதுசாரிய முகமுடிகள் மூலம் அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை இனவாதத்தை முன்னிறுத்தி தெரிவு செய்யக் கோருகின்றது.

அன்று புலிகளின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்திய வரலாற்றின் தொடர்ச்சியில், நாங்கள் மாணவர் போராட்டத்தை ஆதாரித்து முன்னெடுப்பது தற்செயலானதல்ல. போலி (தமிழ்) இடதுசாரியம் நடைபெறுகின்ற மாணவர்களின் போராட்டங்களை அணுகிக் கொள்ளும் விதமானது இவர்களது இனவாத பித்தலாட்டத்தை அம்பலமாகியிருகின்றது.

இலங்கையில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதை மறுக்கின்றவர்கள் அனைவரும் அடிப்படையில் இனவாதிகளாகவே காணப்படுகின்றனர். அனைத்து இன ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து ஓரு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே தேசிய இனப்பிரச்சினை முதல் பொருளாதார பிரச்சினை வரை தீர்வினை பெற்றக்கொள்ள முடியும், இன்று ஆரம்பித்துள்ள மாணவர்கள் போராட்டங்கள் இனம்வாதம் கடந்து, மக்கள் போராட்டமாக மாற்றி அமைக்க ஒன்றிணைந்து போராடுவோம்!