Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நடைமுறையற்ற "சுயநிர்ணய" கோசத்தை முன்னிறுத்திய இனவாதம்!

இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தே இன முரண்பாடுகளை கழைய முடியும் என்ற அரசியல் உண்மை இன்று அரசியல் ரீதியாக முன்னுக்கு வருகின்றது. அதேநேரம் எல்லாவிதமான இனவாத குறுந்தேசியவாத அரசியல் போக்குகளும் அம்பலமாகி முட்டுச்சந்திக்கு வருகின்றது.

இனவாதமும் குறுந்தேசியவாதமும் முந்தைய வியாபாரிகளினதும் பிழைப்புவாதிகளினதும் தொங்கு சதையாக எஞ்சிக் கிடக்கின்றது. இப்படி வலதுசாரியக் கூறுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு விட இடதுசாரிய வேடம் போட்டோர், சீரழிந்த தேசியவாதத்தை நடைமுறையற்ற "சுயநிர்ணயம்" என்ற வெற்றுக் கோசம் மூலம் மூடிமறைத்து மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர். இந்த வகையில் இன்று தனிநபர்கள் தொடக்கம் குறுங்குழுக்கள் வரை "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்திக் கொண்டு இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தங்களைப் போன்றோரை அணிதிரட்ட முற்படுகின்றனர்.

காலம் கடந்ததும் புளுத்துப் போனதுமானதே இந்த அரசியல். 1980 களில் முன்வைக்கப்பட்டதில் இருந்து பொறுக்கி எடுத்த பழைய குப்பைகளே. 1980 களில் தன் இனம் சார்ந்த வர்க்கப் போராட்டத்தை முன்வைத்த இடதுசாரியம் (தேசிய விடுதலையீனூடாக, தமிழ் ஈழத்தில் வர்க்க விடுதலை போராட்டத்தை நடத்துதல்) மிகக் குறுகிய காலத்தில் இடதும், வலதுமாக பிரிந்தது. இடது பிரிவு தமிழ் தேசிய விடுதலையை ஒரு இலங்கை தளுவிய வர்க்கப் போராட்ட அடிப்படையில் புரிந்துகொள்ள, வலது பிரிவு தேசியவாதத்தை முன்னிறுத்தி இனவாதத்தை முன்தள்ளியது. முற்போக்குத் தேசியவாதத் தன்மையிலிருந்து விலகி அல்லது சிதைவடைந்து இனவாதத்தை தேசியத்தின் பெயரால் அரசியலாக்கினர். இந்த வலது பிரிவின் சிதைவடைந்த தேசியவாதத்தையே 2009 பின் "சுயநிர்ணயம்" (கோசம் ) மூலம் காவி வருகின்றனர்.

இனம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும், இவர்கள் இப்போதும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகக் கூறுகின்றனர். இந்த வலது பிரிவின் சொந்த இனம் சார்ந்த "வர்க்கப் போராட்டம்" என்பது படுபிற்போக்கான இனவாதக்கூறை உள்ளடக்கியுள்ளதுடன், "சுயநிர்ணயத்தை" கோசமாக முரண் நிலையில் முன்வைக்கின்றனர். இப்படி இவர்கள் "சுயநிர்ணயத்தை" இலங்கைப் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக முன்வைக்கும் போது, அது இன்றைய எதார்த்தமான- பிற்போக்கான எந்த சமூகக் கண்ணோட்டத்தில் எப்படி புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றதோ, அதே கண்ணோட்டத்திலேயே அதை மீளத்தூக்கி நிறுத்துகின்றனர்.

உண்மையில் இடதுசாரிய மூகமுடியை போட்டுக் கொண்டு, தன் இனம் சார்ந்து குறுந்தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட இனவாதத்தைக் மறைக்க முடியாது திணறுகின்றதன் அரசியல் விளைவு தான் இது. தம் சிதைவடைந்த தேசியவாதத்தை - இனவாத அரசியலை மூடிமறைத்துக் கொள்ளவே "சுயநிர்ணயம்" என்ற கோசம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.

