Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுக்கும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கும் துக்கம் தரும் இழப்பு!

இலங்கையின் அரசியல் களத்தில் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் குரலாயும், இடதுசாரி ஆதரவு நிலைப்பாட்டாளராகவும் இருந்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்கா கடந்த 03.06.2014 அன்று தனது 98ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவரது இழப்பு இலங்கையின் ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுக்கும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கும் துக்கம் தரும் இழப்பாகும்.

பாராளுமன்றத்திற்கு 1956ல் தெரிவுசெய்யப்பட்ட எஸ்.டி.பண்டாரநாயக்கா தனது அரசியல் நிலைப்பாட்டில் தொடர்ச்சியான ஜனநாயக முற்போக்கு வாதியாகவும், இடதுசாரி ஆதரவாளராகவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் துணிவான செயற்பாட்டாளராக இருந்து வந்தவர். 1957ல் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதைப் பிரிவினை எனக்கூறி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் ஜக்கிய தேசியக் கட்சியினர் இனவாத கண்டி யாத்திரையை ஆரம்பித்தனர். மேற்படி யாத்திரையை கம்பஹா தொகுதியின் கொழும்பு கண்டி வீதியின் இம்புல்கொட எனும் இடத்தில் மக்களை அணிதிரட்டி தானே வீதிக்கு குறுக்கே படுத்து தடுத்து நிறுத்தி, அதனை திரும்பிப்போக வைத்தவர் எஸ்.டி ஆவார்

அதேபோன்று வடபுலத்தின் அறுபதுகளின் நடுப்பகுதியில் இடம்பெற்ற சாதிய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களின் போது அவற்றிற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன், வடபுலம் சென்று போராடிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நின்றவர். அக்காலகட்டத்தில் பாராளுமன்ற விவாதத்தின் போது “பாராளுமன்றம் கள்வர் குகை” என்ற லெனினின் கூற்றை எடுத்துக்கூறி இலங்கைப் பாராளுமன்றமும் கள்வர் குகையே எனக்கூறியவர். அதனால் பாராளுமன்றத்தில் இருந்து பலவந்தமாக வெளியே தூக்கி விடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்றத்திற்கு வராது தடைவிதிக்கப்பட்டது.

எப்பொழுதும் மக்கள் சார்பாகவும், அவர்களது நீதியான போராட்டங்களை ஆதரித்து நின்றவர். அதனால் 1971ல் அரசியல் கைதியாக இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைவைக்கப்பட்டவர். தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக உறுதியான குரல் கொடுத்தும் வந்தவர். தொழிலாளாகள் விவசாயிகள் மலையகத் தொழிலாhளர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக வாதாடி வந்தவ்ர். மேற்படி அவரது அரசியல் நிலைப்பாட்டின் மூலம் எமது கட்சியுடன் நீண்டகால நண்பராகவும் இருந்து வந்ததுடன், அந்த உறவினைப் பேணி வந்தவர். இனவாதமும், மதவெறியும் தென்னிலங்கையில் தலைவிரித்து நிற்கும் இன்றைய சூழலில் எஸ்.டி.பண்டாரநாயக்காவின் இழப்பு மக்களுக்கும் எமது கட்சிக்கும் துக்கம் தரும் இழப்பாகும். அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தவர்களுக்கும் கம்பஹா தொகுதி மக்களுக்கும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆழ்ந்த அனுதாபத்தையும். துக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

சி.கா.செந்திவேல்

பொதுச்செயலாளர்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

06.06.2014