1980 களில் அனைத்து இனவாத இயக்கங்களும் மக்களை ஏமாற்ற ஒடுக்கப்பட்ட வர்க்க அரசியலை தங்கள் அமைப்புகள் கொண்டு இருப்பதாக காட்டிக்கொள்ள இடதுசாரியத்தை தங்கள் அமைப்பின் கோசமாக்கின. இதேபோல் தான் 2009 பின் "சுயநிர்ணயத்தை" கோசமாக்கி தங்கள் குறுகிய இனவாத அரசியலை மூடிமறைக்கின்றனர். இந்த வகையில் "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்திய சிதைவடைந்த தேசியவாதம் சார்ந்த பிற்போக்கான அரசியல் போக்குகளை குறிப்பாக இன்று இணங்காண முடிகின்றது.

1. தங்கள் இனவாத மற்றும் குறுந்தேசியவாதங்களைக் மூடிமறைக்கும் இடதுசாரிய வேடமிட்ட வலதுசாரியப் பிரிவுகள் தன் இனத்துக்கான "சுயநிர்ணயத்தை" மட்டும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் அனைத்து இனங்களுக்குமான சுயநிர்ணய அடிப்படையிலான ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒன்றிணைந்து போராடும் சர்வதேசியத்தை மறுக்கின்றனர்.

2. இனவாதம் மற்றும் குறுந்தேசியவாதம் சார்ந்த குறுகிய "சுயநிர்ணய" கோசங்கள் குறித்த பிரதேசம் கடந்து சிதறிவாழும் குறித்த இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராகவே முன் வைக்கப்படுகிறது. அதாவது சர்வதேசியத்துக்கு எதிரானதே இவர்களின் "சுயநிர்ணயம்".

3. இலங்கை நவகாலனிய நாடாக இருப்பதால், முழு இலங்கைக்கும் சுயநிர்ணயம் அவசியமாக இருக்கின்றது. அதை முன் வைக்காத- கணக்கிலெடுக்காத குறுகிய "சுயநிர்ணயம்" என்பது படுபிற்போக்கானதும் சர்வதேசியத்துக்கும் எதிரானதுமாகும்.

4. இலங்கையில் பல தேசிய இனங்கள் வாழுகின்ற நிலையில், அவர்கள் அனைவரையும் உள்ளடக்காத தீர்வு மற்றும் "சுயநிர்ணயம்" என்பது குறுகியதும் படுபிற்போக்கான இனவாதமுமாகும்.

5. மக்களை அணிதிரட்ட முன்வராது, தமது பிரமுகர் தனங்களுக்கும் தங்கள் தனிநபர் செயற்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கவும், அதேநேரம் தங்கள் தனித்த சுயஇருப்பை நியாயப்படுத்தவும் முன்வைக்கும் "சுயநிர்ணயம்" என்பது கேடுகெட்ட பொறுக்கித்தனமான பிழைப்புவாத "சுயநிர்ணய" கோசமாகும். இதன் மூலம் வர்க்க ரீதியான நடைமுறைக்கான சர்வதேசிய அமைப்பாக்கலையும் அதன் வர்க்க சாரத்தையும் மறுத்து இயங்குகின்றனர்.

இடதுசாரிய பின்னணியில் வர்க்க அரசியலையும் அதன் நடைமுறையையும் மறுக்கும் இப்போக்குகள், தங்கள் நலனுக்கு ஏற்ப "சுயநிர்ணயத்தை" திரித்து, அதன் மூலம் தமது உண்மையான அரசியல் முகத்தை மூடி மறைகின்றனர். உண்மையில் சுயநிர்ணயத்தை முன்வைக்காத அரசியல் சூழலை பயன்படுத்திக் கொண்டு, இந்த வர்க்க விரோத அரசியல் போக்கு இயங்குகின்றது. சுயநிர்ணயத்தை வைக்காத விசேட அரசியல் சூழலைக் கொண்டு, பிரமுகர்தனம் தொடக்கம் இனவாதம் வரை "சுயநிர்ணய" கோசத்தின் பின் ஒழித்து விளையாடுகின்றது.

சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கம் முன்வைப்பதன் அரசியல் அடிப்படை என்பது, அனைத்து இன ஓடுக்கப்பட்ட மக்கள் தளுவிய ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்காகத் தான். இதற்கு வெளியில் அல்ல. மாறாக இனவாதமும், சிதைவடைந்த குறுந்தேசியவாதமும் முன்வைக்கின்ற பிரிவினைவாதத்தையோ, ஐக்கியத்தையோ ஆதரிப்பதற்காக அல்ல. மறுதளத்தில் சுயநிர்ணயத்தைக் கோருகின்ற அல்லது வைக்கின்றவர்கள், வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சி நடைமுறை அரசியலில் இருந்துதான் கோரவும், முன்வைக்கவும் முடியும். இந்த அரசியல் உண்மையை மறுத்தே எந்தவித நடைமுறையுமற்ற வெற்றுக் கோசமாகவே "சுயநிர்ணயத்தை " முன்தள்ளுகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் "சுயநிர்ணயம்" வர்க்க நடைமுறைக் கோட்பாடு என்ற அரசியல் அடிப்படையில் இருந்து விலகி, அது வெற்றுக் கோசமாகி இருக்கின்றது. அதேநேரம் அது பிரிவினையாக மட்டும் புரிந்து கொள்ளப்பட்டும் இருக்கின்றது. இந்த அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட்ட "சுயநிர்ணயம்" வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு தடையாக இருக்கின்றது. அதாவது "சுயநிர்ணயம்" திரிக்கப்பட்டு உள்ளது. பிரிவினையாக மட்டும் புரிந்து கொள்ளப்பட்ட "சுயநிர்ணய" அடிப்படையை மறுக்காது, அதை கோருகின்றவர்கள், முன்வைப்பவர்கள் அனைவரும் இனவாதிகளே.

முதலாளித்துவ தேசியவாதிகள் கோரும் தீர்வை, பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயம் மூலம் முன் வைப்பதில்லை. மாறாக சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்கம் முன்வைப்பது தேசியப் பிரச்சனையைத் தீர்க்கவல்ல, தேசிய முரண்பாட்டைக் கடந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்காகவே. இங்கு பாட்டாளி வர்க்கத்திடம் தீர்வைக் கோருவது, முதலாளித்துவக் கோரிக்கையையே. இந்த இனவாத போக்குகளுடன் கூடிய "சுயநிர்ணயம்" அடிப்படையில் சர்வதேசிய வர்க்கப் போராட்டத்துக்கும், அதன் நடைமுறைக்கும் எதிரானது. இந்த வகையில் சுயநிர்ணயத்தின் திரிந்த அடிப்படையில், அதன் தப்பெண்ணங்களுடன் பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை முன்வைக்க முடியாதுள்ளது.

பாட்டாளி வர்க்கம்:

1. சுயநிர்ணயத்தின் அனைத்து திரிந்து போன உள்ளடக்கங்களுக்கு எதிரான தத்துவார்த்த போராட்டத்தை நடத்துவதன் ஊடாகவும்,

2. சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாகப் புரிந்து கொண்ட மக்களின் பொது அரசியல் அடிப்படைக்கு எதிரான, வர்க்க நடைமுறை மூலமும்,

3. சுயநிர்ணயத்தின் நடைமுறை வடிவங்களை முன்னெடுப்பதன் மூலமும், சுயநிர்ணயத்தின் உள்ளடக்கத்தை சமூக உள்ளடக்கமாக்குவதன் மூலமும்,

4. இலங்கைக்கும், தேசங்களாகக் கூடிய தேசிய இனங்களுக்குமான ஒன்றாக; சுயநிர்ணயத்தை சரியாக முன்னிறுத்தி முன்னெடுக்க முடியும்.

இந்தவகையில் தேசிய இன முரண்பாடுகளுக்கான சுயநிர்ணயக் கோட்பாட்டை செயலற்ற கோசமாக அல்ல, சுயநிர்ணயக் கோட்பாட்டின் உள்ளடகத்தை அரசியல் நடைமுறையில் கொண்டு வருவதன் மூலமே, சுயநிர்ணயத்தின் திரிபுகளை களைய முடியும். நடைமுறை மூலம் தானே ஒழிய, தத்துவ விவாதங்கள் மூலம் அல்லது வெற்றுக் கோசங்கள் மூலம் இந்த திரிப்பை ஒரு நாளும் களைய முடியாது. சுயநிர்ணயம் என்பது, அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்த வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான அரசியல் கோட்பாடு. அத்துடன் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வருவதன் மூலம், தேசிய இன முரண்பாட்டுக்கு தன்னாட்சி (Autonomy) அடிபடையிலான தீர்வை நடைமுறையில் முன்னெடுக்கும். பாட்டாளி வர்க்க அதிகாரத்தில் தான், தன்னாட்சியை பாட்டாளி வர்க்கக் கட்சி நடைமுறைக்கு கொண்டு வர முடியும். அதிகாரத்துக்கு வரும் வரையான அதன் போராட்டம் என்பது, "ஒடுக்கப்படும் இனங்களுக்கான சமவுரிமைக்கான" போராட்டங்கள் தான்.

"புரட்சி வந்த பின் சுயநிர்ணய அடிபடையிலான தன்னாட்சி அடிபடையிலான தீர்வு வழங்கப்படும்" என்ற வெற்றுத் திட்ட அறிவிப்பை, நடைமுறையின்றி முன்வைத்து விட்டு ஒரு பாட்டாளி வர்க்க கட்சி புரட்சிக்கான வேலையைச் செய்து விட முடியாது. ஒடுக்கப்படும் இனங்களில் உடனடியான பிரச்சனைகளுக்கு "புரட்சிக்குப் பின் பார்ப்போம்" எனப் பதில் கூறிவிட்டு போய்விட விட முடியாது. புரட்சிக்கு முன் இருக்கும் சமூகக் கட்டமைப்புக்குள் கூடுமான அளவுக்கு- ஒடுக்கப்படும் இன மக்களின் உரிமைக்காக- ஜனநாயக உரிமைக்காக, அது நடைமுறையில் போராடியே தீர வேண்டும்.

அவ்வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தான் ஒடுக்கப்படும் இனங்களுக்கான சமவுரிமைகான போராட்டம். சமவுரிமைகான நடைமுறைப் போராட்டங்களின் ஊடாகத்தான், சுயநிர்ணயக் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை நிறைவேற்ற முடியும். இனப் பிளவுள்ள சமூதாயத்தில், சமவுரிமைகான போராட்டம் தான் இனங்களுக்கிடயிலான முரண்பாடுகளை நடைமுறையில் கழையும். அதன் மூலம் வென்றெடுக்கப்படும் இனங்களுக்கு இடையிலான இணக்கமென்பது சுயநிர்ணய அடிபடையிலான தன்னாட்சி அதிகாரம் மட்டுமல்ல- தேவையானால் அதற்கும் மேலான தீர்வுகளையும் நடைமுறைப்படுத்தும் சூழல், பாட்டாளி வர்க்கம் தனது ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போது இயல்பாகவே உருவாகும். புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாங்கள், சுயநிர்ணய உள்ளடக்கத்தை நிறைவேற்றும் நோக்கில், சமவுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் அதே நேரம், பாட்டாளி வர்க்க ஆட்சியில் தன்னாட்சி உரிமையை நடைமுறைப்படுத்துவோம். இதைத்தான் முன்னிலை சோசலிசக் கட்சி தனது கொள்கையாகவும், நடைமுறையாகவும் கொண்டு செயற்படுகின்றது. இது தான் எமது இரு அமைப்புகளில் இணைந்த அரசியல் - நடைமுறையின் அடித்தளமாகும்.

சுயநிர்ணயத்தின் வர்க்க நடைமுறையை "சுயநிர்ணயத்தைக்" கோசமாகக் கொள்ளாமல் அரசியல் நடைமுறையாக எடுக்க முடியும் என்றால், அது சமவுரிமைக்கான போராட்டம் தான். சுயநிர்ணயத்திற்கான நடைமுறை என்பது சமவுரிமைக்கான போராட்டத்துக்கு வெளியில் கிடையாது என்பதும்- நடைமுறையை நீக்கி விட்டால் "சுயநிர்ணயம்" என்பது வெற்றுக் கோசமாகவே இருக்கும். இந்த வகையில் எந்தவித நடைமுறையும் இல்லாமல் "சுயநிர்ணயம்" என்ற வெற்றுக்கோசத்தை கோருகின்றவர்கள் மூடிமறைத்த இனவாதிகளாகவும் குறுந்தேசியவாதிகளாகவும் இருக்கின்றனர். இதுவே இன்றைய நடைமுறை சார்ந்த உண்மையுடன் கூடிய எதார்த்தமுமாகும். சுயநிர்ணயத்தின் நடைமுறையான சமவுரிமையை உயர்த்தி இனவாத மற்றும் குறுந்தேசியவாதம் சார்ந்த பிரிவினைவாததை முறியடிப்போம்.{jcomments on}